இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தி வருகின்ற மாகாண ரீதியிலான சுபர் – 4 முதல்தர கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டத்துக்கான போட்டிகள் இன்று (01) நடைபெற்றன.
கொழும்பு எதிர் காலி
இந்த ஆட்டத்தில் கொழும்பு அணிக்காக லஹிரு திரிமான்ன சதம் கடந்த போதிலும், காலி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சு போட்டியின் ஆதிக்கத்தை தொடர்ந்தும் அவர்களுக்கே சொந்தமாக்கி வைத்திருக்கின்றது.
ஹம்பந்தோட்டையில் இடம்பெற்று வருகின்ற போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில், காலி அணியின் மிகச்சிறந்த முதல் இன்னிங்சினை (476) அடுத்து தம்முடைய முதலாம் இன்னிங்சினை ஆரம்பித்த கொழும்பு அணி 102 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. தனன்ஞய டி சில்வா 53 ஓட்டங்களுடனும், லஹிரு திரிமான்ன 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்றனர்.
இரண்டாம் நாள் முடிவில் காலி, தம்புள்ளை அணிகள் வலுவான நிலையில்
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் மாகாண அணிகளுக்கு இடையிலான ‘சுப்பர்-4’ .
போட்டியின் மூன்றாம் நாளில் துடுப்பாட்டத்தை தொடர்ந்த கொழும்பு அணியில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் டில்ஷாத் ஆரம்பத்திலேயே தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார். இதனால் கொழும்பு அணிக்கு நம்பிக்கை தந்த சில்வா 13 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு நடந்திருந்தார்.
இதனையடுத்து துடுப்பாட வந்த கொழும்பு அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், சாமர சில்வா ஆகியோர் அகில தனன்ஞயவின் சுழலுக்கு விரைவாக இரையாகினர். அதனை அடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. எனினும், லஹிரு திரிமான்ன பொறுமையான முறையில் அரைச்சதம் ஒன்றினை தாண்டி அணிக்கு வலுச்சேர்த்தார்.
திரிமான்னவுக்கு கவிஷ்க அஞ்சுல கைகொடுக்க, கொழும்பு அணியின் 8 ஆம் விக்கெட்டுக்காக 81 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. இந்த இணைப்பாட்டத்திற்குள் திரிமான்ன அவருடைய 16ஆவது முதல்தர சதத்தினை நிறைவு செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து எட்டாம் விக்கெட்டாக 46 ஓட்டங்களுடன் கவிஷ்க அஞ்சுல ஓய்வறை நடக்க, 95.3 ஓவர்களில் அனைத்து துடுப்பாட்ட வீரர்களினையும் இழந்த கொழும்பு அணி 333 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பெற்றுக் கொண்டது.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்ற லஹிரு திரிமான்ன 125 ஓட்டங்களினை பெற்றிருந்தார். மறுமுனையில் காலி அணியின் பந்துவீச்சு சார்பாக அகில தனன்ஞய 3 விக்கெட்டுக்களையும் மொஹமட் டில்ஷாத் மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
தாய்நாட்டுக்கு ஆட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மறுத்த குசல் பெரேரா
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய உப அணித் தலைவர் .
இதனையடுத்து எதிரணியினை விட 143 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த காலி அணி விக்கெட் இழப்பின்றி ஒரு ஓட்டத்தினை மாத்திரம் பெற்றுக் கொண்ட போது போட்டியினை நடாத்த போதிய வெளிச்சம் இல்லாது போக, இன்றைய நாளுக்கான ஆட்டம் கைவிடப்பட்டது.
மூன்றாம் நாள் ஸ்கோர் விபரம்
கண்டி எதிர் தம்புள்ளை
நிரோஷன் திக்வெல்ல தலைமையிலான கண்டி அணியும் திமுத் கருணாரத்ன தலைமையிலான தம்புள்ளை அணியும் மோதி வருகின்ற இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு சாதமாக மாறியிருந்தது. இன்று இரண்டு அணிகளினாலும் மொத்தமாக 14 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருந்தன.
கட்டுநாயக்கவில் இடம்பெற்று வருகின்ற இந்த ஆட்டத்தில் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் தம்புள்ளை அணியின் முதல் இன்னிங்சை அடுத்து தம்முடைய முதல் இன்னிங்சில் துடுப்பாடிய கண்டி அணி 64.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது. கண்டி அணித் தலைவர் நிரோஷன் திக்வெல்ல அரைச்சதம் (55) தாண்டிய நிலையிலும் பிரியமல் பெரேரா 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.
மூன்றாம் நாளில் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த கண்டி அணிக்கு நிரோஷன் திக்வெல்ல சதம் கடந்து பெறுமதி சேர்த்தார். அதோடு மறுமுனையில் ஆடிய பிரியமல் பெரேராவும் அரைச்சதம் (62) ஒன்றினைப் பெற்றார்.
இவர்கள் இருவரினதும் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த கண்டி அணி சடுதியாக தமது ஏனைய துடுப்பாட்ட வீரர்களினையும் இழந்து 104.2 ஓவர்களில் 364 ஓட்டங்களினை மாத்திரம் பெற்றுக் கொண்டது. கண்டி அணியின் இறுதி 7 விக்கெட்டுக்களும் வெறும் 56 ஓட்டங்களுக்குள் வீழ்ந்திருந்தது.
ரொஷேன் சில்வா, தசுன் சானக்கவின் அபாரத்தோடு மீண்ட காலி அணி
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாகாண அணிகளுக்கு .
கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் இளம் நட்சத்திரமான நிரோஷன் திக்வெல்ல 154 பந்துகளுக்கு 10 பெளண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களினை குவித்திருந்தார். இது திக்வெல்லவின் 10ஆவது முதல்தர அரைச்சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்புள்ளை அணியின் பந்துவீச்சு சார்பாக லஹிரு கமகே 71 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், சசித்ர சேரசிங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
தொடர்ந்து 116 ஓட்டங்கள் முன்னிலையோடு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தம்புள்ளை அணி போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், 163 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. எனினும், எதிரணியினை விட 279 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருப்பதனால் தம்புள்ளை அணி ஸ்தீர நிலையிலேயே உள்ளது.
தம்புள்ளை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக திமுத் கருணாரத்ன 40 ஓட்டங்களை குவிக்க, லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கண்டி அணி சார்பில் கைப்பற்றியிருந்தனர்.
மூன்றாம் நாள் ஸ்கோர் விபரம்
இரண்டு போட்டிகளினதும் நான்காவதும் இறுதியுமான நாள் நாளை தொடரும்.






















