ஆஸியில் சதமடித்து சாதனை படைத்தார் ஸ்மிருதி மந்தனா

286
BCCI Women

அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்திரேலிய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராரா ஓவல் மைதானத்தில் நேற்று (30)) ஆரம்பமாகியது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித்தலைவி மெக் லானிங்,  பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகிய இருவரும்; சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை 93 ஆக இருந்த போது ஷபாலி வர்மா 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுபுறத்தில் ஸ்மிருதி மந்தனா 51 பந்துகளில் அரைச் சதத்தைக் கடந்தார். இந்த அரைசதத்தின் மூலம், 2013க்குப் பிறகு மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில், குறைந்த பந்துகளில் அரைச் சதம் எடுத்தவர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது.

இந்திய அணி 44.1 ஓவர்களில் 132 ஓட்டங்களை எடுத்திருந்த போது, மழையால் போட்டி பாதிக்கபட்டது. இதனால் முதல்நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டது.

இந்திய வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா 80 ஓட்டங்களுடனும், பூனம் ரவுத் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து போட்டியின் இரண்டாவது நாளான இன்றைய தினம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா, 170 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 216 பந்துகளில், 22 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 127 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த சதத்தின் மூலம் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.

மேலும் வெளிநாட்டு மண்ணில் சதமடித்த 5ஆவது இந்திய வீராங்கனை மற்றும் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஓட்டங்களைக் குவித்த வீராங்கனை என்ற பெருமைகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, முதல்நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் ஆட்டமும் மழையின் காரணமாக முன்கூட்டியே நிறைவுக்கு வந்தது.

எனவே, இந்திய மகளிர் அணி தனது முதல் இன்னிங்ஸில் 101.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 276 ஓட்டங்களை எடுத்துள்ளது. தீப்தி சர்மா 12 ஓட்டங்கள், தானியா பாதியா ஓட்டமின்றியும் களத்தில் உள்ளார்கள்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<