இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் சுப்பர் 8 சுற்று போட்டிகள் வியாழக்கிழமை (25) ஆரம்பமாகின.
கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் நடைபெற்ற ஆரம்ப சுற்று போட்டிகளில் விளையாடிய 14 அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்றன. இதில் இரு குழுக்களிலும் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகளே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
லீக் அடிப்படையில் நடைபெறும் சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் முதல் சுற்றை போலன்றி நான்கு நாள் ஆட்டமாகவே நடைபெறுகின்றன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி சுப்பர் 8 சுற்று போட்டிகள் முடிவடையவுள்ளன. இந்த போட்டிகள் இளஞ்சிவப்பு பந்துகளில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இளையோர் உலகக் கிண்ண பிளேட் இறுதிப்போட்டியில் இலங்கை
மறுபுறம் முதல் சுற்றில் இரு குழுக்களிலும் கடைசி இடங்களை பெற்ற மொத்தம் ஆறு அணிகளும் பங்கேற்கும் பிளேட் கேடயத்திற்கான போட்டிகள் வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமாகவுள்ளன. பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ள இந்த போட்டிகளும் லீக் அடிப்படையில் நடைபெறவுள்ளன. எனினும் கடந்த முறை பிளேட் கேடயத்தை வென்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் இம்முறை சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.
சுப்பர் 8 சுற்றின் வியாழக்கிழமை ஆரம்பமான நான்கு போட்டிகளின் விபரம் வருமாறு:
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்
இம்முறை பிரமியர் லீக் தொடரில் அதிகூடிய ஓட்டங்கள் பெற்று முதல் இரு இடங்களில் இருக்கும் ஓஷத பெர்னாண்டோ மற்றும் சச்சித்ர சேரசிங்கவின் சதங்கள் மூலம் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக சிலாபம் மேரியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
பிரீமியர் லீக் முதல் சுற்றில் B குழுவில் முதலிடத்தை பிடித்த சிலாபம் மேரியன்ஸ் அணி சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் A குழுவில் நான்காவது இடத்தை பிடித்த செரசன்ஸ் அணியை எதிர்கொண்டது.
கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் சிலாபம் மேரியன்ஸ் அணியை துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு முதல் வரிசையில் வந்த ஓஷத பெர்னாண்டோ தொடரில் மூன்றாவது சதத்தை பெற்றார். அபாரமாக ஆடிய அவர் 112 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இம்முறை தொடரில் மொத்தம் 722 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோன்று சச்சித்ர சேரசிங்கவும் தொடரில் தனது 3 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 105 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார். பிரீமியர் லீக் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் அவர் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறார்.
அதிரடி வெற்றியுடன் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை
இதன்படி முதல்நாள் ஆட்ட நேர முடிவின் போது தனது முதல் இன்னிங்சை ஆடும் சிலாபம் மேரியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 312/5 (89.5) – ஓஷத பெர்னாண்டோ 112, சச்சித்ர சேரசிங்க 105*, அஷேன் சில்வா 47
SSC எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்
இலங்கை துறைமுக அதிகாரசபை அணியை 165 ஓட்டங்களுக்கு சுருட்டிய SSC அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது.
பிரீமியர் லீக் முதல் சுற்றில் A குழுவில் முதலிடத்தைப் பிடித்த SSC அணி கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் ‘சுப்பர் 8’ இல் தனது முதல் ஆட்டத்தில் களமிறங்கியது. எனினும் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய துறைமுக அதிகாரசபை அணி குறுகிய இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணிக்காக கிஹான் ரூபசிங்க அதிகபட்சமாக 36 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த SSC அணிக்காக அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா மீண்டும் சிறப்பாக செயற்பட்டார். ஆட்டமிழக்காது 93 ஓட்டங்களுடன் இருக்கும் அவர் தொடரில் தனது 3 ஆவது சதத்தை நெருங்கியுள்ளார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது SSC அணி தனது முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 165 (44.2) – கிஹான் ரூபசிங்க 36, யொஹான் டி சில்வா 24, யஷோத லங்கா 21, தசுன் ஷானக்க 3/26, ஜெப்ரி வென்டர்சே 3/28, சசித்ர சேனநாயக்க 3/40
SSC (முதல் இன்னிங்ஸ்) – 186/3 (43) – கௌஷால் சில்வா 93*, மிலிந்த சிறிவர்தன 49, மினோத் பானுக்க 20
BRC எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் BRC அணி 300 ஓட்டங்களை கடந்துள்ளது. பின்வரிசையில் வந்த சஷின் டில்ரங்க அபாரமாக துடுப்பெடுத்தாடி தனது கன்னி சதத்தை பெற்றார்.
கோல்ட்ஸ் அணியால் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட BRC அணி 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஜோடி சேர்ந்த சஷின் டில்ரங்க மற்றும் ஹஷேன் ராமனாயக்க 138 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று தமது அணிக்கு வலுச்சேர்த்தனர். ஹஷேன் ராமனாயக்க 66 ஓட்டங்களை பெற்றதோடு சஷின் டில்ரங்க 124 ஓட்டங்களை குவித்தார்.
மாலிங்கவைப் போல பந்துவீசும் தமிழ்நாட்டு வீரர் அதிசயராஜ்
முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது BRC அணி 9 விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்களை பெற்றுள்ளது. கோல்ட்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் நிசல தாரக்க அதிரடியாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சுருக்கம்
BRC (முதல் இன்னிங்ஸ்) – 310/9 (89) – சஷின் டில்ரங்க 124, ஹஷேன் ராமனாயக்க 66, ஹர்ஷ விதான 41, நிசல தாரக்க 5/71, பிரபாத் ஜயசூரிய 62/2
NCC எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பூஜ்யத்திற்கு ஆட்டமிழந்த நிலையில் சுதாகரித்து ஆடிய NCC அணி ராகம கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்களை குவித்தது.
கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய NCC அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மாலிங்க அமரசிங்க மற்றும் லஹிரு உதார இருவரும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தனர். எனினும் மத்திய வரிசையில் வந்த சதுரங்க டி சில்வா 90 ஓட்டங்களை பெற்று கைகொடுத்தார்.
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சார்பாக சிறப்பாக பந்துவீசிய இசுரு ஜயரத்ன 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
போட்டியின் சுருக்கம்
NCC (முதல் இன்னிங்ஸ்) – 247 (76.1) – சதுரங்க டி சில்வா 90, சாமிக்க கருணாரத்ன 32, பர்வீஸ் மஹ்ரூப் 24, சதுன் வீரக்கொடி 24, தரிந்து கௌஷால் 23*, இசுரு ஜயரத்ன 4/46, அமில அபொன்சோ 3/72, ஜனித் லியனகே 2/41
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 55/1 (11) – உதார ஜயசுந்தர 26, ஷெஹான் பெர்னாண்டோ 23
நான்கு போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.