ஒன்பது சிவப்பு அட்டைகளால் கைவிடப்பட்ட கால்பந்து போட்டி

594

ஒன்பது வீரர்கள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் போட்டியை தொடர முடியாமல் கைவிடப்பட்ட அபூர்வ நிகழ்வொன்று பிரேசில் உள்நாட்டு கால்பந்து போட்டி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இதில் போட்டியை நடத்தும் அணியின் ஐந்து வீரர்கள் வெளியேற்றப்பட்டதால் போட்டி முடிய 11 நிமிடங்கள் இருக்கும்போது ஆட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிரேசிலின் பஹியா மாநில சம்பியன்ஷிப் தொடரின் விடோரியா மற்றும் பாஹியா அணிகளுக்கு இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற போட்டியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி கிண்ண பாடசாலைகள் கால்பந்து போட்டி இம்மாதம் ஆரம்பம்

இலங்கை அணியின் முன்னாள் வீரர் நிசாம் பக்கீர் அலியை… இலங்கை பாடசாலைகள் …

போட்டி ஆரம்பித்து 33ஆவது நிமிடத்தில் விடோரியா அணிக்காக டெனில்சன் கோல் போட்டதோடு, இரண்டாவது பாதியின் நான்காவது நிமிடத்தில் வினிசியஸ் பதில் கோல் போட்டார்.  

இதன்போது அவர் கோபமூட்டும் வகையில் விடோரியா ஆதரவாளர்கள் முன் ஆட்டம் ஆடினார். இது தனது சொந்த மைதானத்தில் ஆடும் விடோரியா வீரர்களின் கோபத்தை தூண்ட கடைசியில் அது கைகலப்பில் முடிந்தது.

இதன்போது இரு தரப்பும் மாறிமாறி குத்துவிட ஒரே முறையில் ஐந்து வீரர்கள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதில் மூன்று பஹியா அணியினரும் இரண்டு விடோரியா அணியினரும் வெளியேறினர்.  

சில நிமிடங்கள் கழித்து இரு தரப்பும் மீண்டும் கோபத்தை வெளியிட இரு அணியிலும் தலா ஒரு வீரர் என வெளியேற்றப்பட்டார்கள். போட்டி முடிவதற்கு 13 நிமிடங்கள் இருக்கும்போது நான்காவது விடோரியா வீரருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. பிஸ்போ என்ற அந்த வீரர் கோபத்தோடு பந்தை வெளியே உதைக்க போட்டி மத்தியஸ்தர் இரண்டாவது மஞ்சள் அட்டைக்கு பின் சிவப்பு அட்டையை காண்பித்தார்.  

போட்டி 1-1 என்று சமநிலையில் இருந்த போது, பிரூனோ பிஸ்போ, போட்டியில் ஒன்பதாவது வீரராகவும் விடோரியா அணியின் 5 ஆவது வீரராகவும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டார்.  

போட்டியை தொடர்வதற்கு அணி ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஏழு வீரர்கள் தேவைப்படும் நிலையில் விடோரியா அணியில் ஆறு வீரர்களே மைதானத்தில் எஞ்சியிருந்தனர். இதனால் போட்டியை கைவிட மத்தியஸ்தர் தீர்மானித்தார். இவர்கள் தவிர எட்டு வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கையை வந்தடைந்த பிபா வெற்றியாளர் கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான வெற்றிக் கிண்ணத்தினை உலகம் முழுவதும் …

எனினும் பாஹியா அணிக்கு 3-0 என்ற கோல் கணக்கில் போட்டியில் வெற்றியை வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமது அணியின் கோல் காப்பாளரே மோதலுக்கு தூண்டியதாக விடோரியா கழகத்தின் தலைவர் ரிகார்டோ டேவிட் அந்நாட்டு விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார்.

பொதுவாக எவருமே நல்லவர்கள் இல்லை. அனைவருமே குற்றவாளிகள் அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்என்றும் அவர் குறிப்பிட்டார்.    

இந்த சம்பவம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி பிரேசில் விளையாட்டு நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. எவ்வாறாயினும் பிரேசில் கால்பந்து போட்டிகளில் வன்முறை இடம்பெறுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.  

கடந்த வாரம் நடந்த பிரேசிலின் மற்றொரு பிரதான கால்பந்து போட்டி ஒன்றில் எதிரணி போட்ட கோலுக்காக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது பந்து பிடிக்கும் வாலிபர் ஒருவரை வீரர் ஒருவர் கீழே வீழ்த்தி கடுமையாக தாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.