தென்னாபிரிக்க அணி, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்குச் சம்மதித்துள்ளது.
நீண்ட இழுபறியின் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 24ஆம் திகதி இந்தப் போட்டி அடிலெய்டில் இடம்பெறவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இந்தப் பருவகாலத்தில், பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இரண்டில் விளையாடுவதற்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முன்மொழிந்திருந்தது. அதிலொன்று பாகிஸ்தானுக்கெதிராகவும் மற்றையது தென்னாபிரிக்காவுக்கெதிராகவும் அமையவிருந்தது.
எனினும், போதிய பயிற்சிகளின்றி, பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்கு, தென்னாபிரிக்க வீரர்கள் பலர் தயக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதனால், இப்போட்டி இடம்பெறுமா என்ற சந்தேகம் நிலவியது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு, இன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், தென்னாபிரிக்க வீரர்களுடன் கவனமாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்த முடிவு எட்டப்பட்டதாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட் தெரிவித்தார்.
இதன்படி, இரு அணிகளுக்குமிடையிலான தொடரின் 3ஆவது போட்டியே இவ்வாறு பகலிரவு டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளதுடன், அந்தப் போட்டிக்கு முன்னதாக, பகலிரவுப் பயிற்சிப் போட்டிகள் இரண்டில் விளையாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆதாரம் – விஸ்டன் இலங்கை
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்