இலங்கை கிரிக்கெட் சபை நடாத்திவரும் நான்கு நாட்கள் கொண்ட மாகாண ரீதியிலான “சுபர் 4″ முதல் தர கிரிக்கெட் தொடரின் இரண்டாம் வாரப் போட்டிகள் இரண்டும் புதன் கிழமை (11) முடிவடைந்தது.
பகலிரவு ஆட்டமாக இடம்பெற்ற இந்தப் போட்டிகள் இரண்டும் முதல் வாரத்தினைப் போன்று வெற்றி, தோல்வி இல்லாது இம்முறையும் சமநிலை அடைந்திருக்கின்றன.
காலி எதிர் தம்புள்ளை
காலி மற்றும் தம்புள்ளை அணிகளுக்கு இடையில் சமநிலை அடைந்த இப்போட்டியில் சச்சித்ர சேரசிங்க, அஷான் பிரியஞ்சன் ஆகியோர் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியிருந்ததோடு, காலி அணியின் நிசல தாரக்க பந்துவீச்சில் அசத்தியிருந்தார்.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை (10) தம்புள்ளை (244), காலி (255) அணிகள் ஆகியவற்றின் முதல் இன்னிங்சின் பின்னர் மீண்டும் இரண்டாம் இன்னிங்சில் ஆடிய தம்புள்ளை அணி 138 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. தம்புள்ளை அணி சார்பாக அஷான் பிரியஞ்சன் 67 ஓட்டங்களுடனும், சச்சித்ர சேரசிங்க 29 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.
>> மாகாண தொடரில் தம்புள்ளை அணிக்காக பந்துவீச்சில் அசத்திய லஹிரு கமகே <<
ஆட்டத்தின் இறுதி நாளில் 127 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்சைத் தொடர்ந்த தம்புள்ளை அணிக்கு, அஷான் பிரியஞ்சன் 95 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்ந்திருந்தார். அத்துடன் பிரியஞ்சனுக்கு இணைப்பாட்ட ஜோடியாக செயற்பட்ட சச்சித்ர சேரசிங்க முதல் தரப் போட்டிகளில் தனது 19 ஆவது சதத்தினைப் பதிவு செய்தார். இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு தம்புள்ளை அணி இரண்டாம் இன்னிங்சுக்காக 89 ஓவர்களில் 325 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது துடுப்பாட்டத்தை இடைநிறுத்தியது.
தம்புள்ளை அணியின் துடுப்பாட்டத்தில் சதம் கடந்த சச்சித்ர சேரசிங்க 13 பெளண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்த்தன 37 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இதேவேளை, காலி அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளரான நிசல தாரக்க 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
தம்புள்ளை அணியின் இரண்டாம் இன்னிங்சை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 315 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த காலி அணி 66 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது இறுதி நாளுக்கான ஆட்டத்தின் முடிவு நேரம் வந்தது. இதனால், போட்டி சமநிலை அடைந்தது.
ஸ்கோர் விபரம்
Add Galle vs Dambulla Full Score Card Here
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.
கண்டி எதிர் கொழும்பு
அம்பந்தோட்டையில் இடம்பெற்ற கண்டி, கொழும்பு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியின் இறுதி நாளில் மழையின் காரணமாக நான்கு ஓவர்கள் மாத்திரமே வீச முடியுமாக இருந்ததுடன், ஆட்டமும் சமநிலை அடைந்தது.
>>பெட் கம்மின்ஸின் உபாதையால் மாலிங்கவுக்கு மும்பை அணியில் வாய்ப்பு கிட்டுமா? <<
ஞாயிற்றுக்கிழமை (8) ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் இறுதி நாளின் எஞ்சிய ஆட்டமும் மழையினால் கைவிடப்படும் போது கண்டி (270), கொழும்பு (138) ஆகிய அணிகளின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து மீண்டும் இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த கண்டி அணி 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. கண்டி அணியின் இரண்டாம் இன்னிங்சுக்கான துடுப்பாட்டத்தில் மஹேல உடவத்த 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
ஸ்கோர் விபரம்
Add Kandy vs Colombo Full Score Card Here
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.
தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் சுபர் – 4 மாகாண கிரிக்கெட் தொடரின் போட்டி முடிவுகளின் அடிப்படையில் அணிகளுக்கான தரவரிசையில் காலி அணி 24.55 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.