சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று (21) ஜொஹனஸ்பேர்க்கில் நடைபெற்ற முதலாவது டி20 சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தாமதமாகிய காரணத்தினால் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.
இருதரப்பு தொடருக்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்களில் பங்கேற்கவுள்ளது. குறித்த இருதரப்பு தொடரின் முதல் தொடரான டி20 சர்வதேச தொடர் நேற்று (21) ஆரம்பமானது.
ஹெட்ரிக் விக்கெட் சாதனையுடன் அபார வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையில்……
அந்தவகையில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 சர்வதேச போட்டியில் அஸ்டன் அகாரின் ஹெட்ரிக் சாதனையுடன் வீழ்த்தப்பட்ட 5 விக்கெட்டுக்களுடன் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் தென்னாபிரிக்க அணியை படுதோல்வியடைய செய்தது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குயின்டன் டி கொக் தலைமையிலான தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீசியது. இதன் போது தென்னாபிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய விதிமுறையை மீறியதன் காரணமாக அவ்வணி மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டி20 சர்வதேச போட்டி என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களையும் வீசுவதற்கு ஒரு அணிக்கு குறிப்பிட்டளவு நேரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்குள் நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணியினரின் அதிரடி துடுப்பாட்டம் காரணமாக தடுமாற்றத்திற்குள்ளான தென்னாபிரிக்க அணி குறித்த நேரத்திற்குள் ஒரு ஓவர் குறைவாக வீசியிருந்தது.
ஐ.சி.சி இனுடைய இலக்கம் 2.22 சரத்தில் குறிப்பிடும் அணித் தலைவர்கள், வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி இவர்களுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் போட்டியில் விளையாடிய அணித்தலைவர் உள்ளிட்ட ஏனைய 10 வீரர்களுக்கும் ஒரு ஓவருக்கு வீரரின் போட்டி ஊதியத்தில் 20 சதவீத அபராதம் என்ற அடிப்படையில் 11 வீரர்களுக்கும் தலா 20 சதவீத அபராத தொகை தண்டணையாக விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டினை போட்டியின் களநடுவர்களான அல்லஹூடீன் பலேகர், அட்ரியன் ஹோல்ட்ஸ்டொக், மூன்றாம் நடுவர் பொங்கனி ஜிலே மற்றும் நான்காம் நடுவர் பிரட் வைட் ஆகியோர் உறுதிப்படுத்த, போட்டியின் மத்தியஸ்தரான அண்டி பைக்ரொப்ட் மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வனிந்து ஹசரங்கவின் அபாரத்தால் இலங்கைக்கு த்ரில் வெற்றி
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும்……
மேலும் போட்டி முடிவடைந்ததன் பின்னர் தென்னாபிரிக்க அணித்தலைவவர் குயின்டன் டி கொக் குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதற்கும் அவர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.
சுற்றுலா அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி நாளை (23) போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<