இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் முதல் மூன்று போட்டிகளுக்குமான 14 பேர் கொண்ட குழாம் இன்று (24) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு இன்னும் 95 நாட்கள் மாத்திரம் எஞ்சியுள்ள நிலையில் இரு தரப்பு தொடர்கள் மூலம் ஒவ்வொரு அணிகளும் உலகக்கிண்ண போட்டிகளுக்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றன.
தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்குபெறும் 17 வீரர்கள் அடங்கிய இலங்கை கிரிக்கெட் குழாம்…
அந்த வகையில் இலங்கை அணி தென்னாபிரிக்க நாட்டுக்கு நீண்டநாள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு தென்னாபிரிக்க அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடிவருகின்றது. சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று (23) நிறைவுக்கு வந்துள்ள நிலையில் அதை இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் சுற்றுப்பயணத்தின் அடுத்த தொடரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் குறித்த ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் குழாம் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (24) தென்னாபிரிக்க அணியினுடைய முதல் மூன்று போட்டிகளுக்குமான குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க அணி டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்துள்ள நிலையில் ஒருநாள் தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வெளியிட்டுள்ள முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்குமான குழாமில் பல மாற்றங்களை செய்துள்ளது.
ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் 13 ஆவது இடத்தில் காணப்படும் தென்னாபிரிக்க அணியின் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதேவேளை விக்கெட் காப்பாளரான ஹென்ரிச் கிலாஸனும் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் வேகப்பந்துவீச்சாளரான டேன் பெட்டர்சனும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலிய அணியுடனான தொடரின் போது முழங்கால் உபாதைக்குள்ளாகி பாகிஸ்தான் அணியுடனான தொடரில் இருந்து முழுமையாக விலகியிருந்த 22 வயதுடைய இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி ங்கிடி மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற லீக் தொடரான மஷன்ஸி சுப்பர் லீக் தொடரில் பிரகாசித்தவரும், தற்போது தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் மொமென்டம் ஒருநாள் கிண்ண தொடரில் பிரகாசித்துவரும் வேகப்பந்துவீச்சாளரான அன்ரிச் நொர்ட்ஜீ முதன் முறையாக சர்வதேச அரங்கிற்கு அறிமுக வீரராக அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியுடன் இறுதியாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய சகலதுறை வீரர் வியான் முல்டர், மற்றுமொரு சகலதுறை வீரர் அண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், இம்ரான் தாஹிர் மற்றும் தப்ரிஸ் ஷம்ஷி ஆகியோர் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஒருநாள் அணிக்குள் இடம்பெற்றுள்ளனர்.
தொடரை இழந்த தென்னாபிரிக்க அணிக்கு தரவரிசையில் பின்னடைவு
புதிய டெஸ்ட் அணிகளின் தரவரிசையின்படி சொந்த மண்ணில் தொடரை இழந்த தென்னாபிரிக்க அணி…
சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய நடைமுறையிலுள்ள ஒருநாள் அணிகளின் தரவரிசைப்படி தென்னாபிரிக்க அணி 111 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும், இலங்கை அணி 78 புள்ளிகளுடன் எட்டாமிடத்திலும் காணப்படுகின்றன.
அறிவிக்கப்பட்ட முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்குமான தென்னாபிரிக்க குழாம்.
பாப் டு ப்ளெஸிஸ் (அணித்தலைவர்), குயின்டன் டி குக், அண்டில் பெஹ்லுக்வாயோ, ரீஸா ஹென்ட்றிக்ஸ், டேவிட் மில்லர், லுங்கி ங்கிடி, அன்ரிச் நொர்ட்ஜீ, ககிஸோ ரபாடா, வியான் முல்டர், தப்ரிஸ் ஷம்ஷி, டுவைன் பிரிடோரியஸ், டேல் ஸ்டெய்ன், ரைஸ் வென்டர் டைஸன், இம்ரான் தாஹிர்
போட்டி அட்டவணை
03 மார்ச் – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஜொஹனர்ஸ்பேர்க்
06 மார்ச் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – செஞ்சூரியன்
10 மார்ச் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – டேர்பன்
13 மார்ச் – நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி – போர்ட் எலிசபத்
16 மார்ச் – ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டி – கேப்டவுண்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<