இலங்கை அணிக்காக விளையாட கிடைக்கும் ஒவ்வொரு போட்டியிலும், தன்னுடைய 100 சதவீதத்தை கொடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் T20I போட்டிக்கு பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை தெரிவித்தார்.
துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கைக்கு முதல் T20யில் தோல்வி
நேற்றைய போட்டியில், விளையாடிய வனிந்து ஹஸரங்க, சிறப்பாக பந்துவீசி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன், தற்போதைய T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார்.
“நான் 2019ம் ஆண்டு இறுதியில் T20I போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். தற்போது, இரண்டு வருடங்களில் ஐசிசி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளேன். நான் எப்போதும், இலங்கை அணிக்காக வாய்ப்பு கிடைக்கும் போது, என்னுடைய 100 சதவீதத்தை கொடுக்க எதிர்பார்க்கிறேன்.
அத்துடன், அணியென்ற ரீதியிலும், தனிப்பட்ட ரீதியிலும் பந்துவீச்சாளராக சிறந்த பிரகாசிப்பினை வெளிப்படுத்தவேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது”
அத்துடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கான காரணத்தையும் வனிந்து ஹஸரங்க குறிப்பிட்டார்.
“நாம் நினைத்த அளவில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாகவில்லை. அத்துடன், அனுபவ வீரர்கள் என்ற ரீதியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் இருந்து, தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்பட்டனர்.
நாம் துடுப்பெடுத்தாடும் போது, முதல் ஆறு ஓவர்களில், அதிகமான ஓட்டமற்ற பந்துகளை ஆடியிருந்தோம். 164 என்ற வெற்றியிலக்கை எம்மால் பெற்றிருக்க முடியும். எனினும், ஆரம்பத்தில் அதிக ஓட்டமற்ற பந்துகளை ஆடியதன் காரணமாக, போட்டி எமது கையைவிட்டு நழுவியது” என்றார்.
இலங்கை அணியின் சகலதுறை வீரராக இருக்கும் வனிந்து ஹஸரங்க, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் தற்போது, நடைபெற்று முடிந்திருக்கும் முதல் T20I போட்டி என துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிவருகின்றார். எனவே, தன்னுடைய துடுப்பாட்டம் தொடர்பிலும் வனிந்து ஹஸரங்க கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.
“ஒருநாள் தொடர் மற்றும் இந்த T20I போட்டி என, நான்கு போட்டிகளிலும் துடுப்பாட்ட வீரர் என்ற ரீதியில் நான் தவறு செய்துள்ளேன். எனவே, அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க எதிர்பார்க்கிறேன்.
நான் இந்த T20I போட்டியில் துடுப்பெடுத்தாட செல்லும் போது, ஓவருக்கு 12 ஓட்டங்கள் பெறவேண்டிய நிலை இருந்தது. அதனை செய்வதற்கு முயற்சித்தேன். எனினும், துரதிஷ்டவசமாக அதனை செய்யமுடியவில்லை. எனவே, அடுத்த இரண்டு போட்டிகளிலும், துடுப்பாட்ட வீரர் என்ற ரீதியில் அணிக்கு தேவையான விடயத்தை செய்ய எதிர்பார்க்கிறேன்” என சுட்டிக்காட்டினார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டி, நாளைய தினம் (12) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<