தம்புள்ள கிரிக்கட் மைதானம் பகலிரவு போட்டிகளை நடாத்தும் சாத்தியங்களை கொண்ட மைதானமாக உருவெடுத்துள்ளது. அடுத்த மாதம் அவுஸ்திரேலிய அணியோடு நடைபெறும் ஒருநாள் போட்டிகளை மையமாகக் கொண்டு தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் உள்ள மின் விளக்குகளை மேம்படுத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி இந்த வேலைத்திட்டத்திற்கு சுமார் 50 மில்லியன் (ஏறத்தாழ USD $352,000) ரூபா செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
தம்புள்ள கிரிக்கட் மைதானம் 2010ஆம் ஆண்டு இறுதியாக பகலிரவு ஒருநாள் போட்டியை நடத்தி இருந்தது. அதன் பின் மின் விளக்குகளில் உள்ள தீவிர பற்றாக் குறை காரணமாக அந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறவில்லை. அத்தோடு தம்புள்ள கிரிக்கட் மைதானதில் உள்ள மின் விளக்குகளின் ஒளியலகு 2500க்கும் கணிசமாக குறைந்த காணப்படுகிறது. ஐ.சி.சியின் விதிகளின் படி பகலிரவு போட்டிகளை நடாத்தும் மைதானங்களில் உள்ள மின் விளக்குகள் 2500 ஒளியலகுகளைக் கொண்டு இருக்கவேண்டும்.
இந்த மின் விளக்குகளை மேம்படுத்தும் திட்டத்தின் போது மைதானத்தில் உள்ள 8 மின்கம்பங்களிலும் உள்ள விளக்குகள் உயர் வாற் கொண்ட மின் விளக்குகள் பொருத்தப்படும். அத்தோடு மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுளள்து.
இந்த நிலையில் 6 வருடங்களுக்கு பின் தம்புள்ள கிரிக்கட் மைதானத்தில் பகலிரவு ஒருநாள் போட்டி நடைபெறவுளள்து. இதில் ஆகஸ்ட் மாதம் 28 மற்றும் 31ஆம் திகதிகளில் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.