இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான இரண்டு நாள் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரின் மேலும் மூன்று போட்டிகள் சனிக்கிழமை (15) ஆரம்பமாயின.
இதில் வடமேல் மற்றும் வடமத்திய மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் குறைந்த ஓட்டங்களில் தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டதோடு மேற்கு மாகாண மத்திய அணியுடனான போட்டியில் மத்திய மாகாண அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதேவேளை சனிக்கிழமை முடிவடைந்த கிழக்கு மாகாணத்துடனான B குழு போட்டி ஒன்றில் மேற்கு மாகாண தெற்கு அணி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
வடமேல் மாகாணம் எதிர் வடமத்திய மாகாணம்
பனாகொடவில் ஆரம்பமான இப்போட்டியில் வடமத்திய மாகாணத்திற்கு எதிராக வலுவான பந்துவீச்சை வெளிக்காட்டிய வடமேல் மாகாண அணி ஆட்டத்தில் சரிசமமான நிலையில் உள்ளது. நாணய சுழற்சியில் வென்ற வடமத்திய மாகாண அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. ஹெலகமல் நானயக்கார மற்றும் சந்துல வீரரத்ன ஆகியோரின் அதிரடி பந்துவீச்சால் வடமேல் மாகாண அணி104 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. வடமத்திய மாகாண அணி சார்பாக ஹெலகமல் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சந்துல 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். வடமேல் மாகாண அணி சார்பில் சஷின் டில்ரங்க அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றார்.
முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய வடமேல் மாகாணம் பந்துவீச்சில் அதனை சரி செய்து கொண்டது. வடமேல் மாகாண அணியின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த வடமத்திய மாகாண அணியினால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களையே பெறமுடிந்தது. எனினும் வடமத்திய மாகாணம் முதல் இன்னிங்ஸில் 54 ஓட்டங்களால் முன்னிலை பெற முடிந்தது. துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த ஹெலகமல் 69 ஓட்டங்களை பெற்றார். சச்சித்ர பீரிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஸ்பீட் T-20 சம்பியனாக வாகை சூடியது சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ்
முதல் நாள் ஆட்டநேர முடிவின் போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடும் வட மேல் மாகாண அணி 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. அதனடிப்படையில் வட மேல் மாகாண அணி தொடர்ந்து 33 ஓட்டங்களால் பின்னிலையிலுள்ளது.
போட்டியின் சுருக்கம்
வடமேல் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 104 (29.1) – சஷின் டில்ரங்க 20, ஹெலகமல் நாணயக்கார 5/34, சந்துல வீரரத்ன 3/15
வடமத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) -158 (57.3) – ஹெலகமல் நாணயக்கார 69, சச்சிந்த பீரிஸ் 3/43, அசித் பெர்னாண்டோ 3/34
வடமேல் மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 21/2 (6.2)
மேல் மாகாணம் (மத்திய) எதிர் மத்திய மாகாணம்
CCC மைதானத்தில் நடைபெறும் மேல் மாகாண மத்திய அணிக்கு எதிரான போட்டியில் முன்னால் திரித்துவக் கல்லூரியின் ரோன் சந்திரகுப்தா மற்றும் தனுக தாபரே ஆகியோரின் நிதான ஆட்டத்தின் மூலம் மத்திய மாகாண அணி வலுவான நிலையில் உள்ளது. நாணய சுழற்சியில் வென்ற மத்திய மாகாண அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. ஹிமாஷ லியனகே மற்றும் அகீல் இன்ஹா ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் மேல் மாகாண மத்திய அணி 249 ஓட்டங்களைக் குவித்தது. ஹிமாஷ அதிகூடிய ஓட்டங்களாக 75 ஓட்டங்களைப் பெற்றதோடு அகீல் 53 ஓட்டங்களை குவித்தார். பந்துவீச்சில் மத்திய மாகாணம் சார்பில் முஹம்மது ஷிராஸ் மற்றும் லக்ஷான் பெர்னாண்டோ ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை பகிர்ந்துகொண்டனர்.
பதிலுக்கு துடுப்பாடிய மத்திய மாகாண அணி சார்பில் ரொன் சந்திரகுப்தா மற்றும் தனுக தாபரே இருவரும் ஆட்டமிழக்காது அரைச்சதங்களை கடந்திருந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் மத்திய மாகாண அணி 36 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 183 ஓட்டங்களை பெற்றது. அந்தவகையில் மத்திய மாகாண அணி 9 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 76 ஓட்டங்களால் பின்னிலையிலுள்ளது.
