டேவிட் மில்லரின் வாண வேடிக்கையுடன் 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில், இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களால் வெற்றி பெற்று 2 – 0 கணக்கில் தொடரில் முன்னியிலை வகிக்கிறது.
டர்பன், கிங்க்ஸ்மீட்டில் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இப்போட்டிக்காக இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கடந்த போட்டியில் அறிமுகமாகிய சந்துன் வீரக்கொடி மற்றும் சுழல் பந்து வீச்சாளார் ஜெப்ரி வண்டர்சேக்கு பதிலாக சகல துறை ஆட்டக்காரர்களான சசித் பத்திரண மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
அதே நேரம், தென்னாபிரிக்க அணி, கடந்த போட்டியில் வெற்றியீட்டிய அதே அணியுடன் களமிறங்கியது.
அந்த வகையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, முதல் விக்கெட்டாக ஹஷிம் அம்லாவை 19 ஓட்டங்களுக்குள் இழந்திருந்தாலும், அதனை தொடர்ந்து களமிறங்கிய டு ப்லெஸ்சிஸ் குவிண்டன் டி கொக்குடன் இணைந்து அபாரமாக துடுப்பாடி இரண்டாவது விக்கெட்டுக்காக 46 ஓட்டங்களை பெற்று அணியை வலுப்படுத்தினர். குவிண்டன் டி கொக் 17 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனஞ்சய டி சில்வாவின் பந்து வீச்சில் சுரங்க லக்மாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் டுமினி குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றாலும், டு ப்லெஸ்சிசுடன் இணைந்து கொண்ட டேவிட் மில்லர் ஐந்தாவது விக்கெட்டுக்காக 117 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று தென்னாபிரிக்க அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். டு ப்லெஸ்சிஸ் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உள்ளடங்கலாக 105 ஓட்டங்களையும், போட்டியின் இறுதி நேரத்தில் வாணவேடிக்கை காட்டிய டேவிட் மில்லர் மூன்று பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதியில் தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சிறப்பாக பந்து வீசிய சுரங்க லக்மால் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி உபுல் தரங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல முதல் விக்கெட்டுக்காக 45 ஓட்டங்களை பெற்றுகொடுத்தாலும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றதால் இலங்கை அணி 37.5 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
கடந்த போட்டியில் அரை சதம் தாண்டிய குசல் மென்டிஸ் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதே நேரம் கூடிய ஓட்டங்களாக தினேஷ் சந்திமால் 36 ஓட்டங்களை பதிவு செய்தார். சிறப்பாக பந்து வீசிய வெய்ன் பார்னெல், ஜேபி டுமினி மற்றும் இம்ரான் தஹிர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக டு ப்லெஸ்சிஸ் தெரிவு செய்யப்பட்டார்
இம்ரான் தஹிரின் தடையை இலங்கை அணி எவ்வாறு தாண்டும்?
5 ஒருநாள் போட்டிகளை கொண்ட இந்த தொடரின் மூன்றாவது போட்டி பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க், நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம் :
தென்னாபிரிக்கா: 307/6(50) – டு ப்லெஸ்சிஸ் 105, டேவிட் மில்லர் 117*, கிறிஸ் மொரிஸ் 26, குவிண்டன் டி கொக் 17, ஹஷிம் அம்லா 15, ஏபி டி வில்லியர்ஸ் 3, ஜேபி டுமினி 11, வெய்ன் பார்னெல் 2*, சுரங்க லக்மால் 54 /2
இலங்கை: 186(37.5) – நிரோஷன் திக்வெல்ல 25, உபுல் தரங்க 26, குசல் மெண்டிஸ் 20, தினேஷ் சந்திமால் 36, தனஞ்சய டி சில்வா 1, அசேல குணரத்ன 18, சதுரங்க டி சில்வா 14, சசித் பத்திரண 26, இம்ரான் தஹிர் 26/2, வெய்ன் பார்னெல் 34/2, ஜேபி டுமினி 30/2
போட்டி முடிவு : தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களால் வெற்றி