தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டி நேற்று தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் தென்னாபிரிக்க அணி 146 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். அவுஸ்திரேலிய அணியின் புதுமுக பந்து வீச்சாளர்களான மென்னி, ட்ரமெயின் ஆகியோர் ஆரம்ப பந்து வீச்சாளர்களாக களமிறங்கினர். தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக குயின்டன் டி கொக், ரோஸோவ் ஆகியோர் களமிறங்கினர். கடைசிப் போட்டியில் அசத்திய குயின்டன் டி கொக் 22 ஓட்டங்களுடன் ஏமாற்றி வெளியேற, அவருடன் களமிறங்கிய ரோஸோவ் 10 பவுண்டரிகள் உள்ளடங்களாக 81 பந்துகளில் 75 ஓட்டங்களை பெற்றார்.
அணிக்கு சிறப்பான ஆரம்பம் ஒன்று இருந்ததான் காரணமாக தென்னாபிரிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கையில் சரிவு எதுவும் ஏற்படாதிருந்தது. இந்த நிலையில் ரோசோவ் இன் ஆட்டமிழப்பிற்கு பின்னர் களத்திற்கு வந்த தென்னாபிரிக்க அணித் தலைவர் டு பிளேசிஸ் நிதானம் கலந்த ஒரு வித அதிரடியுடன் 93 பந்துகளிற்கு முகம்கொடுத்து 13 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்களைப் பெற்றார். இது அவர் ஒரு நாள் போட்டியில் பெற்ற 6 ஆவது சதமாகும். இவரின் ஓட்ட உதவியுடன் டுமினியின் அதிரடியும் கைகொடுக்க தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 361 ஓட்டங்களை பெற்று தனது முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.
பந்து வீச்சில் அவுஸ்திரேலியா வீரர்கள் பெரிதாக பிரகாசிக்காத போதும், ஹேஸ்டிங் 10 ஓவர்களை வீசி 57 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், மார்ஸ் 68 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும், புதுமுக வீரர் ட்ரமெயின் 78 ஓட்டங்களிற்கு 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து பெரியதொரு வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை அவுஸ்திரேலிய அணி ஆரம்பித்தது. ஆரம்பம் முதலே தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்கள் நெருக்கடியினை கொடுக்க, அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட் இரண்டாவது ஓவரில் வீழ்ந்தது. ராபடா வீசிய பந்தில் பின்ச் பிடியெடுப்பு மூலம் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றிருந்த வேளையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இவருடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய வீரரான டேவிட் வோர்னர் மற்றும் நடுவரிசை வீரர் டி ஹெட் ஆகியோர் அரைச்சதத்தை பெற்று விளையாடிய போதும், தென்னாபிரிக்க அணியின் சவால் கொடுக்கும் பந்து வீச்சு காரணமாக அவுஸ்திரேலிய அணியின் ஏனைய வீரர்கள் பெரிதாக பிரகாசிக்காததால், அவுஸ்த்திரேலிய அணி 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 219 ஓட்டங்களையே பெற்றது. இதனால் தென்னாபிரிக்க அணி 146 ஓட்டங்கள் மூலம் அபார வெற்றியினை தன்வசமாக்கி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆரம்பம் முதலே தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்த காரணத்தினால் பந்து வீசிய அனைவரும் விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதில் வெய்ன் பர்னல் 3 விக்கெட்டுக்களையும், ரபடா 2 விக்கெட்டுக்களையும், பெஹ்லுக்வேயோ 2 விக்கெட்டுக்களையும், டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாஹிர், டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்ட நாயகன் விருது சதம் பெற்ற தென்னாபிரிக்க அணித் தலைவர் டு பிளேசிஸ் கைவசமாகியது.
ஸ்கோர் சுருக்கம்
தென்னாபிரிக்கா : 361/6, (50) – டு பிளேசிஸ் 111, டுமினி 82, ரோஸோவ் 75, ஹேஸ்டிங் 57/-3, மார்ஸ் 68/2, ட்ரமெயின் 78/1
அவுஸ்திரேலியா – 219 , (37.4) – டி. ஹெட் 51, டேவிட் வோர்னர் 50, வெய்ன் பர்னல் 40/3, ரபடா 31-2, பெஹ்லுக்வேயோ 59-2
இரண்டு அணிகளும் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி ஓக்டோபர் 5 ஆம் திகதி செஞ்சூரியன் நகரில் இடம்பெறவுள்ளது.
தொடர்: தென்னாபிரிக்கா 2 – 0 அவுஸ்திரேலியா