தென் ஆபிரிக்க கிரிக்கட் சபை அவர்களது அணியைச் சேர்ந்த ஜீன் சயம்ஸ், தாமி சொலகில், எதி பலத்தி மற்றும் புமேலெலா மட்சிக்வே ஆகிய வீரர்களை மெட்ச் பிக்சிங்கில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் கிரிக்கட் போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது.
தென் ஆபிரிக்க கிரிக்கட் சபையால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின் படி முன்னாள் தேசிய விக்கட் காப்பாளர் தாமி சொலகி 12 வருடங்கள் கிரிக்கட் விளையாடத் தடை செய்யப்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ராம் ஸ்லாம் டி20 போட்டிகளின் போது ஏற்பட்ட சம்பவம் மற்றும் சில சம்பவங்கள் காரணமாகவே இவர் கிரிக்கட் விளையாடத் தடை செய்யப்பட்டுள்ளார்.
டைடன்ஸ் அணிக்கு விளையாடிய எதி பலத்தி மற்றும் லயன்ஸ் அணிக்கு விளையாடிய புமேலெலா மட்சிக்வே ஆகிய வீரர்கள் 10 வருடங்கள் கிரிக்கட் விளையாடத் தடை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ராம் ஸ்லாம் டி20 போட்டிகளின் போது ஏற்பட்ட நிகழ்வுகள் காரணமாகவே 10 வருடங்கள் கிரிக்கட் விளையாடத் தடை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை சகலதுறை வீரரான லயன்ஸ் அணிக்கு பிரதிநித்துவப்படுத்தி விளையாடிய ஜீன் சயம்ஸ் 07 வருடங்கள் கிரிக்கட் விளையாடத் தடை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நான்கு வீரர்களும் தமக்கு கிரிக்கட் போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்டுள்ள தடையை ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்களது இந்த தடை ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.