2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தின் முதல் போட்டி நேற்று (05) தொடங்கியிருந்ததோடு இப்போட்டியில் நியூசிலாந்து 09 விக்கெட்டுக்களால் அசத்தல் வெற்றியினைப் பதிவு செய்து தொடரினை வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கின்றது.
மெண்டிஸின் அதிரடி வீண்; இரண்டாவது பயிற்சி ஆட்டத்திலும் இலங்கை தோல்வி
இதேநேரம் இப்போட்டியில் பல முக்கியமான சாதனைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தன. குறிப்பிட்ட சாதனைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்வையிடுவோம்.
உலகக் கிண்ண முதல் போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் அனைத்து வீரர்களும் இரு இலக்க ஓட்டங்களை (Double Digit) ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
இது ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒருநாள் உலகக் கிண்ண வரலாற்றில் (ஆடவர், மகளிர் என) அணியொன்றின் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் இரு இலக்க ஓட்டங்களைப் பெற்ற முதல் சந்தர்ப்பமாக பதிவாகியது.
இதேநேரம் இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டமாக 273 ஓட்டங்களைப் பகிர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவோன் கொன்வேய் ஜோடி நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற இரண்டாவது ஜோடியாக சாதனை செய்தனர். மறுமுனையில் இது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களில் பதியப்பட்ட நான்காவது அதிகூடிய இணைப்பாட்டமாக காணப்பட்டிருந்தது.
டெவோன் கொன்வேய் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் விளையாடும் கன்னி உலகக் கிண்ணத் தொடர் இதுவென்பதால் குறித்த இருவரும், தமது கன்னி ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் அதி கூடிய இணைப்பாட்டத்தினை பகிர்ந்த ஜோடியாக புதிய சாதனையினை நிலை நாட்டியிருந்தனர்.
இப்போட்டியில் ஆட்டமிழக்காது 152 ஓட்டங்கள் குவித்திருந்த டெவோன் கொன்வெய் கன்னி ஒருநாள் உலகக் கிண்ணம் ஒன்றில் தனி வீரராக அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற நான்காவது வீரராக மாறியதோடு, கொன்வேய் உடன் இணைந்து இப்போட்டியில் சதம் விளாசிய ஏனைய வீரரான ரச்சின் ரவீந்திரா 123 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காது, தனது கன்னி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் சதம் பெற்ற மூன்றாவது இள வயது (23 வயது, 321 நாட்கள்) வீரராகவும் புதிய சாதனை நிலை நாட்டியிருந்தார்.
உலகக் கிண்ண போட்டி வர்ணனையாளர்கள் அறிவிப்பு
இவற்றுக்கு மேலதிகமாக டெவோன் கொன்வேய் (32 வயது, 89 நாட்கள்) உலகக் கிண்ணப் போட்டியொன்றில் சதம் விளாசிய அதி கூடிய வயது கொண்ட வீரர்களில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டதோடு, நியூசிலாந்து அணிக்காக அதி குறைந்த இன்னிங்ஸ்களில் (22) 1000 ஓட்டங்களை கடந்த வீரராகவும் புதிய சாதனை நிலை நாட்டியிருந்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<