இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரில் களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் மற்றும் குருநாகல இளையோர் கிரிக்கெட் கழக அணிகளுக்கு இடையிலான போட்டியில் களுத்துறை அணி எட்டு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
சானக, ஷனுக்க, சமிகற ஆகியோரின் பந்து வீச்சில் சுருண்ட பொலிஸ் விளையாட்டுக் கழகம்
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரில் B மட்ட அணிகளுக்கான இரண்டு போட்டிகள் இன்று நடைபெற்றன.
களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம்
மூன்று நாட்கள் கொண்ட இந்த போட்டியின், இறுதி நாளான இன்று களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் கீத் பெரேரா மற்றும் மங்கல குமாரவின் சிறந்த பந்து வீச்சின் மூலம் எட்டு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
நேற்றைய தினம் ஆட்ட நிறைவின் போது மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ஓட்டங்களை பெற்றிருந்த களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் 26 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இன்று ஆட்டத்தை தொடர்ந்தது.
இன்றைய நாள் வீசப்பட்ட முதலாவது ஓவரிலேயே 34 ஓட்டங்களுடன் களமிறங்கிய நிபுன கமகே எவ்விதமான மேலதிக ஓட்டங்களையும் பெறாமல் பந்து வீசிய சரித் பண்டாரவிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களுத்துறை நகர விளையாட்டுக் கழக விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழ ஆரம்பித்தன. சிறப்பாக துடுப்பாடிய ரிஷித் உபமால் 130 ஓட்டங்களை களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் சார்பாக கூடிய ஓட்டங்களாக பதிவு செய்து கொண்டார். அத்துடன் கீத் பெரேரா 57 ஓட்டங்களையும், இறுதி விக்கெட்டுக்காக களமிறங்கிய விஹங்க கல்ஹாற ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றுகொண்டார். களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் 105.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 414 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை அணித் தலைவர் சுலான் ஜயவர்தன ஆட்டத்தை நிறுத்தி, குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகத்தை துடுப்பாடுமாறு பணித்தார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் 51 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்று 31 ஓட்டங்களால் முன்னிலை அடைந்தது. அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தாரக வடுகே 76 ஓட்டங்களை கூடிய ஒட்டங்களாக பெற்றுக்கொண்டார். களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் சார்பாக சிறப்பாக பந்து வீசிய கீத் பெரேரா 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
31 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 232 (70.2) – ருவந்த ஏக்கநாயக்க 111, ஹஷான் பிரபாத் 50, தமித் பெரேரா 19, தாரக வடுகே 14, விஹங்க கல்ஹாற 64/3, தறிந்து சிரிவர்தன 20/3, மங்கல குமார 63/2
களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 414/9d (105.2) – ரிஷித் உபமால் 130, கீத் பெரேரா 57, விஹங்க கல்ஹாற 50*, நிபுன கமகே 34, தரிந்து சிரிவர்தன 29, மிதுன் ஜயவிக்ரம 64/3, தமித சில்வா 63/3, லக்ஷான் சோமவீர 116/2
குருநாகல இளையோர் கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 213 (51) தாரக வடுகே 76, ருவந்த ஏக்கநாயக்க 41, ஹஷான் பிரபாத் 35, கீத் பெரேரா 58/5, மங்கல குமார 42/3, யோஹான் டி சில்வா 63/1, சமீர திசாநாயக்க 16/1
களுத்துறை நகர விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 34/2 (9) தறிந்து சிறிவர்தன 17*, தறிந்து துஷான் 8, மிதுன் ஜயவிக்ரம 18/1, திலின ஹேரத் 14/1