இலங்கை கிரிக்கெட் சபை உள்ளுர் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் ‘பௌலர்’ எனப்படும் பந்து வீசும் இயந்திரங்களை கிரிக்கெட் விளையாட்டில் முன்னியிலையில் உள்ள 24 அணிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு இன்று நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியின் போது, A பிரிவை சார்ந்த 14 அணிகளுக்கும், B பிரிவை சார்ந்த 10 அணிகளுக்கும் இவை கையளிக்கப்பட்டன.
குறிப்பிட்ட 24 கிரிக்கெட் விளையாட்டு கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியிருந்த பிரதிநிதிகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் குறித்த செயல்முறை தொடர்பாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசிய இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் திரு. திலங்க சுமதிபால அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ”நாங்கள் இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தியில் பாடசாலைகள் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வலையமைப்பின் முக்கியத்துவம் குறித்து நன்றாக அறிந்துள்ளோம். மேலும், இலங்கை கிரிக்கெட் சபை துணைத்தலைவர் திரு. மதிவாணன் வழிகாட்டலின் கீழ் குறிப்பிட்ட 24 கிரிக்கெட் விளையாட்டு கழகங்களுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் “அதே நேரம், இலங்கை தேசிய பயிற்சியாளர் அணி, உள்ளூர் மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு அபிவிருத்தியின் அவசியத்தை அடையாளம் கண்டுள்ளதோடு இதன் முதல் படியாக பந்து வீசும் இயந்திரங்களை வழங்கும் திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளோம். மேலும், எதிர்காலத்தில் உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டு கழகங்களுக்கு தரமான கிரிக்கெட் ஆடுகளங்களை அமைப்பதற்கு தேவையான ரோலர் இயந்திரங்களையும் மற்றும் மைதான புல் வெட்டும் இயந்திரங்களையும் வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
கெளரவ திலங்க சுமதிபால மேலும் கூறுகையில், ”முன்னிலையில் உள்ள 14 கிரிக்கெட் கழகங்களுக்கு 11 மில்லியன் ரூபாய்களை நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். அத்துடன், B பிரிவை சேர்ந்த 10 கழகங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து கொடுக்கும் நோக்கங்களுக்காக 9 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய இலங்கை கிரிக்கெட் சபையின் துணைத் தலைவர் திரு. மதிவாணன் குறிப்பிடுகையில், ”உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும். இலங்கையில் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளுக்கு உகந்த காலமாக நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் இறுதியில், இலங்கை கிரிக்கெட் சபை அங்கு பிரசன்னமாகியிருந்த அனைத்து கழக பிரதிநிதிகளுக்கும் தேவையின்படி அந்தந்த குறிப்பிட்ட ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
பின்னர், SSC மைதானத்தில், இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் துணைத் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் அங்கு பிரசன்னமாகியிருந்த நிலையில் பந்து வீசும் இயந்திரங்கள் பரீட்சித்து காண்பிக்கப்பட்டது.
பந்து வீசும் இயந்திரங்கள் வழங்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு கழகங்கள் வருமாறு
A பிரிவு
சின்ஹல விளையாட்டுக் கழகம்(SSC), கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (CCC), இராணுவ கிரிக்கெட் கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகம், சிலாபம் மெரியன்ஸ் கழகம், NCC, ராகம கிரிக்கெட் கழகம், ப்ளூம் பீல்ட் கிரிக்கெட் கழகம், படுரேலிய கிரிக்கெட் கழகம், தமிழ் யூனியன் மெய்வலுன்னர் மற்றும் கிரிக்கெட் கழகம், மூவர்ஸ் விளையாட்டு கழகம், காலி கிரிக்கெட் கழகம், சரசன்ஸ் விளையாட்டு கழகம், BRC கழகம்
B பிரிவு
கடற்படை விளையாட்டு கழகம், விமானப்படை விளையாட்டு கழகம், குருநாகல YCC, லங்கன் CC, களுதர டவுன் கழகம், பொலிஸ் விளையாட்டு கழகம், இலங்கை துறைமுக அதிகாரசபை கழகம், களுதர P&C மற்றும் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்