IPL தொடர் இலங்கையில் நடத்தப்படுமா?

200
IPL

கொவிட்-19 வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரினை, இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்தால், குறித்த விடயத்துக்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.

இணையம் வழியாக கிரிக்கெட் சொல்லிக் கொடுக்கும் டோனி, அஸ்வின்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு

இந்திய கிரிக்கெட் சபை (BCCI) ஐ.பி.எல். தொடரை ஒத்திவைக்கவுள்ளதாக நேற்றைய தினம் (16) அறிவித்திருந்தது. ஐ.பி.எல். தொடர் கடந்த மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்தது. எனினும், கொவிட்-19 வைரஸ் காரணமாக தொடர் நேற்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இதனிடையில், கொவிட்-19 வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் எதிர்வரும் 3ம் திகதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், காலவரையின்றி தொடரை ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஐ.பி.எல். தொடரை இலங்கையில் நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளும் பட்சத்தில், இந்திய கிரிக்கெட் சபைக்கு முழு ஆதரவையும் வழங்க தயார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா லங்காதீப ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

சம்மி சில்வா மேலும் குறிப்பிடுகையில், “ஐ.பி.எல். தொடர் நிறுத்தப்படுமாயின், தொடரின் பங்குதாரர்களுக்கு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நஷ்டம் ஏற்படும். எனவே, 2009ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் ஐ.பி.எல். தொடரை நடத்தியது போல், மற்றுமொரு நாட்டில் தொடரை நடத்த முடியும்”

எனவே, நாம் இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பை தர விருப்பம் தெரிவித்துள்ளோம். அதனை இந்திய கிரிக்கெட் சபை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்திய கிரிக்கெட் சபை கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தயாராகவுள்ளோம்.  

அதுமாத்திரமின்றி இலங்கையில் உள்ள சுகாதார பிரிவினரின் அனுமதி மற்றும் அவர்களுக்கு கீழ்பட்ட கண்காணிப்புடன் இந்த போட்டித் தொடரை நடத்துவதற்கும் நாம் வசதிகளை மேற்கொள்வோம். இந்த தொடரை இலங்கையில் நடத்தும் பட்சத்தில், நாட்டுக்கும், கிரிக்கெட் சபைக்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்” என்றார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையின் இந்த யோசனை   இந்திய கிரிக்கெட் சபைக்கு வழங்கப்பட்டுள்ள போதும், இதற்கான பதிலை இதுவரையில் இந்திய கிரிக்கெட் சபை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க