இலங்கையின் வெற்றிக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கள்

1097
SM stunned as Sri Lanka beats Bangladesh

ஆசியக் கிண்ணம் 2022 T20 தொடரின் குழுநிலை மோதலில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதோடு, தமது குழுவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு அடுத்ததாக சுபர் 4 சுற்றுக்கு தெரிவாகும் அணியாகவும் மாறியிருந்தது.

>> மெண்டிஸ், ஷானக, அசிதவின் அற்புதங்களுடன் திரில் வெற்றிபெற்ற இலங்கை!

வியாழக்கிழமை (01) மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி இறுதி நேரத்தில் 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. இந்தப் போட்டி நடைபெற முன்னர் இரு அணிகளினது வீரர்களும் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்ட நிலையில், இப்போட்டி அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை அணியின் இந்த வெற்றி தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், போட்டி வர்ணனையாளருமான ரசல் ஆர்னோல்ட் இரண்டு பக்கங்களுக்கும் ஏற்ற, இறக்கங்களை கொண்ட ஒரு போராக இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான மோதல் அமைந்திருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

ரசல் ஆர்னோல்டின் இந்தக் கூற்றிற்கு போட்டி இறுதி ஓவர் வரை சென்றிருந்தமை காரணமாகும். போட்டியின் இறுதி இரண்டு ஓவர்களில் 25 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்ததோடு, வெற்றிக்காக முன்னேறிய இலங்கை அணி, சகீப் அல் ஹசன் மேற்கொண்ட சிறந்த ரன் அவுட் ஒன்றின் காரணமாக அப்போது நம்பிக்கை தந்த சாமிக்க கருணாரட்னவின் விக்கெட்டினை துரதிஷ்டவசமாக பறிகொடுத்தது. இந்த ரன் அவுட் போட்டியின் விறுவிறுப்புத் தன்மையினை அதிகரித்திருந்தது. சாமிக்க கருணாரட்ன 10 பந்துகளில் 16 ஓட்டங்கள் பெற்று வெளியேறினார்.

எனினும், புதிய துடுப்பாட்ட வீரராக களம் வந்த அசித பெர்னாண்டோ எவ்வித அழுத்தங்களுமின்றி வெற்றிக்கு தேவையாக எஞ்சியிருந்த ஓட்டங்களை பௌண்டரிகள் மூலம் பெற்று இலங்கைத் தரப்பினை அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

>> T20I தரவரிசையில் பாரிய முன்னேற்றத்தைக் கண்ட ஹர்திக் பாண்டியா

இந்த ரன் அவுட் தொடர்பிலும் போட்டியின் விறுவிறுப்புத் தன்மை தொடர்பிலும் கருத்து வெளியிட்ட இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, போட்டி மிகவும் நெருக்கமாக இருந்தது எனத் தெரிவித்திருந்தார்.

இதேநேரம், இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சன்ஜய் மன்ஜ்ரேக்கார் இலங்கை அணி பலமானதாக இருந்த போதும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இளம் வீரர்களான தஸ்கின் அஹமட், மெஹிதி ஹஸன், அபிப் ஹொசைன், மொசாதிக் மற்றும் இபதோட் ஆகியோரின் ஆட்டம் பாராட்டத்தக்க வகையில் அமைந்தது என்று தெரிவித்திருந்தார். இதில் குறிப்பாக அபிப் ஹொசைன் ஒரு கட்டத்தில் துடுப்பாட்டத்தில் தடுமாறிய பங்களாதேஷ் அணிக்கு 22 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தசுன் ஷானக்க, குசல் மெண்டிஸ் மற்றும் அசித ஆகியோரின் ஆட்டத்தை பாராட்டியிருந்தார்.

நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்த குசல் மெண்டிஸ் 37 பந்துகளுக்கு 60 ஓட்டங்களை எடுத்திருக்க, தசுன் ஷானக்க 33 பந்துகளில் 45 ஓட்டங்களை எடுத்து இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார். இதேநேரம், அசித பெர்னாண்டோ தனது பந்துவீச்சில் ஒரு விக்கெட்டினைச் சாய்த்ததோடு இலங்கை அணியின் வெற்றிக்கு தேவையாக இருந்த இறுதி ஓட்டங்களுக்காக 3 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 2 பௌண்டரிகளுடன் 10 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

அசித பெர்னாண்டோவினை இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரட்னவும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உபுல் தரங்க மற்றும் பர்வீஸ் மஹரூப் ஆகியோரும் இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, விறுவிறுப்பிற்கு மத்தியிலேயே தான் போட்டியினை பார்த்தாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

தற்போது சுபர் 4 சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, சுபர் 4 சுற்றில் தமது முதல் போட்டியில் சனிக்கிழமை (03) ஆப்கானிஸ்தானை சார்ஜா நகரில் வைத்து எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<