தென்னாபிரிக்க T-20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்

1906
Viraj Anurudda Kothalawala @ThePapare.com

தென்னாபிரிக்காவில்  முதற்தடவையாக நடைபெறவுள்ள குளோபல் டி20 லீக்கில் ஸ்டெலன்போஸ்ச் மொனாச் அணியின் வெளிநாட்டு நட்சத்திர வீரராக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற ஐ.பி.எல் டி20 லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் பிரபல்யமடையத் தொடங்கியது முதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது டி20 லீக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றது. இந்த பட்டியலில் தற்போது தென்னாபிரிக்காவும் இணைந்துகொள்ளவுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற குளோபல் டி20 லீக் என்ற பெயரில் முதலாவது டி20 லீக் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவின் 8 முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில் ப்ளூம் சிட்டி பிளேஸர்ஸ், கேப் டவுண் நைட்ரைடர்ஸ், ப்ரிடோரியா மெவ்ரிக், ஸ்டெலன்போஸ்ச் மொனாச், பெனோனி சல்மி, டர்பன் க்ளெண்டர்ஸ், ஜொஹெனர்ஸ்பேர்க் ஜியன்ட்ஸ், நெல்சன் மண்டேலா பேய் ஸ்டார்ஸ் ஆகிய 8 அணிகள் பங்குபற்றவுள்ளன.

இதன்படி, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கான ஏலம் கேப்டவுனில் இடம்பெற்றதுடன், இதன் முதல் சுற்றில் ஒவ்வொரு அணிகளுக்கும் உள்ளூர் மற்றம் வெளிநாட்டு வீரரொருவரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில் தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் தலைவராக செயற்படவுள்ள ப்ளூம் சிட்டி பிளேஸர்ஸ் அணிக்காக முதல் வெளிநாட்டு நட்சத்திர வீரராக மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை ஆட்டக்காரரான கிரான் பொல்லார்ட் தெரிவானார்.

அதனைத்தொடர்ந்து அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்லை கேப் டவுண் நைட்ரைடர்ஸ் அணிக்காகவும், டுவெய்ன் பிராவோவை ப்ரிடோரியா மெவ்ரிக் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்தனர். இவ்விரண்டு அணிகளின் தலைவர்களாக ஜே.பி டுமினியும், ஏ பி டிவில்லியர்ஸும் செயற்படவுள்ளனர்.

இந்நிலையில் தென்னாபிரிக்க அணியின் தலைவர் பாப் டூ பிளெசிஸ் தலைவராகச் செயற்படவுள்ள ஸ்டெலன்போஸ்ச் மொனாச் அணியின் வெளிநாட்டு நட்சத்திர வீரராக இலங்கை அணியின் லசித் மாலிங்கவும், குயின்டன் டி கொக் தலைமையிலான பெனோனி சல்மி அணியின் வெளிநாட்டு வீரராக இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோயும், ஹஷிம் அம்லா தலைமையிலான டர்பன் க்ளெண்டர்ஸ் அணியின் வெளிநாட்டு வீரராக இங்கிலாந்து வீரர் இயென் மோர்கனும், ககீசோ ரபாடா தலைவராகச் செயற்படவுள்ள ஜொஹெனர்ஸ்பேர்க் ஜியன்ட்ஸ் அணியின் வெளிநாட்டு வீரராக நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டம் மெக்கலமும், இம்ரான் தாஹிர் தலைமையிலான நெல்சன் மண்டேலா பேய் ஸ்டார்ஸ் அணியின் வெளிநாட்டு வீரராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை வீரர்களுக்கான 2ஆம் சுற்று ஏலம் நடைபெற்றது. இதில் 32 வெளிநாட்டு வீரர்களும், 96 உள்ளூர் வீரர்களும் இடம்பெற்றிருந்ததுடன், 16 சுற்றுக்களாக நடைபெற்ற இந்த ஏலத்தில் 16 வீரர்களைக் தெரிவு செய்யும் வாய்ப்பு அணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

மாலிங்கவின் ஆட்டம் குறித்து நிக் போத்தாஸ் மற்றும் கோஹ்லி ஆகியோரின் கருத்து

அண்மைய காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருக்கும் நட்சத்திர பந்து..

