இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் புதிய கிரிக்கெட் தொடர் ஒன்றை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஆரம்பிக்கவுள்ளது.
>> தசுன் ஷானக்கவுக்கு PSL அறிமுகம்
அதன்படி 23 வயதின் கீழ்ப்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு தொடர் (SLC U23 Invitational Tournament) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் தொடர், இம்மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றன.
இந்த புதிய தொடர் இலங்கை கிரிக்கெட் சபை நடாத்துகின்ற 23 வயதின் கீழ்ப்பட்ட வீரர்களுக்கான மேஜர் லீக் தொடரில் பங்கெடுக்காத புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் தொடரில் ஆளுனர் கிரிக்கெட் தொடரில் பங்கெடுத்த அணிகளும், 2022ஆம் ஆண்டுக்கான மேஜர் லீக் தொடரில் தமது தரநிலையை இழந்த (Relegate) கழகங்களும் பங்கெடுக்கின்றன.
அத்துடன் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவரும் திம்புல கிரிக்கெட் கழகத்திற்கும் இந்த புதிய கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
>> இலங்கை A அணியிலிருந்து அஞ்செலோ மெதிவ்ஸ் நீக்கம்!
சுமார் ஒரு மாதம் வரையிலான காலப்பகுதியில் நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடர் இரு குழுக்கள் கொண்டதாக நடைபெறவிருப்பதோடு, ஒவ்வொரு குழுக்களில் இருந்தும் அரையிறுதிப் போட்டிகளுக்காக இரு அணிகள் தேர்வு செய்யப்படவிருக்கின்றன.
இதேநேரம் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் மாதம் 26ஆம் திகதி நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<