தினேஷ் சந்திமாலின் அதிரடி சதத்தின் மூலம் மாகாண ரீதியிலான ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், உபுல் தரங்க தலைமையிலான காலி அணியை 137 ஓட்டங்களால் கொழும்பு அணி இலகுவாக வெற்றியீட்டியது.
இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில், எதிர்வரும் ICC சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளை இலக்காகக் கொண்டு நடைபெற்று வருகின்ற மாகாண ரீதியிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய கொழும்பு அணி 23 ஓவர்களில் 94 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து. எனினும், ஐந்தாவது விக்கெட்டுக்காக இணைந்து கொண்ட தினேஷ் சந்திமால் மற்றும் ஷெஹான் ஜயசூரிய ஆகியோர் அதிரடியாக துடுப்பாடி 139 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்ட அதே வேளை அணியை வலுப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியிருந்தனர்.
அதிரடியாக துடுப்பாடிய ஷெஹான் ஜயசூரிய 63 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 77 ஓட்டங்களை விளாசினார். இவர் அகில தனஞ்சயவின் சுழல்பந்து வீச்சில் மினோத் பானுகவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி துடுப்பாட்ட வீரர் திசர பெரேரா, சசித்ர சேனநாயக்க மற்றும் வணிந்து ஹசரங்க ஆகியோர் விரைவாக ஓட்டங்களைக் குவிக்க முற்பட்ட போதிலும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர். எனினும், இறுதி வரை நிலைத்தாடிய அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 116 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களைப் பெற்று குறித்த 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொழும்பு அணியை 307 என்ற வலுவான ஓட்ட எண்ணிக்கைக்கு வழிநடாத்தினார்.
அதேநேரம் பந்து வீச்சில், மலிந்த புஷ்பகுமார 10 ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்தாலும் ஏனைய பந்து வீச்சாளர்களினால் குறிப்பிடத்தக்க அளவு பிரகாசிக்க முடியவில்லை.
தொடர் முழுவதும் சிறப்பாக செயற்பட்டு வந்த காலி அணித் தலைவர் உபுல் தரங்க இறுதிப் போட்டியில் பிரகாசிக்கத் தவறினார். எனினும், கடந்த போட்டியில் சதம் விளாசி சகலரின் கவனத்தையும் ஈர்த்திருந்த சதீர சமரவிக்ரம இந்தப் போட்டியில் 29 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்தார்.
சதுரங்க டி சில்வா மற்றும் சம்மு அஷான் ஆகியோர் அதிகபட்ச ஓட்டங்களாக முறையே 34, 30 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றதனால் காலி அணி 30.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அதேநேரம் காலி அணியின் துடுப்பாட்ட வரிசையை சிதைத்த சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சசித்ர சேனநாயக்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தங்களுக்கிடையே தலா இரண்டு விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு – 307/8 (50) – தினேஷ் சந்திமால் 113*, ஷெஹான் ஜயசூரிய 77, டில்ஷான் முனவீர 27, கித்ருவான் விதானகே 25, மலிந்த புஷ்ப்பகுமார 2/32, சதுரங்க டி சில்வா 2/53, அகில தனஞ்சய 2/56, தசுன் சானக்க 2/63
காலி – 170 (30.3) – சதுரங்க டி சில்வா 34, சம்மு அஷான் 30, சதீர சமரவிக்ரம 29, அகில தனஞ்சய 24, திசர பெரேரா 4/42, சச்சித்ர சேனாநாயக்க 2/34, துஸ்மந்த சமீர 2/40