சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்துள்ளது.
மேலும், இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது தடவையாக இன்னிங்ஸ் வெற்றியினை பதிவு செய்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க அணியினையும் 3-0 என டெஸ்ட் தொடரில் வைட்வொஷ் செய்திருக்கின்றது.
இப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியுடன் தாம் கடைசியாக விளையாடிய இரண்டு டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 240 புள்ளிகளுடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் புள்ளிகள் பட்டியலிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொள்கின்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்
கிரிக்கெட் உலகில் வினோதமான சம்பவங்கள் இடம்பெறுவது வழமை. அந்தவகையில்…
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக அமையும் இந்த டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி ரஞ்சி நகரில் கடந்த சனிக்கிழமை (19) ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக தெரிவு செய்திருந்தார்.
தொடரில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரினை 2-0 எனக் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, அதே உற்சாகத்துடன் போட்டியில் துடுப்பாடியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக களம் வந்த ரோஹித் சர்மா இரட்டைச்சதம் கடந்தார். அதேநேரம், அஜிங்கியா ரஹானே டெஸ்ட் போட்டிகளில் 11ஆவது முறையாக சதம் பெற்றார். இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 116.3 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 497 ஓட்டங்கள் பெற்றவாறு தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரோஹித் சர்மா 6 சிக்ஸர்கள் மற்றும் 28 பௌண்டரிகள் அடங்கலாக 255 பந்துகளில் 212 ஓட்டங்களை குவித்தார். இதேநேரம், அஜிங்கியா ரஹானே 115 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இவர்கள் தவிர ரவிந்தீர ஜடேஜாவும் அரைச்சதம் ஒன்றுடன் 51 ஓட்டங்கள் பெற்று தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய ஒப்பந்தத்தில் இளம் வீரர்கள் புறக்கணிப்பா?
இலங்கை கிரிக்கெட் சபை (SLC), தேசிய கிரிக்கெட் அணிக்காக ஆடும்…
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் அறிமுக சுழல்வீரரான ஜோர்ஜ் லிண்டே 4 விக்கெட்டுக்களை சாய்த்திருக்க, ககிஸோ றபாடா 3 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
தொடர்ந்து தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது. எனினும், தென்னாபிரிக்க அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி தர அவர்கள் 162 ஓட்டங்களுக்கு தமது முதல் இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர்.
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் சுபைய்ர் ஹம்ஷா அவரது கன்னி டெஸ்ட் அரைச்சதத்தோடு 62 ஓட்டங்கள் பெற்றிருக்க ஏனைய அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
மறுமுனையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் வேகப்பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களை சாய்க்க, ரவிந்திர ஜடேஜா, சஹ்பாஷ் நதீம் மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
தொடர்ந்து தென்னாபிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் இரண்டாம் இன்னிங்ஸில் பலோவ் ஒன் முறையில் இந்திய அணியினை விட 335 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் மீண்டும் துடுப்பாடியது.
பின்னர் தென்னாபிரிக்க அணி இராண்டம் இன்னிங்ஸிலும் துடுப்பாட்டத்தில் ஜொலிக்காமல் 133 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது.
வளர்ந்து வருவோருக்கான ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு
பங்களாதேஷில் நடைபெறவுள்ள வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண…
தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் தியோனிஸ் டி பிரைன் 30 ஓட்டங்களுடன் தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் சமி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், உமேஷ் யாதவ் மற்றும் சஹ்பாஷ் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனவும், தொடர் நாயகனாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் சர்மா தெரிவாகியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 497/9d (116.3) ரோஹித் சர்மா 212, அஜிங்கியா ரஹானே 115, ரவிந்திர ஜடேஜா 51, ககிஸோ றபாடா 85/3, ஜோர்ஜ் லின்டே 133/4
தென்னாபிரிக்கா (முதல் இன்னிங்ஸ்) – 162 (56.2) சுபைய்ர் ஹம்ஷா 62, உமேஷ் யாதவ் 40/3, ரவிந்திர ஜடேஜா 19/2, சஹ்பாஷ் நதீம் 22/2
தென்னாபிரிக்கா (இரண்டாம் இன்னிங்ஸ்) (f/o) – 133 (48) தியோனிஸ் டி பிரெய்ன் 30, மொஹமட் சமி 10/3, சஹ்பாஷ் நதீம் 18/2, உமேஷ் யாதவ் 35/2
முடிவு – இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<