பிரீமியர் லீக் தொடரில் பாணந்துறை விளையாட்டுக் கழகம் மற்றும் களுத்துறை பௌதிக கலாசார கழக அணிகள் மோதிக் கொண்ட ‘B’ மட்டத்திற்கான போட்டி இன்று நிறைவு பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய களுத்துறை பௌதிக கலாசார கழகம் சார்பில் நான்கு வீரர்கள் அரைச்சதம் கடந்தனர்.
கிறிஸ் கெயில், பொல்லார்ட், மஹேல ஆகியோரை வழிநடாத்தவுள்ள குமார் சங்கக்கார!
அணித்தலைவர் மனோஜ் தேஷப்ரிய மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கேஷான் விமலதர்ம ஆகியோர் 80 ஓட்டங்களை கடந்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதன்படி களுத்துறை பௌதிக கலாசார அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 390 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் அசத்திய கயான் சிரிசோம 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து களமிறங்கிய பாணந்துறை விளையாட்டுக் கழக அணியும் சிறப்பாக துடுப்பெடுத்தியதுடன், துரிதமாக ஓட்டங்கள் குவிப்பதில் கவனம் செலுத்தியது. தொடக்க வீரர் லசித் பெர்னாண்டோ சதம் குவித்த நிலையில் 111 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், ஹசந்த பெர்னாண்டோ 92 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மாதவ நிமேஷ் 26 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 55 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்றார்.
பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ருச்சிர தரிந்திர 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாணந்துறை அணியினர் முதல் இன்னிங்சில் 423 ஓட்டங்களை குவித்து 33 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டனர்.
இன்றைய தினம் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய களுத்துறை பௌதிக கலாசார அணியும் வேகமாக ஓட்டங்களை குவிக்க தொடங்கியது. அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ரசிக பெர்னாண்டோ 61 பந்துகளில் 14 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 98 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மீண்டும் பந்து வீச்சில் அபாரமாக செயற்பட்ட கயான் சிரிசோம 6 விக்கெட்டுகளை பதம்பார்க்க, களுத்துறை பௌதிக கலாசார அணி 22.5 ஓவர்களில் 197 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணித் தலைவராக உபுல் தரங்க: வீரக்கொடி மற்றும் மதுஷங்க ஒருநாள் குழாமில்
போட்டி நிறைவடைய 18 ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்திற்கு 165 என்ற ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சவாலான இலக்கை அதிரடியாக துரத்திப் பிடித்த, அவ்வணி 13.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் வெற்றி இலக்கை கடந்தது.
மாதவ நிமேஷ் 25 பந்துகளில் 8 பௌண்டரிகள் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 61 ஓட்டங்கள் விளாசினார். களுத்துறை பௌதிக கலாசார அணி சார்பாக ருச்சிர தரிந்திர 3 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.
கயான் சிரிசோம இப்போட்டியில் மொத்தமாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், முதற்தர போட்டிகளில் 500 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டவர்களின் பட்டியலில் இணைந்து கொண்டார்.
போட்டியின் சுருக்கம்
களுத்துறை பௌதிக கலாசார கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 390 (103) – மனோஜ் தேஷப்ரிய 89, கேஷான் விமலதர்ம 87, அமல் பீரிஸ் 77, தமிது அஷான் 67, கயான் சிரிசோம 7/131
பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 423 (68.3) – லசித் பெர்னாண்டோ 111, ஹசந்த பெர்னாண்டோ 92, மாதவ நிமேஷ் 55, சரித புத்திக 45, நிமேஷ் விமுக்தி 41, ருச்சிர தரிந்திர 5/102
களுத்துறை பௌதிக கலாசார கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 197 (22.5) – ரசிக பெர்னாண்டோ 98, கயான் சிரிசோம 6/88
பாணந்துறை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 167/7 (13.4) – மாதவ நிமேஷ் 61, நிச்சல் ரந்திக 41, அருண தர்மசேன 38, ருச்சிர தரிந்திர 3/80
முடிவு: பாணந்துறை விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுகளினால் வெற்றி.
அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்
- பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 17.84
- களுத்துறை பௌதிக கலாசார கழகம் – 5.49
மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க