இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட கனிஷ்ட அணிகள் பங்குகொள்ளும் மாகாண ரீதியிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் நான்கு போட்டிகள் இன்று நடைபெற்றன. A மற்றும் B என்று இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வரும் அதேவேளை ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
மேல் மாகாணம் (மத்திய) எதிர் வட மத்திய மாகாணம்
மக்கோன சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், மேல் மாகாண மத்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றியை சுவீகரித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாண மத்திய அணி முதலில் துடுப்பாடி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 295 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
மேல் மாகாண மத்திய அணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய சவண் பிரபாஷ் மற்றும் இரங்க ஹஷான் அரைச் சதங்களை பதிவு செய்தனர். அதிக பட்ச ஓட்டங்களாக சவண் பிரபாஷ் 59 ஓட்டங்களை பதிவு செய்தார். அதேநேரம், பந்து வீச்சில் வட மத்திய மாகாண அணி சார்பாக மந்தில விஜேரத்ன மற்றும் விஹான் குணசேகற ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதனையடுத்து, 296 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பாடக் களமிறங்கிய வட மத்திய மாகாண அணி, குறித்த 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 69 ஓட்டங்களால் தோல்வியுற்றது. எனினும், அவ்வணி சார்பாக அதிரடியாக துடுப்பாடிய கவிந்து மதரசிங்க அதிக பட்ச ஓட்டங்களாக 69 ஓட்டங்களைப் பதிவு செய்தார்.
அதேநேரம், மேல் மாகாண மத்திய அணி சார்பாக சிறப்பாகப் பந்து வீசிய சுஹங்க விஜேவர்தன 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மேல் மாகாண மத்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
போட்டியின் சுருக்கம்
மேல் மாகாணம் (மத்திய) – 295 (49) – சவண் பிரபாஷ் 59, இரங்க ஹஷான் 52, சிதாரா ஹப்புஹின்ன 34, பசிந்து சூரியபண்டார 30, சுஹங்க விஜேவர்தன 27, மந்தில விஜேரத்ன 3/27, விஹான் குணசேக்கற 3/39, சஷிக செனவிரத்ன 2/44
வட மத்திய மாகாணம் – 226/8 (50) – கவிந்து மதரசிங்க 69, விஹான் குணசேகர 44, மந்தில விஜேரத்ன 40, சுஹங்க விஜேவர்தன 4/38, விமுக்தி குலதுங்க 2/45
போட்டி முடிவு – மேல் மாகாண மத்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றி
வட மேல் மாகாணம் எதிர் மேல் மாகாணம் (தெற்கு)
கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், நாணய சுழற்சியை வென்ற வட மேல் மாகாணம் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில், துடுப்பாடக் களமிறங்கிய அவ்வணி, குறித்த 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களைக் குவித்தது.
அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய சமித் டில்ஷான் மற்றும் நிபுன் தனஞ்சய ஆகியோர் கூடிய ஓட்டங்களாக முறையே 64,51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அதேநேரம் மேல் மாகாண தெற்கு அணி சார்பாக பந்து வீச்சில் சனோஜ் தர்ஷிக்க 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதனையடுத்து, வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய மேல் மாகாண தெற்கு அணி 44.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களுக்கு சுருண்டது. சிறப்பாக பந்து வீசிய கவின் பண்டார மற்றும் புபுது கனேகம ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியின் சுருக்கம்
வட மேல் மாகாணம் – 225 (50) – சமித் டில்ஷான் 64, நிபுன் தனஞ்சய 51*, புபுது கனேகம 29, கவீன் பண்டார 21, சனோஜ் தர்ஷிக்க 5/29
மேல் மாகாணம் (தெற்கு) – 158 (44.1) – ஷெஹான் டில்ஷான் 39, சமில் மிஷார 30, கவின் பண்டார 2/26, புபுது கனேகம 2/22
போட்டி முடிவு – வட மேல் மாகாணம் 67 ஓட்டங்களால் வெற்றி.
மேல் மாகாணம் (வடக்கு) எதிர் தென் மாகாணம்
பனாகொட இராணுவ மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் மாகாண அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அந்த வகையில் துடுப்பாட்டத்துக்கு உகந்த இந்த மைதானத்தில் களமிறங்கிய மேல் மாகாண வடக்கு அணி, அசெல் சிகெரா மற்றும் அஷான் பெர்னாண்டோ ஆகியோரின் அதிரடி அரைச் சதங்களின் உதவியுடன் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களை குவித்தது.
அதேநேரம், தென் மாகாண அணி சார்பாக பந்துவீச்சில் ரெஷான் கவிந்த 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அந்தவகையில், 278 என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய தென் மாகாண அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 224 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
அதிகபட்ச ஓட்டங்களாக தனஞ்சய லக்ஷான் 85 ஓட்டங்களை பெற்றதோடு ரவிந்து சஞ்சன 52 ஓட்டங்களைக் குவித்தார்.
மேல் மாகாண வடக்கு அணி சார்பாக அதிரடியாக பந்து வீசிய ப்ருதுவி ருசார, அசேல் சிகெரா, காமேஷ் நிர்மல் மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
போட்டியின் சுருக்கம்
மேல் மாகாணம் (வடக்கு) – 277/9 (50) – அசெல் சிகெரா 70, அஷான் பெர்னாண்டோ 67, ப்ருதுவி ருசார 40, காமேஷ் நிர்மல் 36, ரெஷான் கவிந்த 3/58, சசித் மதுரங்க 2/24
தென் மாகாணம் – 224 (46.4) – தனஞ்சய லக்ஷான் 85, ரவிந்து சஞ்சன 52, ப்ருதுவி ருசார 2/23, அசெல் சிகெரா 2/23, காமேஷ் நிர்மல் 2/40, மகேஷ் தீக்ஷன 2/38
போட்டி முடிவு – மேல் மாகாண வடக்கு அணி 53 ஓட்டங்களால் வெற்றி
ஊவா மாகாணம் எதிர் மத்திய மாகாணம்
வெலிசரை கடற்படை மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மத்திய மாகாண அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அந்த வகையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ஊவா மாகாண அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ஓட்டங்களை பதிவு செய்தது.
அவ்வணி சார்பாக அதிரடியாக துடுப்பாடிய சஷிக துல்ஷான் ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாகப் பதிவு செய்தார்.
மத்திய மாகாண அணி சார்பாக பந்துவீச்சில் கசுன் கருணாதிலக மற்றும் திமிர சுபுன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதனையடுத்து, இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய மத்திய மாகாண அணி 44.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, வெற்றி இலக்கை அடைந்தது.
மத்திய மாகாண அணி சார்பாக ரவிஷ்க உபேந்திர ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களையும் மொஹமட் அப்சல் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் ஊவா மாகாண அணி சார்பாக சஷிக துல்ஷான் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
ஊவா மாகாணம் – 215/9 (50) – சஷிக துல்ஷான் 65*, சேதக தெனுவன் 37, லகில தெஹான் 30, கசுன் கருணாதிலக்க 2/21, திமிர சுபுண் 2/40
மத்திய மாகாணம் – 219/7 (44.4) – ரவிஷ்க உபேந்திர 80*, மொஹமட் அப்சல் 59, சஷிக துல்ஷான் 3/22
போட்டி முடிவு – மத்திய மாகாணஅணி 3 விக்கெட்டுகளால் வெற்றி.