ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட தென்னாபிரிக்க குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எய்டன் மர்க்ரம் தென்னாபிரிக்க அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், முதன்முறையாக ஐசிசி தொடரொன்றில் இவர் தலைவராக செயற்படவுள்ளார்.
T20 உலகக் கிண்ணத்திற்கு தயாராக பயிற்சி தொடரில் ஆடும் இலங்கை
மர்க்ரம் தலைமையில் களமிறங்கவுள்ள தென்னாபிரிக்க அணியில், வருடாந்த ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த குயிண்டன் டி கொக் மற்றும் அன்ரிச் நோக்கியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதுமாத்திரமின்றி SAT20 தொடரில் பிரகாசித்திருந்த புதுமுக வீரர்களான ரியான் ரிக்கெல்டன் மற்றும் ஓட்டின் பார்ட்மன் ஆகியோர் தேசிய அணியில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளனர்.
தென்னாபிரிக்க அணியை பொருத்தவரை பலமான துடுப்பாட்ட வரிசையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. குயிண்டன் டி கொக், ரீஷா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் மற்றும் டிரிஷ்டன் ஷ்டப்ஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
வேகப்பந்துவீச்சை பொருத்தவரை காகிஸோ ரபாடா மற்றும் என்ரிச் நோக்கியா ஆகியோர் வழிநடத்தவுள்ளதுடன் மார்கோ ஜென்சன், ஜெரால்ட் கோட்ஷி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை சுழல் பந்துவீச்சாளர்களாக டெப்ரைஷ் சம்ஷி மற்றும் கேஷவ் மஹாராஜ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலதிக வீரர்களாக நன்ரே பர்கர் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்க அணி தங்களுடைய உலகக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை ஜூன் 3ம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க குழாம்
எய்டன் மர்க்ரம் (தலைவர்), ரியான் ரிக்கெல்டன், ஓட்டின் பார்ட்மன், ஜெரால்ட் கோட்ஷி, குயிண்டன் டி கொக், பிஜோன் போர்ச்சுன், ரீஷா ஹென்ரிக்ஸ், மார்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், டேவிட் மில்லர், அன்ரிக் நோக்கியா, காகிஸோ ரபாடா, டெப்ரைஷ் சம்ஷி, டிரிஷ்டன் ஸ்டப்ஷ்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<