இன்னிங்ஸ் வெற்றியுடன் முன்னேறும் இலங்கை துறைமுக அதிகாரசபை அணி

492
SLPA, Police and Panadura register wins

இலங்கை பிரிமியர் லீக் தொடரின் B மட்ட அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் இன்று நிறைவுற்றுள்ளன. அவற்றில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம், பாணதுறை விளையாட்டுக் கழகம் ஆகியவை இன்னிங்ஸ் வெற்றியினை தம்வசப்படுத்தியுள்ள அதேவேளை பொலிஸ் விளையாட்டுக் கழகம் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தினை இலகுவாக வெற்றிகொண்டுள்ளது.

களுத்துறை நகர கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டுக் கழகம்

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த இலங்கை துறைமுக அதிகாரசபை அணி, 84 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 335 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமது முதல் இன்னிங்சினை நிறுத்திக்கொண்டது.

இன்றும் தொடர்ந்து ஆட்டமிழக்காமல் நின்றிருந்த யோகன் டி சில்வா, 6 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் உள்ளடங்களாக 165 ஓட்டங்களை இலங்கை துறைமுக அதிகார சபை அணிக்காக  விளாசியிருந்தார். கீத் பெரேரா களுத்துறை நகர கழக அணிக்காக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், 179 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சினை தொடர்ந்த களுத்துறை விளையாட்டு கழக அணி ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை பறிகொடுத்து இக்கட்டான நிலைமைக்கு உள்ளாகியது.

இருப்பினும் நடு வரிசை வீரர்களான நிப்புன கமகே (43), யோகன் டி சில்வா (ரஷ்மிக்க) (51) ஆகியோர் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க ஓரளவு போராடினர். எனினும் அவர்களின் போராட்டம் தோல்வியில் நிறைவுற 55.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களினை மாத்திரம் பெற்ற களுத்துறை விளையாட்டுக் கழக அணி இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்களால் துறைமுக அதிகாரசபையிடம் தோல்வியை தழுவியது. பந்து வீச்சில் இன்று சமிகர எதிரிசிங்க 5 விக்கெட்டுகளை துறைமுக அதிகாரசபைக்காக கைப்பற்றியிருந்தார்.

ஏற்கனவே களுத்துறை நகர கழகம் தமது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இப்போட்டியில், வெற்றி பெற்றதன் மூலம் இத்தொடரில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாத இலங்கை துறைமுக அதிகாரசபை அணி, தனது நான்காவது தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்துகொண்டுள்ளதுடன், இப்போட்டியின் வெற்றிக்காக 18.68 புள்ளிகளை அவ்வணி பெற்றுக்கொண்டுள்ளது. இப்போட்டிக்காக களுத்துறை நகர சபை அணிக்கு 3.11 புள்ளிகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம்(முதல் இன்னிங்ஸ்): 156 (66.5), சுலான் ஜயவர்தன 38, சமோத் சில்வா 30, சமிகர எதிரிசிங்க 40/4, ஒமேஷ் விஜயவர்தன 23/3,

இலங்கை துறைமுக அதிகார சபை(இரண்டாவது இன்னிங்ஸ்): 335/7d (84), யோஹன் டி சில்வா 165*, ஹசன் குணத்திலக்க 71, பிரஷான் விக்கிரமசிங்க 44, கீத் பெரேரா 109/5

களுத்துறை நகர கழகம்(இரண்டாவது இன்னிங்ஸ்): 166 (55.4), யோஹன் டி சில்வா (ரஷ்மிக்க) 53, நிப்புன கமகே 43, சமிகர எதிரிசிங்க 34/5

போட்டி முடிவுஇலங்கை துறைமுக அதிகாரசபை அணி இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்களினால் வெற்றி


பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம்

பலோவ் ஒன் முறையில் மீண்டும் இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட இந்தப்போட்டி மூன்றாவது நாளான இன்று தொடர்ந்தது.

இன்றைய ஆட்டத்தில் களத்தில் நின்ற ரொஸ்கோ தட்டில் மாத்திரம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க ஓரளவு முயற்சித்து 45 ஓட்டங்கள் வரை பெற்றிருந்த போதும், இலங்கை விமானப்பபடையின் ஏனைய வீரர்கள் பாணதுறை விளையாட்டு கழகத்தின் சுழலினை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறினர். எனவே அவ்வணி சகல விக்கெட்டுகளையும் 134 ஓட்டங்களிற்கு பறிகொடுத்தது. இதனால், மேலதிக 49 ஓட்டங்களினால் இலங்கை விமானப்படை, பாணதுறை அணியிடம் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவிக்கொண்டது.

