இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவந்த மாகாண அணிகளுக்கிடையிலான (சுப்பர் ப்ரொவின்சியல்) ஒரு நாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு மற்றும் காலி அணிகளுக்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது.
இதில் உபுல் தரங்க தலைமையிலான காலி அணி இவ்வருடத்துக்கான மாகாணங்களுக்கிடையிலான ஒரு நாள் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது.
உபுல் தரங்கவின் அபார சதத்தின் மூலம் சம்பியனான காலி
உபுல் தரங்கவின் அதிரடி சதத்தின் மூலம் மாகாண..
முன்னதாக, இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டியானது மே மாதம் 20ஆம் திகதி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவிருந்தது. எனினும், நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் குறித்த போட்டியை காலவரையின்றி ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
கொழும்பு, காலி, கண்டி மற்றும் தம்புள்ளை என நான்கு அணிகளின் பங்குபற்றலுடன் லீக் முறையில் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரின் முதல் மூன்று லீக் போட்டிகளிலும் தேசிய அணி வீரர்களுடன் முதல்தர வீரர்கள், 19 வயதுக்குட்பட்ட வீரர்களும் விளையாடியிருந்தனர்.
ஆனால், மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் போட்டித் தொடருக்கான உத்தேச அணியில் இடம்பெற்ற வீரர்கள் மாத்திரம் கடந்த மாத இறுதியில் பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக போட்டியிலிருந்து முன்னதாகவே விலகிக்கொண்டனர்.
இதனையடுத்து, எஞ்சிய வீரர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற மாகாண ஒரு நாள் போட்டித் தொடரானது சீரற்ற காலநிலைக்கு மத்தியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இறுதிக் கட்டத்தை அடைந்தது.
இதேவேளை, சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதனைத்தொடர்ந்து எதிர்வரும் ஆகஸ்ட், ஒக்டோபர் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடர்கள் இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளன.
எனவே, கடந்த மே மாதம் முதல் நடைபெற்றுவந்த மாகாண ஒரு நாள் போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள போட்டித் தொடர்களில் தேசிய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக, அண்மைக்காலமாக ஒரு நாள் அரங்கில் தடுமாற்றத்தினை சந்தித்து வருகின்ற இலங்கை அணி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் நோக்கில் இளம் வீரர்களுக்கும் தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், இம்முறை போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக காலி அணியின் தலைவர் உபுல் தரங்கவும் (326 ஓட்டங்கள்), அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக காலி அணியின் மலிந்த புஷ்பகுமாரவும் (15 விக்கெட்) இடம்பிடித்தனர்.
இதன்படி, குறித்த தொடரில் துடுப்பாட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய முக்கிய 5 வீரர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்போம்.
இலங்கை டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க குழாமில் டெல் ஸ்டைன்
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு…
- உபுல் தரங்க
இம்முறை மாகாண ஒரு நாள் போட்டியில் காலி அணியின் தலைவராகச் செயற்பட்டு அவ்வணிக்கு சம்பியன் பட்டத்தைப் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாக இருந்த இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரான உபுல் தரங்க, துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அந்த அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி, இரண்டு சதங்கள் மற்றும் 2 அரைச்சதங்களுடன் 396 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.
இலங்கை ஒரு நாள் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்ற உபுல் தரங்க, உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்தாலும், அண்மைக்காலமாக சர்வதேசப் போட்டிகளில் எதிர்பார்த்தளவு அவரால் சோபிக்க முடியாமல் போனது.
அதிலும் குறிப்பாக இலங்கை அணி வீரர்கள் அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் மோசமாக விளையாடிய சந்தர்ப்பங்களில் அணியின் தேவை கருதி மத்திய வரிசை வீரராகவும் அவர் களமறிங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே, தென்னாபிரிக்கா அணியுடனான ஒரு நாள் தொடரில் மீண்டும் உபுல் தரங்கவுக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அணியில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு கிட்டுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
- ஷெஹான் ஜயசூரிய
உள்ளூர் கழக மட்ட ஒரு நாள் போட்டித் தொடரில் சோனகர் அணிக்காக விளையாடி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற சகலதுறை ஆட்டக்காரரான ஷெஹான் ஜயசூரிய, இம்முறை மாகாணங்களுக்கிடையிலான ஒரு நாள் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
>> கிரிக்கெட் காணொளிகளைப் பார்வையிட <<
கொழும்பு அணிக்காக விளையாடிய 26 வயதான ஷெஹான் ஜயசூரிய, அவ்வணிக்காக 7 போட்டிகளில் விளையாடி, ஒரு சதம் மற்றும் 3 அரைச்சதங்களுடன் 326 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கை ஏ அணியில் இடம்பெற்று சகலதுறை வீரராக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஷெஹான் ஜயசூரியவும் தேசிய அணியில் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளார்.
