இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் மாகாண ரீதியிலான ஒருநாள் போட்டித் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெற்றன.

கொழும்பு எதிர் காலி

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி மழையின் காரணமாக 49 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

SLC Super Provincialபோட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். தொடக்க வீரர்களான மினோத் பானுக மற்றும் சதீர சமரவிக்ரம முறையே 40 மற்றும் 21 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போதிலும் அடுத்து களமிறங்கிய திமுத் கருணாரத்ன அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 86 ஓட்டங்களை குவித்தார்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த தசுன் ஷானக அபாரமாக துடுப்பெடுத்தாடி துரித கதியில் ஓட்டங்களை குவித்தார். அவர் 95 பந்துகளில் 7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக அதிரடியாக 121 ஓட்டங்களை குவிக்க காலி அணியானது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

303 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கொழும்பு அணி மலிந்த புஷ்பகுமாரவின் சுழலில் சிக்கியது. அவர் 6.5 ஓவர்களில் 31 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 5 விக்கெட்டுகளை சுவீகரிக்க, கொழும்பு அணி 26.5 ஓவர்களில் வெறும் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மேலும் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் துடுப்பாட்டத்தில் கித்ருவன் விதானகே மற்றும் திசர பெரேரா அதிகபட்சமாக 26 மற்றும் 25 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். இதன்படி காலி அணியானது 188 ஓட்டங்களினால் இலகு வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

காலி – 302/4 (49) – தசுன் ஷானக 121*, திமுத் கருணாரத்ன 86, மினோத் பானுக 41, சதீர சமரவிக்ரம 20

கொழும்பு – 114 (26.5) – கித்ருவன் விதானகே 26, திசர பெரேரா 25, மலிந்த புஷ்பகுமார 5/31, சுரங்க லக்மால் 2/20

முடிவு – காலி அணி 188 ஓட்டங்களினால் வெற்றி


கண்டி எதிர் தம்புள்ளை

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியை வென்ற தம்புள்ளை அணியின் தலைவர் குசல் பெரேரா எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தார்.

SLC Super Provincialகண்டி அணியின் மேல்வரிசை வீரர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்காத காரணத்தினால் அவ்வணி ஒரு கட்டத்தில் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் தனது சிறப்பாட்டத்தின் மூலம் அணியை மீட்டெடுத்த அணித்தலைவர் சாமர கபுகெதர சதம் கடந்த நிலையில் 102 ஓட்டங்களை குவித்தார்.

இறுதி ஓவர்களில் அதிரடியை வெளிப்படுத்திய லஹிரு மதுஷங்க மற்றும் ரமித் ரம்புக்வெல்ல முறையே 90 மற்றும் 52 ஓட்டங்களை விளாச, கண்டி அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. பந்துவீச்சில் தில்ருவன் பெரேரா, அசித பெர்னாண்டோ மற்றும் நுவன் குலசேகர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

337 என்ற பாரிய இலக்கினை நோக்கி களமிறங்கிய தம்புள்ளை அணி சார்பில் மூன்றாவது விக்கெட்டிற்காக ஒன்றிணைந்த குசல் மெண்டிஸ் மற்றும் உதார ஜயசுந்தர 114 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து நம்பிக்கையளித்தனர். எனினும் இவ்விருவரும் முறையே 77 மற்றும் 41 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஓய்வறை திரும்பினர்.

மறுமுனையில் தனி ஒருவராக போராடிய ஹர்ஷ குரே பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 109 ஓட்டங்களை குவித்து தனது அணியை இலக்கை நெருங்கச் செய்தார். எனினும் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதால் தம்புள்ளை அணியினால் 48.5 ஓவர்களில் 317 ஓட்டங்களையே பெற முடிந்தது.

பந்துவீச்சில் அசத்திய கண்டி அணியின் லஹிரு கமகே 4 விக்கெட்டுகளையும் தனுஷ்க குணதிலக 3 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர். இதன்படி விறுவிறுப்பான போட்டியின் பின்னர் கண்டி அணி 19 ஓட்டங்களினால் வெற்றியை பெற்றுக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

கண்டி – 336/7 (50) – சாமர கபுகெதர 102, லஹிரு மதுஷங்க 90*, ரமித் ரம்புக்வெல்ல 52*, தில்ருவன் பெரேரா 2/70, அசித  பெர்னாண்டோ 2/71, நுவன் குலசேகர 2/72

தம்புள்ளை – 317 (48.5) – ஹர்ஷ குரே 109, குசல் மெண்டிஸ் 77, லஹிரு கமகே 4/46, தனுஷ்க குணதிலக 3/23

முடிவு – கண்டி அணி 19 ஓட்டங்களினால் வெற்றி