இலங்கை மகளிர் வளர்ந்துவரும் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையில் கொழும்பு பி. சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் இன்று (13) நடைபெற்ற ஒருநாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியைத் தழுவியது.
ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாக இடம்பெற்றுவரும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ள இலங்கை மகளிர்
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக மூன்று ஐசிசி சம்பியன்ஷிப் ஒருநாள் போட்டிகள்…
இந்த நிலையில், இலங்கை மகளிர் வளர்ந்து வரும் அணிக்கும், இங்கிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான ஒருநாள் பயிற்சிப் போட்டி இன்று (13) கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் முதலில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து மகளிர் அணியின் தலைவி ஹேதர் நைட் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான டேமி போவ்மொன்ட் 14 ஓட்டங்களுடன் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த எமி ஜோன்ஸ் மற்றும் லோரன் வின்பீல்ட் ஆகியோர் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்த்தனர்.
இதில் லோரன் வின்பீல்ட் 82 பந்துகளுக்கு 80 ஓட்டங்களையும், எமி ஜோன்ஸ் 69 பந்துகளுக்கு 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
தொடர்ந்து மத்திய வரிசையில் களமிறங்கிய அணித் தலைவி ஹேதர் நைட் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களைக் குவித்தது.
Photos: Sri Lanka Women Emerging XI vs England Women | Practice Match
இலங்கை மகளிர் வளர்ந்துவரும் அணியின் பந்து வீச்சில், மதுஷிகா மெத்தானந்த 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்த, உமேஷா திமாஷினி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
பின்னர், 320 என்ற இமாலய வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் வளர்ந்துவரும் அணி, ஆரம்பம் முதல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து, 40 ஓவர்களில் 166 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, 153 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஹர்ஷித மாதவி 59 ஓட்டங்களையும், ஹன்சிமா கருணாரத்ன 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்
மேற்கிந்திய தீவுகளை தும்சம் செய்த இங்கிலாந்து வைட்வொஷ் வெற்றி
மேற்கிந்திய தீவுகளை 71 ஓட்டங்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து, அந்த அணியுடனான…
இங்கிலாந்து அணி சார்பில் ஹேதர் நைட் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், லோரா மார்ஷ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<