சுவாரசியமாக இடம்பெற்று வரும், இலங்கை பிரீமியர் லீக்கின் B மட்ட கழக அணிகளுக்கு இடையிலான போட்டிகளில், இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம், களுத்துறை நகர கழக அணி, லங்கன் கிரிக்கெட் கழகம் ஆகியவை வலுப்பெற்றுள்ளன.

இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை பெளதீக கலாசார அணி

மழையின் குறுக்கீடு காரணமாக இடையிடையே நிறுத்தப்பட்ட இப்போட்டியின் இன்றைய இரண்டாம் நாளில், குறைவான ஓவர்களே வீசப்பட்டிருந்தன.

இன்று தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த களுத்துறை பெளதீக கலாசார கழக அணி, விமானப்படை பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. எனினும், எட்டாவது விக்கெட்டுக்காக மனோஜ் தேசப்பிரிய, ருச்சிர தரிந்த ஆகியோரால் பகிரப்பட்ட 62 ஓட்டங்கள் காரணமாக, இன்றைய ஆட்ட நேர நிறைவின்போது 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து அவ்வணி 160 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ரொஸ்கோ தட்டில், லக்மல் ஆகியோரின் அபார சதங்களுடன் வலுப்பெற்றுள்ள விமானப்படை அணி

பந்து வீச்சில், விமானப்படை அணியிக் இடது கை வேகப்பந்து வீச்சாளரான சஹான் ஜயவர்தன மூன்று விக்கெட்டுக்களையும், அச்சிர எரங்க மற்றும் மிலன் பிரியநாத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் சாய்த்தனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் : 426/9d – (79.2)  ரொஸ்கோ  தட்டில் 175, லஹிரு சிறி லக்மல் 115, ஹஷான் ஹர்சன ஜேம்ஸ் 33, ருச்சிர தரிந்த 98/4

களுத்துறை பெளதீக கலாசார கழகம்: 160/9 (51.3) மனோஜ் தேசப்பிரிய 33, ருச்சிர தரிந்த 29, சஹான் ஜயவர்த்தன 36/3


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்

நேற்று வலுப்பெற்றிருந்த லங்கன் கிரிக்கெட் கழகம், இன்றைய நாளில் குறைவான ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து 436 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்துக்கொண்டது.

பந்து வீச்சில், சிறப்பாக செயற்பட்ட சுழல் வீரர்களான மதுர மதுசங்க மற்றும் சுதாரக்க தக்ஷின ஆகியோர் மொத்தமாக தலா மூன்று விக்கெட்டுக்களை கடற்படை அணிக்காக கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகத்தில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அவிஷ்க பீரிஸ் (84), மதுர மதுசங்க(88) ஆகியோர் அரைச்சதம் கடந்தனர். இதனால் கடற்படை அணியானது இன்றைய இரண்டாம் நாள் நிறைவில், 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம்: 436 (109.2) லக்ஷன் ரொட்ரிகோ 133, சஷீன் பெர்னாந்து 96, சாணக்க ருவன்சிரி 67, மதுர மதுசங்க 59/3, சுதாரக்க தக்ஷின 101/3

இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்: 221/3 (70) மதுர மதுசங்க 88, அவிஷ்க பீரிஸ் 84, ரஜீவ வீரசிங்க 42/2


களுத்துறை நகர கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இப்போட்டியின் இரண்டாம் நாளான இன்று, களுத்துறை நகர கழக அணித்தலைவர் சுலான் ஜயவர்தன (101) பெற்றுக்கொண்ட அவரது கன்னி சதத்துடன், களுத்துறை நகர கழகம் தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில், பொலிஸ் அணியின் சுவஞ்சி மதநாயக்க, மஞ்சுல ஜயவர்த்தன ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர், ஆரம்ப வீரரான அசேல அளுத்கே பெற்றுக்கொண்ட 62 ஓட்டங்களின் துணையுடன் பொலிஸ் அணி, 4 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக பெற்றிருந்த போது போட்டியின் இன்றைய ஆட்ட நேரம் நிறைவுற்றது.

இன்று பறிபோன விக்கெட்டுக்களில், மூன்றினை யோஹன் டி சில்வா (ரஷ்மிக்க) 27 ஓட்டங்களிற்கு களுத்துறை நகர கழகத்திற்காக சுருட்டியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம்: 307 (116.2) சுலான் ஜயவர்த்தன 101, தரிந்து சிறிவர்த்தன 58, நிப்புன கமகே 43, சுவஞ்சி மதநாயக்க 66/3, மஞ்சுல ஜயவர்த்தன 79/3

பொலிஸ் விளையாட்டுக் கழகம்: 183/4 (65) அசேல அளுத்கே 62, சமித் துஷந்த 36*, யோஹன் டி சில்வா(ரஷ்மிக்க) 27/3


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை

இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாணக்க கோமசாரு அதிரடி பந்து வீச்சினை வெளிக்காட்டி, ஆறு விக்கெட்டுக்களை சாய்க்க, குருநாகல் இளையோர் அணி இன்றைய நாளில் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து, 143 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்தது.

அவ்வணியின் துடுப்பாட்டத்தில், ஏனைய வீரர்கள் 20 ஓட்டங்களையேனும் தாண்டாத நிலையில் ஓரளவு போராடிய ஹஷான் பிரபாத் 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பின்னர் திலின ஹேரத், தர்ஷன மஹாவத்த ஆகியோரின் சுழலினால் நிலைகுழைந்த இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம், தமது முதல் இன்னிங்சுக்காக 154 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்த இன்னிங்சில் கயான் மனீஷன் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றார்.

முன்னர் சிறப்பாக பந்து வீசியிருந்த திலின ஹேரத் நான்கு விக்கெட்டுக்களையும், தர்ஷன மஹாவத்த வெறும் 16 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தார்.

இதன் பின்னர், இரண்டாவது இன்னிங்சினையும் இன்றைய நாளில் ஆரம்பித்த குருநாகல் இளையோர் கழக அணி, இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது, ஒரு விக்கெட்டினை இழந்து 23 ஓட்டங்களைப்s பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்(முதல் இன்னிங்ஸ்): 143 (49.3) ஹஷான் பிரபாத் 46, சாணக்க கோமசரு 50/6, சமிகர எதிரிசிங்க 14/2

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்(முதல் இன்னிங்ஸ்): 154 (59.3) கயான் மனீஷன் 47, பிரஷான் விக்கிரமசிங்க 27, திலின ஹேரத் 54/4, தர்ஷன மஹாவத்த 16/3

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்(இரண்டாவது இன்னிங்ஸ்): 23/1 (7)

இந்தப் போட்டிகள் அனைத்தினதும் மூன்றாவதும் மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்