பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் தடைக்கு உள்ளான முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், குறித்த விவகாரத்திற்கு அணியின் நிர்வாகிகளே மூல காரணம் என தெரிவித்துள்ளார்.
2018 மார்ச் 20ஆம் திகதி உலக கிரிக்கெட் வரலாற்றில் அனைவரையும் அவுஸ்திரிலேயா அணி மீது திரும்பிப் பார்க்க வைத்த ஒரு நாள்.
தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டத்தின் போது ஆஸி. அணியின் மூன்று வீரர்கள் செய்த செயல் முழு அவுஸ்திரேலிய கிரிக்கெட்டையும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கியிருந்தது.
பந்தை சேதப்படுத்துமாறு கூறியது யார்? ; உண்மையை வெளியிட்ட பென்கிரொப்ட்
குறித்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இம்மூவரும் இணைந்து விக்கெட்டுக்களை கைப்பற்றுவதற்காக பந்தின் தன்மையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டமை மிக உறுதியாக காணொளிகள் மூலமாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்னர் பல சூதாட்டங்கள் அரங்கேறியிருந்தாலும், மைதானத்திலேயே வைத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில், நூற்றுக் கணக்கான வீடியோ கெமராக்களுக்கு மத்தியில் துணிச்சலாக முன்வந்து இவர்கள் மூவரும் செய்த இந்த மோசமான செயலை அவுஸ்திரேலிய கிரிக்கெட் மாத்திரமல்ல, முழு உலக கிரிக்கெட்டும் எதிர்த்திருந்தது.
குற்றத்தை ஏற்றுக் கொண்ட இவர்கள் மூவருக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையானது கிரிக்கெட் விளையாட்டில் பாரிய தண்டனையை வழங்கியது. குறித்த சதித்திட்டத்தை தீட்டிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு ஒரு வருட போட்டித்தடையும், இதற்கு உதவியாக இருந்த கெமரூன் பென்கிராப்ட்டிற்கு 9 மாத கால போட்டித்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இவர்களுடைய இந்த தடையை தொடர்ந்து மூவரும் தாங்கள் செய்த தவறை நினைத்து ஊடகங்களுக்கு மத்தியில் கண்ணீர் விட்டு அழுதமை கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில் கெமரூன் பென்கிராப்டினுடைய 9 மாத போட்டித் தடைக்காலம் நேற்றுடன் (26) நிறைவுக்கு வந்த நிலையில் அவர் குறிந்த பந்து சேதப்படுத்தும் திட்டத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தொடர்பில் புதிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான அடம் கில்கிறிஸ்ட் தனியார் தொலைக்காட்சி ஒன்றினூடான நேர்காணலின் போது பென்கிராப்ட் இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.
”குறித்த விடயத்திற்கு டேவிட் வோர்னர் தான் மிக முக்கிய புள்ளியாக அமைந்திருந்ததாகவும், அவரே எனக்கு இந்த விடயத்திற்கு வழிகாட்டியாகவும் அமைந்திருந்தார்” என்பதையும் பகிரங்கமாக வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஓராண்டு கால தடைக்கு உள்ளாகியிருந்தவர்களில் ஒருவரான முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொக்ஸ் ஸ்போட்ஸ் (Fox sports) எனப்படும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலின் போது அவர் இந்த புதிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் கருத்து தெரிவிக்கையில், ”கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 3-0 எனும் அடிப்படையில் தோல்வி கண்டிருந்தோம். பின்னர் தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்றிருந்தோம். இவ்வாறு தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளை தோற்று வந்த எங்களுக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் எங்களது கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளான ஜேம்ஸ் சதர்லாந்த் மற்றும் பெட் ஹவார்ட் ஆகியோர் எங்களது ஆடை மாற்றும் அறைக்குள் வந்து, என்னிடம் போட்டியில் விளையாடுவதற்காக மாத்திரம் நாங்கள் சம்பளம் வழங்குவதில்லை, வெற்றி பெறுவதற்காக சம்பளம் வழங்குகின்றோம் என ஆவேசமாக கூறினார்.
16 வருட சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி
இவர்களுடைய இந்த கருத்தை கேட்டவுடன் எனக்கு இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கான நடவடிக்கை தான் பந்து சேதப்படுத்திய விவகாரத்திற்கு முன்னனியாக அமைந்திருந்தது” என ஸ்மித் கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் தான் பங்கேற்பதற்கு ஆவலாக உள்ளதாவும், அணித்தலைவர் பதவி எனக்கு தேவையில்லை..! டிம் பெய்ன் தலைமையில் நான் விளையாட உள்ளேன். அத்துடன் ஆரோன் பின்ச் தலைமையில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டியிலும், உலகக்கிண்ண போட்டிகளிலும் விளையாட தயாராக உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.
அத்துடன், அணித்தலைவர்களுக்கு பக்க பலமாக இருந்து அணியின் வெற்றிக்கு வழிவகுக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
எனவே, ஸ்மித்துடைய இந்த கருத்து மூலமாக அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரின் தடைக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க