நடைபெறவுள்ள T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தென்னாபிரிக்க குழாத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (09) அறிவித்தது.
டெம்பா பவுமா தலைமையிலான அணியில் முன்னாள் தலைவர் பாப் டு பிளெசிஸ், நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் மற்றும் சகலதுறை வீரர் கிறிஸ் மொரிஸ் ஆகிய வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
இங்கிலாந்தின் T20 உலகக் கிண்ண அணி அறிவிப்பு
எதுஎவ்வாறாயினும், குறித்த மூன்று வீரர்களும் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் இரண்டாவது கட்டப் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இலங்கையுடன் தற்போது நடைபெற்று வருகின்ற ஒருநாள் தொடரில் இடம்பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜெனமன் மலானும் தென்னாபிரிக்க அணியில் இடம்பெறவில்லை. இவர் இலங்கையுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இதுவரை T20 அறிமுகத்தைப் பெற்றுக்கொள்ளாத சுழல் பந்துவீச்சாளர் கேஷவ் மஹராஜ் முதல் முறையாக T20 உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்க குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையுடனான ஒருநாள் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட சுழல் பந்துவீச்சாளரான ஜோர்ஜ் லிண்டே T20 உலகக் கிண்ணத்துக்கான மேலதிக வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணி தனது ஆரம்பப் போட்டியில் அவுஸ்திரேலியாவை ஒக்டோபர் 23ஆம் திகதி எதிர்த்தாடவள்ளது
ஐசிசி இன் 7ஆவது T20 உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 4ஆம் திகதி வரை ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.
தென்னாபிரிக்க குழாம்
டெம்பா பாவுமா (தலைவர்), கேசவ் மஹாராஜ், குயின்டன் டி கொக், பிஜோர்ன் போர்டுயின், ரீஷா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிலாசன், எய்டன் மர்க்ரம், டேவிட் மில்லர், தப்ரைஸ் ஷம்ஸி, விலான் முல்டர், லுங்கி என்கிடி, அன்ரிச் நோகியா, ட்வைன் பிரிட்டோரியஸ், காகிஸோ ரபாடா, ரஸ்ஸி வான் வென்டர் டஸன்
மேலதிக வீரர்கள்: எண்டைல் பெஹெலுக்வாயோ, பெஹ்லுக்வயோ, ஜோர்ஜ் லிண்டே, லிசாட் வில்லியம்ஸ்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<