எனவே, அடுத்த மாதம் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ள இலங்கை ஏ அணியில் இடம்பெறுவதற்கான நல்ல வாய்ப்பொன்று அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- சதீர சமரவிக்ரம
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தைச் சேர்ந்த வலதுகை துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம, மாகாண ஒரு நாள் போட்டித் தொடரில் காலி அணிக்காக விளையாடியிருந்ததுடன், அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரர்களில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். மொத்தம் 6 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு சதம், இரண்டு அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 296 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக இறுதிப் போட்டியில் அணித் தலைவர் உபுல் தரங்கவுடன் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து பெறுமதியான 125 ஓட்டங்களை பகிர்ந்த அவர் 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
22 வயதுடைய இளம் விக்கெட் காப்பாளரான சதீர சமரவிக்ரம, கடந்த வருடம் பாகிஸ்தான் அணிக்கெதிராக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் இலங்கை அணிக்கான அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.
19 வயதின் கீழ் மாகாண கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்கள் விபரம்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஏற்பாடு செய்து நடாத்தும்..
குறித்த ஒரு வருட காலப்பகுதியில் வெறும் 3 ஒரு நாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அவர், 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அதிரடி காண்பித்து வருகின்ற சதீர சமரவிக்ரமவுக்கும் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் ஏ அணிக்கெதிரான போட்டித் தொடரில் வாய்ப்பு கிட்டும் என நம்பப்படுகின்றது.
- லஹிரு திரமான்ன
இதேநேரம், உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக தனது சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தேசிய அணியில் இடம்பெறுவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற மற்றுமொரு அனுபவமிக்க வீரரான லஹிரு திரிமான்ன, இம்முறை மாகாணங்களுக்கிடையிலான ஒரு நாள் போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கொழும்பு அணிக்காக விளையாடிய 28 வயதான திரிமான்ன, 6 போட்டிகளில் விளையாடி, ஒரு சதம் மற்றும் ஒரு அரைச்சதத்துடன் 287 ஓட்டங்களைப் குவித்துள்ளார்.
இலங்கை அணியின் அனுபவமிக்க வீரராக லஹிரு திரிமான்ன விளங்கினாலும், அண்மைக்காலமாக உள்ளூர் போட்டிகளுக்கு மாத்திரம் முத்திரை குத்தப்பட்ட வீரராக மாறி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
எனினும், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியில் இடைநடுவில் வந்து போகின்ற வழக்கத்தைக் கொண்டுள்ள திரிமான்ன, தொடர்ச்சியான திறமையை நிரூபிக்கத் தவறி வருகின்ற காரணத்தால் தேசிய அணியில் நிரந்தர இடத்தைப் பெற்றுக்கொள்வதில் தடுமாற்றத்தையும் சந்தித்து வருகின்றார்.
ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷுக்கு ‘வைட்வொஷ்’ தோல்வி
கடைசி பந்துவரை பரபரப்பூட்டிய…
எனவே உள்ளூர் அரங்கில் சிறந்த நிலையில் இருந்து வருகின்ற லஹிரு திரிமான்னவின் எதிர்காலம் தொடர்பில் தெரிவுக் குழு மற்றும் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோர் அவதானம் செலுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- அஷான் பிரியன்ஜன்
துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் ஐந்தாவது இடத்தை தம்புள்ளை அணியைச் சேர்ந்த அஷான் பிரியன்ஜன் பெற்றுக்கொண்டுள்ளார்.
மொத்தம் 5 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒரு சதம், 2 அரைச்சதங்களுடன் 279 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இலங்கை அணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுகின்ற திறமை தனக்கு இருப்பதை நிரூபித்துள்ள அஷான் பிரயன்ஜனுக்கு விரைவில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
இந்நிலையில், இம்முறை மாகாண ஒரு நாள் போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற ஏனைய வீரர்களாக ஷம்மு அஷான், ரமித் ரம்புக்வெல்ல, சாமர சில்வா, மஹேல உடவத்த, நிரோஷன் திக்வெல்ல மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் இடம்பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<