போட்டியின் சுருக்கம்
மேல் மாகாண மத்திய (முதல் இன்னிங்ஸ்) – 249 (53.2) – அகீல் இன்ஹாம் 53, ஹிமாஷ லியனகே 75, முஹம்மது ஷிராஸ் 4/55, லக்ஷான் பெர்னாண்டோ 4/60
மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 183/1 (36) – ரொன் சந்திரகுப்தா 62*, தனுக தாபரே 67*
மேல் மாகாணம் தெற்கு எதிர் கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்துடனான போட்டியில் 119 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய மேல் மாகாண தெற்கு அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. சந்தகன் பதிரன பெற்ற 10 விக்கெட்டுகளும் மேல் மாகாண தெற்கு அணிக்கு சாதகமானது.
பொலிஸ் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமான இப்போட்டியில் மேல் மாகாண தெற்கு அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது. மலிந்து மதுரங்க மற்றும் ரஷ்மிக்க ஓபாதவின் சிறபான துடுப்பாட்டத்தின் மூலம் மேல் மாகாண தெற்கு அணி 254 ஓட்டங்களை குவித்தது. கிழக்கு மாகாணம் சார்பில் பந்துவீச்சில் கே. தனூஷன் 82 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பாடிய கிழக்கு மாகாணம் 84 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சந்தகன் பதிரன 23 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து பலோ ஓன் (Follow on) செய்ய அழைக்கப்பட்ட கிழக்கு மாகாண அணி இரண்டாவது இன்னிங்ஸில் 288 ஓட்டங்களைப் பெற்றது. சச்சிந்த ஜயதிலக்க அதிகூடிய ஓட்டங்களாக 112 ஓட்டங்களையும் ரமேஷ் நிமந்த 77 ஓட்டங்களையும் பெற்றனர். மீண்டும் சிறப்பாக பந்துவீசிய சந்தகன் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்து மொத்தமாக இப்போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
119 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய மேல் மாகாண தெற்கு அணி, கிழக்கு மாகாணத்தின் கடும் சவாலான பந்துவீச்சுக்கு முகம்கொடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
போட்டியின் சுருக்கம்
மேல் மாகாணம் தெற்கு (முதல் இன்னிங்ஸ்) – 254 (71.3) – மலிந்து மதுரங்க 53, ரஷ்மிக்க ஓபாத 47, கே. தனூஷன் 82/6, ரமேஷ் இமன்த 49/3-
கிழக்கு மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 84 (31) – நிபுன கமகே 18, ரனித லியனாரச்சி 2/15, சந்தகன் பதிரன 7/23,
கிழக்கு மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்)f/o – 288 (61.2) – ரமிந்து நிகேஷல 46, ரமேஷ் நிமந்த 77, சச்சிந்த ஜயதிலக்க 112, சந்தகன் பதிரன 3/86, பிரமோத் மதுவந்த 3/35, லக்சித மாரசிங்க 2-45
மேல் மாகாணம் தெற்கு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 121/8 (29.5) – முஹம்மது ஜலீல் 42, மலிந்து மதுரங்க 30, கே. தனூஷன் 3/45, சஞ்சிக ரிதம 2/20, பிரமோத் ஹெட்டிவட்ட 2/25
முடிவு – மேல் மாகாண தெற்கு அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி
ஊவா மாகாணம் எதிர் மேல் மாகாண வடக்கு
மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் ஊவாவுக்கு எதிராக மேல் மாகாண வடக்கு அணி ஸ்திரமான நிலையை எட்டியது. நாணய சுழற்சியில் வென்ற ஊவா மாகாணம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. எனினும் அந்த அணியால் முதல் இன்னிங்ஸில் 163 ஓட்டங்களையே பெறமுடிந்தது. அதிகபட்சமாக நவிந்து நிர்மால் 64 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மேல் மாகாண வடக்கு அணி சார்பாக பினுர பெர்னாண்டோ 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பாடிய மேல் மாகாண வடக்கு அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 137 ஓட்டங்களை எடுத்திருந்தது.
போட்டியின் சுருக்கம்
ஊவா மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 163 (45.1) – நவிந்து நிர்மால் 64, மீதும் தினெத் 37, பினிர பெர்னாண்டோ 5/20
மேல் மாகாண வடக்கு (முதல் இன்னிங்ஸ்) – 137/3 (36) – பதும் நிஸ்சங்க 70