பிரீமியர் லீக்கின் ஆரம்பப் போட்டியின் முதல் நாளில் கோல்ட்ஸ் அணி முன்னிலையில்

576
SLC Premier League

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பிரீமியர் லீக் 2016/2017 பருவகால சுற்றுத்தொடரின் ‘A’ மட்டத்திற்கான முதல் போட்டி இன்று ஆரம்பமானது. இன்றைய போட்டியில் சோனகர் விளையாட்டுக் கழகமும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகமும் மோதிக் கொண்டன.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சோனகர் விளையாட்டு கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய கோல்ட்ஸ் அணியின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 5 ஓட்டங்களுக்கே ஓய்வறை திரும்பினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த காஞ்சன குணவர்தன மற்றும் ஹஷான் துமிந்து ஆகியோர் இணைந்து அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர்.

துமிந்து 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குணவர்தன 14 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 74 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து களத்தில் இணைந்த அணித்தலைவர் தில்ருவன் பெரேரா மற்றும் எஞ்சலோ ஜயசிங்க இருவரும் 130 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

எஞ்சலோ ஜயசிங்க 72 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ருவன் பெரேரா 95 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 80 ஓட்டங்கள் விளாசினார். அதன்படி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பந்து வீச்சில், சோனகர் விளையாட்டு கழகம் சார்பாக அணித்தலைவர் கோசல குலசேகர மற்றும் தனது கன்னி முதல் தர போட்டியில் விளையாடும் இளம் வீரர் உமேஷ்க மொறாயஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 318/6 (89) – தில்ருவன் பெரேரா 80, காஞ்சன குணவர்தன 74, ஹஷான் துமிந்து 72, கோசல குலசேகர 2/51, உமேஷ்க மொறாயஸ் 2/95