பாகிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை

671

நேற்று நடைபெற்று முடிந்த சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை அபாரமாக வெற்றி கொண்ட பாகிஸ்தான் அணி, தொடரின் சம்பியனாகியது. இந்நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு இலங்கை கிரிக்கெட் சபை தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இலங்கை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றுக் குழு சார்பாக 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றியீட்டிய பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்தியாவை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை சுவீகரித்த பாகிஸ்தான்

உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்..

இறுதி நிமிடம் வரை யார் வெற்றியீட்டுவார் எனக் கூற முடியாது என்பதை நேற்றைய தினம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி  மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது. விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த தொடரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடுகளத்திலும் பல்வேறு சிறந்த திறமைகளும் சிறந்த முடிவுகளும் பதிவாகின.

அந்த வகையில், பாகிஸ்தான் அணி இந்த தொடர் முழுவதும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அதனையிட்டு அண்டை நாடான நாமும் ஒரு ஆசிய நாடென்ற வகையில் பெருமை கொள்கின்றோம்.  

கிரிக்கெட் என்பது எமது இதயத் துடிப்பு. எங்களுடைய நாட்டின் அபிமானம். பாகிஸ்தான் நாட்டுக்கு இந்த நாள் அளவிட முடியாத  மகிழ்ச்சியான நாள். மீண்டுமொருமுறை பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமத் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

திரு. திலங்க சுமதிபால