இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (14) நடைபெற்றன.
வட மாகாண அணியின் இறுதி நிமிடம் வரையிலான போராட்டம் வீண்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு…
வட மாகாணம் எதிர் வட மத்திய மாகாணம்
விதூஷனின் அதிரடி பந்துவீச்சு மற்றும் பனூஜன், தினோஷனின் அரைச்சதங்களின் உதவியோடு வட மத்திய மாகாணத்திற்கு எதிரான போட்டியில் வட மாகாண அணி 135 ஓட்டங்களால் அதிரடி வெற்றியை பெற்றது.
கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வட மத்திய மாகாணம் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை வட மாகாண அணிக்கு வழங்கியது. இதன்படி வட மாகாண அணிக்கு பனூஜன் 55 ஓட்டங்களை பெற்றதோடு டீ. தினோஷன் 50 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் வட மாகாண அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களுக்கும் சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றது.
இதன்போது வட மத்திய மாகாண அணிக்காக தமித் சமரவிக்ரம 47 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய வட மத்திய மாகாண அணிக்கு வட மாகாண பந்துவீச்சாளர் ஆரம்பம் தொட்டு நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக வீ. விதூஷன் முக்கிய விக்கெட்டுகளை விழ்த்தி எதிரணியின் வெற்றி எதிர்பார்ப்பை சிதறடித்தார்.
இதனால் வட மத்திய மாகாண அணி 36.1 ஓவர்களில் 76 ஓட்டங்களுக்கே சுருண்டது. அவிஷ்க சேனாதீர பெற்ற 21 ஓட்டங்களுமே அந்த அணியின் அதிகபட்ச ஓட்டங்களாகும்.
பந்துவீச்சில் வீ. விதூஷன் 23 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு எம். அபினாஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வட மாகாண அணி 19 வயதுக்கு உட்பட்ட மாகாண மட்ட தொடரின் முதல் ஆட்டத்தில் மேல் மாகாண வடக்கு அணியிடம் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
வட மாகாணம் – 211 (47) – பனூஜன் 55, டீ. தினோஷன் 50, தமித் சமரவிக்ரம 5/47, பிரமில தனஞ்சய 2/39
வட மத்திய மாகாணம் – 76 (36.1) – அவஷ்க சேனாதீர 21, வீ. விதூஷன் 5/23, எம். அபினாஷ் 2/29
முடிவு – வட மாகாண அணி 135 ஓட்டங்களால் வெற்றி
மத்திய மாகாணம் எதிர் மேல் மாகாணம் வடக்கு
கொழும் கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சோபித்த மேல் மாகாண வடக்கு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேல் மாகாண வடக்கு அணி மத்திய மாகாணத்தை முதலில் துடுப்பெடுத்தாடும்படி அழைத்தது. எனினும் எதிரணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் மத்திய மாகாண அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி 50 ஓவர்களுக்கும் முகம்கொடுத்த போதும் ஓட்டங்களை அதிகரிக்க தவறியமை குறிப்பிடத்தக்கது. புபுது பண்டார 46 ஓட்டங்களை பெற்றபோதும் ஏனைய வீரர்கள் சோபிக்க தவறினர்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய மேல் மாகாண வடக்கு அணிக்கு அஷான் பெர்னாண்டோ (69) அரைச்சதம் பெற்றதோடு ஷெஹான் பெர்னாண்டோ 44 ஓட்டங்களை பெற்று கைகொடுத்தார். இதன் மூலம் அந்த அணி 26.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
போட்டியின் சுருக்கம்
மத்திய மாகாணம் – 138 (50) – புபுது பண்டார 46, ரவிந்து பெர்னாண்டோ 3/28, யுகீஷ டில்ஷான் 2/20, பசிந்து உசத்தி 2/28
மேல் மாகாணம் வடக்கு – 142/3 (26.3) – அஷான் பெர்னாண்டோ 69, ஷெஹான் பெர்னாண்டோ 44, கமேஷ் நிர்மல 19*, கல்ஹார சேனாரத்ன 3/39
முடிவு – மேல் மாகாண வடக்கு அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி