இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கு இடையிலான போட்டிகளில், இன்றைய ஆட்ட நாள் நிறைவின் போது சஜித்ர சேனநாயக்கவின் சிறப்பான சகலதுறை ஆட்டத்தினால் SSC அணி வலுப்பெற்றிருப்பதோடு, ஏனைய போட்டிகளில் சிலாபம் மேரியன்ஸ் கழகம் மற்றும் கொல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் ஆகியவையும் வலுவான நிலையில் உள்ளன.  

SSC எதிர் புளும் பீல்ட் கழகம்

நேற்று ஆரம்பமாகிய இந்த போட்டியில், நேற்றைய நாளின் ஆட்ட நேர முடிவின் போது, 90 ஓவர்களிற்கு  8 விக்கெட்டுகளை இழந்து 382 ஓட்டங்களை பெற்றிருந்த SSC அணி, தனது முதலாவது இன்னிங்சினை இன்று தொடர்ந்தது.

நேற்றைய ஆட்ட நேர முடிவு வரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த சஜித்ர சேனநாயக்க 50 ஓட்டங்களுடனும் கசுன் மதுசங்க 16 ஓட்டங்களுடனும் இன்றைய ஆட்டத்தினை தொடர்ந்தனர். அவர்கள் புளும் பீல்ட் பந்து வீச்சாளர்களை கலங்கடித்து 9ஆவது விக்கெட்டுக்காக 148 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

இந்த இணைப்பாட்டத்தின் காரணமாக, தமது முதல் இன்னிங்சிற்காக SSC அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 490 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த மொத்த ஓட்ட எண்ணிக்கை பெறுவதற்காக இன்றைய போட்டியில், அதிரடியினை வெளிக்காட்டியிருந்த சஜித்ர சேனாநாயக்க 107 பந்துகளிற்கு 6 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் உள்ளடங்களாக 120 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

இவருக்கு, கைகொடுத்திருந்த கசுன் மதுசங்க 50 ஓட்டங்களை பெற்று தனது இரண்டாவது முதல் தர அரைச்சதத்தினை பதிவு செய்து கொண்டார்.

இன்றைய நாளில், புளும் பீல்ட் அணிக்காக இம்ரான் கான் மற்றும் மலித் சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

பின்னர், தமது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த புளும் பீல்ட் கழக அணியில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த நிசால் பிரான்சிஸ்கோவினை தவிர ஏனையவர்கள் எதிரணியின் பந்து வீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல் போதியளவு ஓட்டங்களை பெறாமல் வெளியேறினர். இதன் காரணமாக இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது, புளும் பீல்ட் கழகம் 66 ஓவர்களிற்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மேலதிக 311 ஓட்டங்களால் பின்னடைவில் உள்ளது.

துடுப்பாட்டத்தில், புளும் பீல்ட் கழகம் சார்பாக சிறப்பாக செயற்பட்டிருந்த நிசால் பிரான்சிஸ்கோ 58 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில், ஏற்கனவே துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த சஜித்ர சேனநாயக்க மற்றும் ஜெப்ரி வன்டர்சேய் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை SSC சார்பாக கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்): 490 (113.2) – சஜித்ர சேனநாயக்க 120, மினோத் பானுக்க 97, குணதிலக்க 94, கசுன் மதுசங்க 50, மலித் டீ சில்வா 151/4, இம்ரான் கான் 85/2

புளும் பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்): 179/9(66) – நிசால் பிரான்சிஸ்கோ 58, லஹிரு ஜெயக்கொடி 23, ஜெப்ரி வன்டர்சேய் 40/4, சஜித்ர சேனநாயக்க 52/4

போட்டியின் இறுதி நாள் நாளை தொடரும்.


சிலாபம் மேரியன்ஸ் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

நேற்றைய ஆட்ட நாள் நிறைவின் போது, தமது முதல் இன்னிங்சிற்காக 397 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்து, சஜித்ர சேரசிங்க 101 ஓட்டங்களுடனும் மலிந்த புஷ்பகுமார 18 ஓட்டங்களுடனும் இருந்தவாறு சிலாபம் மேரியன்ஸ் அணி இன்றைய ஆட்டத்தினை தொடர்ந்தது.

சஜித்ர சேரசிங்க பெற்றுக்கொண்ட 151 ஓட்டங்களுடனும் ருக்ஷன் ஷெஹானின் 50 ஓட்டங்களுடனும் 113.3 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து மிகப்பெரிய மொத்த ஓட்ட எண்ணிக்கையான 552 ஓட்டங்களினை பெற்றிருந்த போது அவ்வணி தனது முதல் இன்னிங்சினை இடை நிறுத்திக்கொண்டது.

இன்றைய நாளில், இந்த பெரிய இலக்கினை அடைய மலிந்த புஷ்பகுமார 41 ஓட்டங்களினை பெற்று உதவியிருந்தார்.  பந்து வீச்சில், இன்றைய நாளில் காலி கிரிக்கெட் கழகம் சார்பாக மூன்று விக்கெட்டுக்கள் மாத்திரமே கைப்பற்றப்பட்ட நிலையில் அவற்றில் இரண்டினை சஜீவ வீரக்கோனும், மற்றையதை ரோசன் ஜயதிஸ்ஸவும் பெற்றுக்கொண்டனர்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த காலி கிரிக்கெட் கழக அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த வீரர்களும் இடது கை சுழல் வீரர் மலிந்த புஷ்பகுமாரவின் சுழலில் சிக்கி சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர். ஆரம்ப வீரர் நிலுஷன் நோனிஸின் 47 ஓட்டங்கள் மற்றும் நவிந்து விதானகேயின் சற்று நிதானமான ஆட்டம் என்பவற்றின் காரணமாக, இன்றைய ஆட்ட நேர நிறைவில் 55.1 ஓவர்களிற்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களுடன் காலி கிரிக்கெட் கழக அணி சிலாபம் மேரியன்ஸை விட 404 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.  

காலி கிரிக்கெட் கழகத்திற்கு நெருக்கடி கொடுத்த, மலிந்த புஷ்பகுமார அவரின் அணி சார்பாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இன்றைய போட்டி 8ஆவது விக்கெட்டுடன் முடிக்கப்பட்டதால், 4  ஓட்டங்களுடன் ரோசன் ஜயதிஸ்ஸ  நின்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் அணி: 552/8(113.3) – செஹான் ஜயசூரிய 168, சஜித்ர சேரசிங்க 151, ருக்சான் செஹான் 50, சஞ்சீவ வீரோக்கோன் 161/3, நிபுன காரியவசம் 92/2, ரோசன் ஜயதிஸ்ஸ 171/2

காலி கிரிக்கெட் கழகம்: 148/8(55.1) – நிலுஷன் நோனிஸ் 47, நவிந்து விதானகே 38, மலிந்து புஷ்பகுமார 65/5

போட்டியின் இறுதி நாள் நாளை தொடரும்.


சோனகர் கழகம் எதிர் BRC கழகம்

A மட்டத்திற்கான இந்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய BRC கழகம் 293 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சினை முடித்துக்கொண்ட நிலையில், சோனகர் கழகம் விக்கெட் இழப்புக்கள் ஏதும் இன்றி 47 ஓட்டங்களினை பெற்றிருந்த போது, நேற்றைய ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து, இன்று தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த சோனகர் கழகம் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ருவிந்து குணசேகர மற்றும் ப்ரிமோஷ் பெரேரா ஆகியோரின் விக்கெட்டுக்களை தொடர்ந்து, BRC  அணியின் திலகரத்ன சம்பத் மற்றும் தினுக்க ஹெட்டியாராச்சி ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக சரிவுப் பாதையில் பயணித்து 61.3 ஓவர்களில் 226 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில், ஏனையோரை விட சிறப்பாக செயற்பட்டிருந்த ருவிந்து குணசேகர 50 ஓட்டங்களினையும், ப்ரிமோஷ் பெரேரா 45 ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில், திலகரத்ன சம்பத் மற்றும் தினுக்க ஹெட்டியாராச்சி ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்களை BRC அணிக்காக கைப்பற்றினர்.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சினை ஆரம்பித்த BRC  அணி திலகரத்ன சம்பத், லசித் லக்சன் ஆகியோரின் சிறப்பான ஆரம்பத்துடன் இன்றைய இரண்டாவது நாள் ஆட்ட நேர நிறைவின் போது, 5 விக்கெட்டுக்களை இழந்து 35.1 ஓவர்களிற்கு 164 ஓட்டங்களைப் பெற்று, சோனகர் கழக அணியினை விட  231 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

துடுப்பாட்டத்தில், BRC அணிக்காக சிறப்பாக செயற்பட்ட திலகரத்ன சம்பத் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளதோடு, லசித் லக்சன் 45 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தார்.

இன்றைய ஆட்டத்தின் பந்து வீச்சில், கோசல குலசேகர, திலான் துசார, ருவிந்து குணசேகர, சஜித்ர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை சோனகர் கழகத்திற்காக கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

முதல் இன்னிங்கஸ்

BRC அணி: 293 (76.4) – லசித் லக்ஷன் 63, சானக்க விஜயசிங்க 52, ஹசேன் ராமநாயக்க 53, திலான் துஷார 54/3, நிலங்க சந்தகன்  80/3

சோனகர் அணி: 226(61.3) – ருவிந்து குணசேகர 50, ப்ரிமோஷ் பெரேரா 45, தரிந்து மெண்டிஸ் 38, திலகரத்ன சம்பத் 57/4, தினுக்க ஹெட்டியாராச்சி 73/4

இரண்டாவது இன்னிங்ஸ்

BRC அணி: 164/5(35.1) – திலகரத்ன சம்பத் 56*, லசித் லக்சன் 46, ஹர்ஷ விதான 19, திலான் துஷார 12/1

போட்டியின் இறுதி நாள் நாளை தொடரும்.


செரசன்ஸ் கழகம் எதிர் கொல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கொல்ட்ஸ் கழக மைதானத்தில் ஆரம்பாகிய இந்த போட்டியில் நேற்றைய ஆட்ட நேர நிறைவு வரை முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்ட்ஸ் கழக அணி, 321  ஓட்டங்களிற்கு 8 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

இதனையடுத்து நேற்று சதம் கடந்து களத்தில் இருந்த அஞ்சலோ ஜயசிங்க மற்றும் பிரபாத் ஜயசூரியவுடன் தமது முதலாவது இன்னிங்சினை கொல்ட்ஸ் அணி இன்று தொடர்ந்தது. அஞ்சலோ ஐயசிங்க இன்று 8 ஓட்டங்களை பெற்று 109  ஓட்டங்களுடன் போட்டியின் ஆரம்பத்திலேயே வெளியேறினார். இருப்பினும் பிரபாத் ஜயசூரியவின் நிதமான ஆட்டத்துடன் பெற்ற அவரது முதல்தர கன்னி அரைச்சதத்துடன் கூடிய 81 ஓட்டங்களுடன், கொல்ட்ஸ் கழக அணி தனது முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106.4 ஓவர்களில் 374 ஓட்டங்களை பெற்றது.

இன்றைய நாளில், கைப்பற்றப்பட்ட இரண்டு விக்கெட்டுக்களையும் முறையே சத்துரு ரந்துனு, கசுன் ராஜித்த ஆகியோர் கைப்பற்றினர்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த, செரசன்ஸ் கழக அணி ஆரம்ப வீரர்கள் இருவரினதும் அரைச்சதங்களுடன், இன்றைய போட்டி நேர முடிவில் 69 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களுடன் 151 ஓட்டங்கள் பின்தங்கி பின்னடைவில் உள்ளது.

இன்றைய துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த பிரபாத் ஜயசூரிய பந்து வீச்சிலும் சிறப்பாக செயற்பட்டு 4 விக்கெட்டுக்களை கொல்ட்ஸ் கழக அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின், இன்றைய ஆட்ட நேர நிறைவின் போது, செரசன்ஸ் அணியில் கெளசல்ய குமார 16 ஓட்டங்களுடனும், கீத் குமார ஓட்டம் ஏதும் பெறாமலும் நின்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கொல்ட்ஸ் கழக அணி: 374 (106.1) – அஞ்சலோ ஜயசிங்க 109, பிரபாத் ஜயசூரிய 81, சத்துர ரந்துனு 94/6

செரசன்ஸ் விளையாட்டு கழகம்: 223/6(69) – சங்கீத் கூரேய் 57, இரோஷ் சமரசூரிய 50, மிலிந்த சிறிவர்த்தன 45, பிரபாத் ஜயசூரிய 53/4

போட்டியின் இறுதி நாள் நாளை தொடரும்.


இராணுவப்படை எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

பணாகொட, இராணுவப்படை மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பமாகியிருந்த இந்த போட்டியில், நேற்றைய நாள் ஆட்ட நிறைவு வரை இராணுவப் படை அணி 90 ஓவர்களிற்கு  7 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இன்றைய தமது முதல் இன்னிங்சிற்கான ஆட்டத்தினை தொடர்ந்தது.

இன்றைய ஆட்டத்தில், இராணுவப்படை அணியானது மேமலதிகமாக 20 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று 97.1 ஓவர்களில் தனது சகல விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்சுக்காக 276 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணியின் ஏனையோர் சொல்லிக்கொள்ளும் படியான ஆட்டத்தினை வெளிக்காட்டாத போதிலும் லியோ பிரான்சிஸ்கோ சதம் கடந்து 103 ஓட்டங்களையும், துஷான் விமுக்தி 40 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர்.

றாகம கிரிக்கெட் கழகத்திற்காக முதல் இன்னிங்சில் அமிலோ அபோன்சோ 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த றாகம கிரிக்கெட் கழகம், ரோசன் சில்வா சதம் கடந்து பெற்ற 109 ஓட்டங்கள் மற்றும் சத்துர பீரிஸ்(62), லஹிரு மிலந்த(58) ஆகியோரின் அரைச்சதங்களுடன் 78.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 304 ஓட்டங்களை பெற்றபோது இன்றைய போட்டியின் ஆட்ட நேரம் முடிவிற்கு வந்தது.

பந்து வீச்சில், வலது கை சுழற்பந்து வீச்சாளர் நளின் பிரியதர்ஷன 5 விக்கெட்டுக்களை இராணுவப்படை அணி சார்பாக கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை இராணுவப்படை: 276 (97.1) – லியோ பிரான்சிஸ்கோ 103, துஷான் விமுக்தி 40, அமில அபொன்சோ 71/7

றாகக கிரிக்கெட் கழகம்: 304 (78.5) – ரோசன் சில்வா 109, சத்துர பீரிஸ் 62, லஹிரு மிலன்த 58, நளின் பிரியதர்ஷன 52/5, துஷான் விமுக்தி 46/2

இப்போட்டியின் இறுதி நாளளும் நாளை தொடரும்.