ஐசிசி T20 உலகக்கிண்ணத்திற்கான தயார்படுத்தலுக்காக நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டி தொடரில் இன்று (06) நடைபெற்ற SLC டீம் யெல்லோவ் அணிக்கு எதிரான போட்டியில் SLC டீம் கிரீன் 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றிபெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டீம் கிரீன் அணி பானுக ராஜபக்ஷ மற்றும் ஜனித் லியனகே ஆகியோரின் வேகமான ஓட்டக்குவிப்புக்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது.
>>T20 உலகக்கிண்ணத்துக்கான வீசாக்களை பெற்றுக்கொண்ட 25 இலங்கை வீரர்கள்
பானுக ராஜபக்ஷ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 36 பந்துகளில் 88 ஓட்டங்களை விளாசினார். இவருக்கு அடுத்தப்படியாக ஜனித் லியனகே 35 பந்துகளில் 70 ஓட்டங்களை பெற்றார். இவர்கள் இருவரின் ஓட்டக்குவிப்பு மாத்திரமின்றி ரமேஷ் மெண்டிஸ் 15 பந்துகளில் 35 ஓட்டங்களையும், குசல் பெரேரா 22 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய SLC டீம் யெல்லோவ் அணிக்கு பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க முயற்சித்தனர்.
எனினும் குசல் மெண்டிஸ் 19 ஓட்டங்களுடனும், பெதும் நிஸ்ஸங்க 34 ஓட்டங்களுடனும் வெளியேறினர். இவர்களின் ஆட்டமிழப்புக்கு பின்னர் சதீர சமரவிக்ரம 21 பந்துகளில் 38 ஓட்டங்களையும், நுவனிது பெர்னாண்டோ 11 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும் தரிந்து ரத்நாயக்க 4 விக்கெட்டுகளை கைப்பற்ற SLC டீம் யெல்லோவ் அணி 16.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
சுருக்கம்
SLC டீம் கிரீன் – 252/5 (20), பானுக ராஜபக்ஷ 88, ஜனித் லியனகே 70, அசித பெர்னாண்டோ 2/36
SLC டீம் யெல்லோவ் – 153/10 (16.2), சதீர சமரவிக்ரம 38, பெதும் நிஸ்ஸங்க 34, தரிந்து ரத்நாயக்க 4/25
முடிவு – SLC டீம் கிரீன் அணி 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<