பாணதுறை அணியின் சார்பாக பந்து வீச்சில், இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக செயற்பட்ட இடது கை சுழல் பந்து வீச்சாளர் கயான் சிறிசோம 4 விக்கெட்டுகளையும், லசித் பெர்னாந்து, நிமேஷ் விமுக்தி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றிக்கொண்டனர்.

இப்போட்டியில், வெற்றி பெற்றதன் மூலம் பாணதுறை விளையாட்டுக் கழகம் 18.6 புள்ளிகளை பெற்று B மட்ட அணிகள் இடையிலான புள்ளி அட்டவணையில் முதல் இடத்தில் நீடிக்கும் இவ்வேளையில், இலங்கை விமானப்படை அணிக்கு 2.86 புள்ளிகள் கிடைத்துள்ளன.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டுக் கழகம்(முதல் இன்னிங்ஸ்): 320 (76.3), நிசல் ரன்திக்க 94, மதவ்வ நிமேஷ் 58, மிஷன் சில்வா 44, புத்திக்க சந்தருவான் 64/4, லக்ஷன் சந்தருவன் 56/2

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம்(முதல் இன்னிங்ஸ்): 137 (34.4), ரங்க திசநாயக்க 33, லக்ஷன் பெர்னாந்து 28, கயான் சிறிசோம 56/7

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் f/o (இரண்டாவது இன்னிங்ஸ்): 134 (34.4), ரொஸ்கோ தட்டில் 45, சஹான் ஜயவர்த்தன 21, கயான் சிறிசோம 79/4, நிமேஷ் விமுக்தி 6/3, லசித் பெர்னாந்து 28/3

போட்டி முடிவுபாணதுறை விளையாட்டு கழகம் இன்னிங்ஸ் மற்றும் 49 ஓட்டங்களினால் வெற்றி


குருநாகல் விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இரண்டு நாட்களுக்கு முன்னர் (28) ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில், 56 ஓட்டங்களே மேலதிகமாக வெற்றி பெற தேவை என்ற நிலையில், 2 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களினை பொலிஸ் விளையாட்டு கழகம் பெற்றிருந்தவாறு நேற்றைய போட்டியின் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.

இதனையடுத்து, இன்று வெற்றி இலக்கினை நோக்கி பயணத்தினை தொடர்ந்த பொலிஸ் அணி, அகில லக்ஷனின் அரைச்சதத்துடன்(51), 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 96 ஓட்டங்களினைப்பெற்று இலகுவாக வெற்றியிலக்கினை அடைந்தது, இதன்மூலம் அவ்வணி இலங்கை பிரிமியர் லீக்கில் தனது இரண்டாவது வெற்றியினை பதிவுசெய்துகொண்டுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெற்றதற்காக, பொலிஸ் விளையாட்டு கழகத்திற்கு 16.22 புள்ளிகள் கிடைக்கப்பெற்றதுடன், குருநாகல் இளையோர் கழகத்திற்கு 3.17 புள்ளிகள் கிடைக்கப்பெற்றன.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்(முதல் இன்னிங்ஸ்): 109 (40.5), ருவன்த ஏக்கநாயக்க 43, அனுருத்த ராஜபக்ஷ 24, சுவஞ்சி மதநாயக்க 20/3, சாருக்க விஜயலத் 30/3

பொலிஸ் விளையாட்டுக் கழகம்(முதல் இன்னிங்ஸ்): 148 (63.3), மஹேஷ் பிரியதர்ஷன 42, தினுஷ பெர்னாந்து 25, திலின ஹேரத் 48/8

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்(இரண்டாவது இன்னிங்ஸ்): 134 (37), அனுருத்த ராஜபக்ஷ 31, தனுஷ்க தர்மசிரி 30, கல்யான ரத்னப்பிரிய 36/8

பொலிஸ் விளையாட்டுக் கழகம்(இரண்டாவது இன்னிங்ஸ்): 96/3(22.5), அகில லக்ஷன் 51, தரிந்து தில்ஷான் 17, தர்ஷன மஹாவத்த 35/2

போட்டி முடிவுபொலிஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி