இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய பணிகளை பொறுப்புடன் செயற்படுத்தும் பட்சத்தில் மாத்திரமே சாதகமான முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அணித்தலைவர் தசுன் ஷானக தெரிவித்தார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, தொடரை 3-0 என இழந்தது. இவ்வாறான நிலையில், போட்டியை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே, ஷானக இதனை குறிப்பிட்டுள்ளார்.
T20 தொடரில் இலங்கையினை வைட்வொஷ் செய்த தென்னாபிரிக்கா
தசுன் ஷானகவை பொருத்தவரையில், வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடியவர். எனினும், ஆரம்பத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இழக்கப்பட்டதால், தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக பிரகாசிப்பை வெளிப்படுத்த முடியவில்லை எனவும்கு குறிப்பிட்டுள்ளார்.
“T20I போட்டிகளை பொருத்தவரை, 12வது ஓவரிலிருந்து 20வது ஓவர்வரை துடுப்பெடுத்தாடுவதற்ககான பணி எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது போட்டியில் அந்த வாய்ப்பு இருந்தது. எனினும், சிறந்த பந்து ஒன்றுக்கு ஆட்டமிழந்தேன்.
நான் மாத்திரமல்ல. ஒவ்வொரு துடுப்பாட்ட வீரருக்கும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்தால், மாத்திரமே அவர்களுடைய பணிகளை சரியாக செய்யமுடியும். முதல் ஆறு ஓவர்கள், அடுத்து 10 ஓவர்கள் மற்றும் 10 ஓவர்களிலிருந்து 15 ஓவர்கள் என அணிக்காக திட்டங்கள் உள்ளன.
ஆனால், இந்த திட்டங்கள் சரியாக செயற்படுத்தப்படவில்லை. எனினும், இந்த தவறுகளை திருத்திக்கொள்வதற்கு முடியாமல் இல்லை. அதற்கான சரியான வீரர்களும் எம்மிடம் உள்ளனர். எனவே, உலகக்கிண்ணத்துக்கு செல்வதற்கு முதல், இந்த தவறுகளை திருத்திக்கொள்வது அவசியமாகும்” என குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த தொடரில் அமைக்கப்பட்ட ஆடுகளம் பந்துவீச்சுக்கு அதிகமாக சாதகத்தன்மையை கொண்டிருந்தமையால், ஓட்டங்களை பெறுவதற்கு கடினமான இருந்ததாகவும் தசுன் ஷானக குறிப்பிட்டார்.
“குறிப்பாக, துடுப்பாட்ட வரிசையில் சிறப்பாக செயற்படக்கூடிய வீரர்கள் உள்ளனர். அணியில் உள்ள குசல் பெரேரா, பானுக ராஜபக்ஷ, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் ஏனைய வீரர்கள் என ஒவ்வொருவரதும் திறமை எமக்கு தெரியும். ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.
துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை குவிப்பதில் கடினமாக உணர்ந்தனர். ஓட்டங்களை குவிக்க தடுமாறும் விடயம் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்றது. நாம், T20I போட்டிகளில் 180 ஓட்டங்களை பெற்று, நீண்ட நாட்களாகிவிட்டது. எனவே, இந்த தொடரை, சிறந்த ஆடுகளம் ஒன்றில் விளையாடியிருந்தால், இதனைவிட நல்ல விடயங்களை செய்திருக்க முடியும் என நம்புகிறேன்”
இதேவேளை, இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அதிகமாக பௌண்டரிகளை பெறுவதற்கு முயற்சிப்பதாக தோன்றியது. ஒவ்வொரு பந்துகளுக்கும் ஒவ்வொரு ஓட்டத்தை பெறுவதற்கான முயற்சிகளை வீரர்கள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருந்தது.
“ஒவ்வொரு ஓட்டங்களை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கவில்லை. தென்னாபிரிக்க அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடியது. மைதானத்தில் மழை மற்றும் ஈரப்பதன் இருந்ததால், எமது பந்துவீச்சாளர்களுக்கு இலகுவாக பந்துவீசமுடியவில்லை. T20I போட்டியாக இருந்தாலும், சிறந்த பந்துக்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும். இலகுவான ஆட்டமிழப்புகளை எதிரணிக்கு வழங்கியதன் காரணமாகவே, எம்மால், ஒவ்வொரு ஓட்டங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை” என தசுன் ஷானக சுட்டிக்காட்டினார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20I தொடரை இலங்கை அணி 3-0 என இழந்துள்ளது. சொந்த மண்ணில் 3-0 என T20I தொடரை இலங்கை அணி இழந்தமை இதுவே முதற்தடவையாகும். குறித்த இந்த தொடரினை அடுத்து, இலங்கை அணி அடுத்த மாதம், ஓமான் அணிக்கு எதிரான இரண்டு T20 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<