இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரிமியர் லீக் A நிலை கழகங்கள் பங்குபெறும் கிரிக்கெட் தொடரின் ஐந்து போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று முடிந்தது.
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்
கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக முதல் இன்னிங்ஸில் சொற்ப ஓட்டத்தில் சுருண்ட கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை நெருங்கியுள்ளது.
கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு வனின்து ஹசரங்க மற்றும் மாதவ வர்ணபுர 6ஆவது விக்கெட்டுக்கு 183 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதில் ஹசரங்க வேகமாக துடுப்பெடுத்தாடி 126 பந்துகளில் 120 ஓட்டங்களை பெற்றதோடு வர்ணபுர ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களை பெற்றார். இதன்படி கொழும்பு கிரிக்கெட் கழகம் 385 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
இந்நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 296 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த கோல்ட்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆட்ட நேர முடிவில் 97 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. குறிப்பாக கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு சதம் பெற்ற வனின்து ஹசரங்க பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இன்னும் ஒருநாள் எஞ்சியுள்ள நிலையில் கோல்ட்ஸ் அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்ப்பது கடினமாகும்.
போட்டியின் சுருக்கம்
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 89 (31.5) – பிரியமால் பெரேரா 26, கவீஷ்க அன்ஜுல 24, மனல்கர் டி சில்வா 3/13, லஹிரு கமகே 3/29, அஷான் பிரியஜான் 2/01, லக்ஷான் சதகன் 2/05
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 385/9d (96.4) – வனின்து ஹசரங்க 120, மாதவ வர்ணபுர 111ழூ, லஹிரு மதுசங்க 31, மனல்கர் டி சில்வா 30, கவீஷ்க அன்ஜுல 5/60
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 96/7 (42) – பசிந்து லக்ஷங்க 45, சங்கீத் குரே 34, வனின்து ஹசரங்க 5/21
ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் SSC
இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் கௌஷால் சில்வாவின் முச்சத இணைப்பாட்டத்தின் மூலம் ப்ளூம்வீல்ட் கழக அணிக்கு எதிராக SSC அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.
கொழும்பு, ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் ப்ளூம்பீல்ட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்களை பெற்ற நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த SSC அணிக்கு திமுத் கருணாரத்ன மற்றும் கௌஷால் சில்வா ஆரம்ப ஜோடி 305 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது. இதில் கருணாரத்ன 143 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுணையில் ஆடிய கௌஷால் சில்வா ஆட்டமிழக்காது 175 ஓட்டங்களை பெற்று இரட்டைச் சதத்தை நெருங்கியுள்ளார்.
இதன்மூலம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது SSC அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 388 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
ப்ளூம்பீல்ட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 263 (83.4) – லஹிரு ஜயகொடி 86, லஹிரு சமரகோன் 34, நிபுன் ஹக்கல்ல 25, சச்சித்ர சேனநாயக்க 7/82, கசுன் மதுசங்க 2/43
SSC (முதல் இன்னிங்ஸ்) 388/2 (85) – திமுத் கருணாரத்ன 143, கௌஷால் சில்வா 175*, சம்மு அஷான் 46*, நிபுன் கருணநாயக்க 2/59
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இராணுவ கிரிக்கெட் கழகம்
இராணுவ கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் பெற்ற சவாலான ஓட்டங்களை சமாளிக்க தமிழ் யூனியன் அணி போராடி வருகிறது.
பனாகொட, இராணுவ மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இராணுவ கழகம் தனது முதல் இன்னிங்ஸில் 331 ஓட்டங்களை குவித்தது. இந்நிலையில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தமிழ் யூனியன் 33 ஓட்டங்களுக்கு முதல் இரு விக்கெட்டுகளையும் இழந்தபோதும் மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ஆரம்ப வீரர் சிதார கிம்ஹான மற்றும் கிதுருவன் விதானகே 124 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதில் கிம்ஹான தனது சதத்தை பெற 4 ஓட்டங்கள் தேவைப்படும்போது பரிதாபமாக ஆட்டமிழந்தார். மறுமுனையில் விதானகே அரைச்சதம் பெற 4 ஓட்டங்கள் இருக்கும்போது வெளியேறினார்.
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது தமிழ் யூனியன் 5 விக்கெட்டுகளை இழந்த 208 ஓட்டங்களை பெற்றுள்ளது. அந்த அணி இராணுவ கிரிக்கெட் கழகத்தை விடவும் 123 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இராணுவ கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 331 (111.2) – லக்ஷித மதூஷன் 87, கசுன் டி சில்வா 72, ஜனித் சில்வா 54, தமித சில்வா 5/82, ஜீவன் மெண்டிஸ் 3/60
தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 208/5 (70) – சிதார கிம்ஹான் 96, கிதுருவன் விதானகே 46, லக்ஷான் மதுசங்க 2/57
BRC எதிர் NCC
கொழும்பு, NCC மைதானத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான போட்டியில் BRC அணி இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை பெறும் முனைப்புடன் நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது.
அணித்தலைவர் அஞ்சலோ பெரேராவின் சதத்தின் உதவியோடு NCC முதல் இன்னிங்ஸில் 322 ஓட்டங்களை குவித்தது. இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின் மத்திய வரிசையில் வந்த பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 94 பந்துகளில் 11 பௌண்டரிகள் மூன்று சிக்ஸர்களுடன் 104 ஓட்டங்களை விளாசினார்.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த BRC அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை எடுத்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
BRC(முதல் இன்னிங்ஸ்) – 222 (77.4) – டேஷான் டயஸ் 105, ருமேஷ் புத்திக்க 38, சுராஜ் ரன்தீவ் 24, லசித் அம்புல்தெனிய 6/59, லஹிரு குமார 2/34, தரிந்து கௌஷால் 2/64
NCC (முதல் இன்னிங்ஸ்) – 322 (64.1) – அஞ்சலோ பேரேரா 104, லஹிரு உத்ராரா 49, தரிந்து கௌஷால் 44, சுராஜ் ரன்தீவ் 3/83, ஹிமேஷ் ராமநாயக்க 2/33
BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 126/3 (35) – லிசுல லக்ஷான் 59*, ருமேஷ் புத்திக 47*, லஹிரு குமார 2/20
ராகம கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்
சஹான் நாணயக்கார மற்றும் அமில அபொன்சோவின் சுழலில் சரசென்ஸ் கழகத்தை 221 ஓட்டங்களுக்கு சுருட்டி ராகம கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.
கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ராகம அணி முதல் இன்னிங்ஸில் 266 ஓட்டங்களை பெற்றதோடு இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சரசென்ஸ் கழகம் துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்த தவறியது. அந்த அணித்தலைவர் ஹர்ஷ குரே மாத்திரம் மத்திய வரிசையில் அரைச்சத (54) ஓட்டங்களை பெற்றார்.
இதன்போது நாணயக்கார 5 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு அபொன்சோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் 45 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ராகம கிரிக்கெட் கழகம் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 266 (77.4) – ஜனித் லியனகே 130, லஹிரு திரிமான்ன 80, மொஹமட் டில்ஷான் 5/75, சாலிய சமன் 2/56
சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 221 (63.4) – ஹர்ஷ குரே 52, பிரமோத் மதுவன்த 44, அன்டி சொலமன்ஸ் 36, சஹான் நாணயக்கார 5/51, அமில பொன்சோ 3/51
ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 33/0 (5)