Viraj Anurudda Kothalawala

இதன்படி முதற்தடவையாக இடம்பெற்ற இந்த ஏலத்தில் இலங்கை சார்பாக 11 வீரர்கள் போட்டியிட்டனர். தில்ஷான் முனவீர, தனஞ்சய டி சில்வா, அஞ்செலோ பெரேரா, லஹிரு திரிமான்ன, ஷெஹான் ஜயசூரிய, ஜீவன் மெண்டிஸ், ரமித் ரம்புக்வெல்ல, துஷ்மந்த சமீர, தம்மிக பிரசாத், சுராஜ் ரன்தீவ் மற்றும் சச்சித்ர சேனநாயக்க ஆகிய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். எனினும், லசித் மாலிங்க இடம்பெற்றுள்ள ஸ்டெலன்போஸ்ச் மொனாச் அணிக்கு இலங்கை அணியின் மற்றுமொரு சகலதுறை ஆட்டக்காரரான ஜீவன் மெண்டிஸ் மாத்திரம் தெரிவு செய்யப்பட வேறெந்த வீரர்களையும் வாங்குவதற்கு அணி உரிமையாளர்கள் முன்வரவில்லை.

இதேவேளை, இந்த ஏலத்தில் பாகிஸ்தான் அணியிலிருந்து 23 வீரர்கள் இடம்பெற்றிருந்ததுடன், இவர்களிலிருந்து 9 வீரர்கள் 5 அணிகளுக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் பிரீமியர் லீக் டி20 தொடரில் அங்கம் வகிக்கின்ற பெஷாவர் சல்மி மற்றும் லாஹுர் க்ளெண்டர்ஸ் அணிகளின் சார்பாக தென்னாபிரிக்கா டி20 போட்டித் தொடரிலும் இடம்பெற்றுள்ள பெனோனி சல்மி அணிக்காக வஹாப் ரியாஸ், உமர் அக்மல் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டதுடன், டர்பன் க்ளெண்டர்ஸ் அணிக்காக மொஹமட் ஹபீஸ் மற்றும் பகர் சமான் ஆகிய வீரர்கள்  ஒப்பந்தமாகினர். இந்நிலையில் யாசிர் ஷாஹ் ஜொஹெனர்ஸ்பேர்க் ஜியன்ட்ஸ் அணிக்காகவும், இமாத் வசீம் ஸ்டெலன்போஸ்ச் மொனாச் அணிக்காகவும், அன்வர் அலி, ஜுனைத் கான் ஆகியோர் நெல்சன் மண்டேலா பேய் ஸ்டார்ஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

10 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 வீரர்கள் கலந்துகொண்ட தென்னாபிரிக்க டி20 லீக்கின் முதல் ஏலத்தில் இங்கிலாந்திலிருந்து 11 வீரர்களும், பாகிஸ்தானிலிருந்து 9 வீரர்களும், மேற்கிந்திய தீவுகளிலிருந்து 5 வீரர்களும், இலங்கை, நெதர்லாந்து, நியூசிலாந்திலிருந்து தலா 2 வீரர்களும், சிம்பாப்வேயிலிருந்து ஒரு வீரரும் தெரிவு செய்யப்பட்டனர். எனினும் அதே காலப்பகுதியில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடர் நடைபெறவுள்ளதால் அவ்வணியின் எந்தவொரு வீரரும் இத்தொடரில் இடம்பெறவில்லை.

சுமார் 6 வாரங்களுக்கு நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி கேப்டவுன் நிவ்லண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் கேப் டவுண் நைட்ரைடர்ஸ் மற்றும் ப்ரிடோரியா மெவ்ரிக் ஆகிய அணிகள் போட்டியிடவுள்ளன.

அணிகள் உள்நாட்டு நட்சத்திர வீரர் வெளிநாட்டு நட்சத்திர வீரர்
ஸ்டெலன்போஸ்ச் மொனாச் பாப் டூ பிளெசிஸ் லசித் மாலிங்க
கேப் டவுண் நைட்ரைடர்ஸ் ஜே.பி டுமினி   கிறிஸ் கெய்ல்
ப்ரிடோரியா மெவ்ரிக் ஏ பி டிவில்லியர்ஸ் டுவெய்ன் பிராவோ
பெனோனி சல்மி குயின்டன் டி கொக்   ஜேசன் ரோய்
டர்பன் க்ளெண்டர்ஸ் ஹசீம் அம்லா இயென் மோர்கன்
ஜொஹெனர்ஸ்பேர்க் ஜியன்ட்ஸ் கங்கீசோ ரபாடா பிரெண்டம் மெக்கலம்,
நெல்சன் மண்டேலா பேய் ஸ்டார்ஸ் இம்ரான் தாஹிர் கெவின் பீட்டர்சன்
ப்ளூம் சிட்டி பிளேஸர்ஸ் டேவிட் மில்லர் கிரன் பொல்லார்ட்