சதீர சமரவிக்ரமவின் சதம் வீண்; போட்டியை சமப்படுத்த உதவிய சந்திமால்

3149
Sadeera’s ton goes in vain; Chandimal

இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருக்கும், மாகாண ரீதியிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுத்தொடரின் ஆரம்பப் போட்டிகள் இரண்டும் விறுவிறுப்பான முறையில் இன்று (9)  நடைபெற்று முடிந்துள்ளன.

காலி எதிர் கண்டி

அதிக ஓட்டங்கள் பெறப்பட்டிருந்த இப்போட்டியில், இறுதி விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்திருந்த லஹிரு மதுசங்க மற்றும் லஹிரு கமகே ஆகியோரின் பொறிபறக்கும் ஆட்டத்தின் துணையுடன் கண்டி அணி காலி அணியை ஒரு விக்கெட்டினால் வீழ்த்தியிருந்தது.

NCC மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த காலி அசத்தலான முறையில் 50 ஓவர்களிற்கு 347 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதில், ஆரம்ப ஜோடியாக வந்திருந்த உபுல் தரங்க மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் 111 ஓட்டங்களை முதல் விக்கெட்டுக்காக பகிர்ந்திருந்தனர். இதில் தரங்க 68 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் அடங்கலாக 54 ஓட்டங்களையும், மறுமுனையில் அதி சிறப்பாக ஆடியிருந்த சதீர சமரவிக்ரம 103 பந்துகளுக்கு 109 ஓட்டங்களையும் குவித்திருந்தினர்.

அத்துடன் காலி அணியில் மத்திய வரிசையில் களமிறங்கியிருந்த தசுன் சானக்க, சீக்குகே பிரசன்ன, சத்துரங்க டி சில்வா மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் அதிரடியாக துடுப்பாடி இறுதி 10 ஓவர்களிற்கும் 112 ஓட்டங்கள் வரையில் விளாசினர். இதில் தனன்ஞய மற்றும் சானக்க ஆகியோர் தலா 40 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதுடன் சத்துரங்க 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

சவலான இலக்கினை பெறுவதற்கு துடுப்பாட தொடங்கியிருந்த கண்டி அணி, 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது. எனினும் ஹஷான் துமிந்து 89 பந்துகளை எதிர்கொண்டு 76 ஓட்டங்களை விளாசினார். அத்துடன் இளையோர் ஆசியக்கிண்ணத்தின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக காணப்பட்ட சரித் அசலன்க 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதனால், ஒரு வலுவுக்கு சென்ற கண்டி அணி 274 ஓட்டங்கள் வரை சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்து. இந்நிலையில் எதிரணி வெற்றி பெற இன்னும் ஒரு விக்கட்டே மீதமாய் இருக்க ஜோடி சேர்நத வலது கை துடுப்பாட்ட வீரர்களான மதுசன்க மற்றும் கமகே ஆகியோர் 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து மூன்று பந்துகள் மாத்திரமே மீதமிருக்க வெற்றி இலக்கினை தொட்டனர். இதில் மதுசன்க 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசி 49 ஓட்டங்களைப் பெற்றதுடன் கமகே 26 பந்துகளிற்கு 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

காலி – 347/7 (50) – சதீர சமரவிக்ரம 109, உபுல் தரங்க 54, தனன்ஞய டி சில்வா 40, தசுன் சானக்க 40, சத்துரங்க டி சில்வா 31, சீக்குகே பிரசன்ன 22, லஹிரு மதுசன்க 3/61, லஹிரு கமகே 2/77

கண்டி – 349/9 (49.3) – ஹஷான் துமிந்து 76, சரித் அசலன்க 51, சாமர கபுகெதர 44, சசித் பத்திரன 28, லஹிரு மதுசன்க 49*, லஹிரு கமகே 36*, தனன்ஞய டி சில்வா 2/14, அகில தனன்ஞய 2/57, சத்துரங்க டி சில்வா 2/64

முடிவு – கண்டி அணி 1 விக்கெட்டால் வெற்றி


தம்புள்ளை எதிர் கொழும்பு

சமநிலையில் முடிவுற்ற இப்போட்டியில் தேசிய அணி வீரர் தினேஷ் சந்திமால் மற்றும் வனிது ஹஸரங்க ஆகியோர் ஜொலித்திருந்தனர்.

CCC மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த கொழும்பு அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்திருந்தார்.

இதனையடுத்து தமது துடுப்பாட்டத்தினை தொடங்கியிருந்த தம்புள்ளை அணியில் கீழ்வரிசையில் ஆடியிருந்த லஹிரு மிலன்த மற்றும் ஹர்ஷ கூரே ஆகியோர் சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். இதில் மிலன்த 115 பந்துகளுக்கு சதம் கடந்து 106 ஓட்டங்களினை குவித்ததுடன் கூரே 88 பந்துகளை முகம் கொடுத்து 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.  

இவர்களின் இணைப்பாட்டத்தினால் நான்காம் விக்கெட்டுக்காக 189 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ஓட்டங்களை தம்புள்ளை அணி பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து 290 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கினை தொடுவதற்கு பதிலுக்கு ஆடிய கொழும்பு அணி தில்ருவான் பெரேரா மற்றும் அசித்த பெர்னாந்து ஆகியோரின் அதிரடிப் பந்து வீச்சினால் 104 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளாகியிருந்து.

இந்நிலையில் ஜோடி சேர்ந்த வனிது ஹஸரங்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் 172 ஓட்டங்களை இணைப்பாட்டமாக 7ஆவது விக்கெட்டிற்காக பெற்றுத்தந்து போட்டியின் போக்கையே தலைகீழாக மாற்றினர். இதனால் உறுதியான நிலையினை எட்டிய கொழும்பு அணி போட்டியை சமநிலைப்படுத்தியது.

இதில் இளம் வீரரான வனிது ஹலரங்க 70 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில் சதம் கடந்த தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 123 பந்துகளிற்கு 116 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இறுதி ஓவரிற்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அசித்த பெர்னாந்து வீசிய கட்டுப்படுத்தும் வகையான பந்த் வீச்சினால் 6 ஓட்டங்களை மாத்திரமே கொழும்பு அணியினால் பெற முடிந்தது.

போட்டியின் சுருக்கம்

தம்புள்ளை – 289/6 (50) – லஹிரு மிலன்த 106, ஹர்ஷ கூரே 94, குசல் மெண்டிஸ் 36, விஷ்வ பெர்னாந்து 2/48, திசர பெரேரா 2/63

கொழும்பு – 289/7 (50) – தினேஷ் சந்திமால் 116*; ஷெஹான் ஜயசூரிய 47, வனிது ஹஸரங்க  84, தில்ருவான் பெரேரா 2/36, அசித்த பெர்னாந்து 2/59

முடிவு – போட்டி சமநிலையில் முடிவடைந்தது.