பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான இரண்டு போட்டிகள் இன்று நிறைவு பெற்றதுடன், ஒரு போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் 3 விக்கெட்டுகளினால் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. மற்றைய போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.
NCC கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் (சூப்பர் 8)
இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.
NCC அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக் கொடுத்த போதிலும், தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர். வேகப்பந்து வீச்சாளர் லஹிரு கமகே 4 விக்கெட்டுகளை சாய்க்க, NCC கழகம் 200 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் தொடக்க வீரர் லஹிரு உதார 40 ஓட்டங்களையும் அனுக் பெர்னாண்டோ 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அடுத்து ஆடுகளம் பிரவேசித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 293 ஓட்டங்களை குவித்து 93 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டது. இப்பருவகாலத்தில் தொடர்ந்து அசத்தி வரும் இளம் வீரர் ரொன் சந்திரகுப்த இப்போட்டியிலும் அபாரமாக துடுப்பெடுத்தாடி 108 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மற்றுமொரு இளம் வீரரான வனிது ஹசரங்க அரைச்சதம் குவித்தார். பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய மற்றும் தரிந்து கௌஷால் 4 விக்கெட்டுகள் வீதம் பதம்பார்த்தனர்.
இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த NCC கழகம் சார்பில் அஞ்சலோ பெரேரா சிறப்பாக துடுப்பெடுத்தாடி 108 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் ஜெஹான் முபாரக் 46 ஓட்டங்களையும் திமிர ஜயசிங்க 42 ஓட்டங்களையும் குவிக்க, அவ்வணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 332 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் உஸ்மான் இஷாக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி 240 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழகம் 81.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. மாதவ வர்ணபுர அரைச்சதம் ஒன்றினை பதிவு செய்ததுடன், மேலும் மூன்று வீரர்கள் 40 ஓட்டங்களை கடந்தனர். பந்துவீச்சில் தனி ஒருவராக போராடிய NCC அணியின் லசித் எம்புல்தெனிய 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் சுருக்கம்
NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 200 (49) – அனுக் பெர்னாண்டோ 43, லஹிரு உதார 40, லஹிரு கமகே 4/52
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 293 (78.2) – ரொன் சந்திரகுப்த 108, வனிது ஹசரங்க 59, தரிந்து கௌஷால் 4/71, லசித் எம்புல்தெனிய 4/110
NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 332 (85.3) – அஞ்சலோ பெரேரா 108, ஜெஹான் முபாரக் 46, திமிர ஜயசிங்க 42, உஸ்மான் இஷாக் 3/47
கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 240/7 (81.2) – மாதவ வர்ணபுர 54, வனிது ஹசரங்க 46, ரொன் சந்திரகுப்த 41, லசித் எம்புல்தெனிய 5/85
முடிவு: கொழும்பு கிரிக்கெட் கழகம் 3 விக்கெட்டுகளினால் வெற்றி.
அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்
- கொழும்பு கிரிக்கெட் கழகம் – 17.67
- NCC கழகம் – 5.21
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம் (சூப்பர் 8)
R. பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ராகம கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் தரங்க பரணவிதான மற்றும் தினித் திமோத்ய ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 318 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. தினித் 113 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்ததுடன், பரணவிதான 109 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ராகம அணி சார்பாக சதுர பீரிஸ் மற்றும் அமில அபொன்சோ தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
பதிலுக்கு களமிறங்கிய ராகம கிரிக்கெட் கழகம் எதிரணிக்கு சளைக்காது அபாரமாக துடுப்பெடுத்தாடியது. அசத்தலாக துடுப்பெடுத்தாடி சதங்களை பதிவு செய்த லஹிரு மிலந்த மற்றும் ஜனித் லியனகே முறையே 144 மற்றும் 130 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
மேலும் ரொஷேன் சில்வா 86 ஓட்டங்களையும் சமீர டி சொய்சா 52 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள, ராகம கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ஓட்டங்களை குவித்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் தமிழ் யூனியன் அணியின் சாமிக கருணாரத்ன 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 188 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. சிறப்பாக பந்துவீசிய அக்ஷு பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், தமிழ் யூனியன் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.
அவ்வணி சார்பில் மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த தினித் திமோத்ய 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 318 (101.5) – தினித் திமோத்ய 113, தரங்க பரணவிதான 109, அமில அபொன்சோ 3/43, சதுர பீரிஸ் 3/57
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 506/7d (183) – லஹிரு மிலந்த 144, ஜனித் லியனகே 130, ரொஷேன் சில்வா 86, சமீர டி சொய்சா 52, லஹிரு திரிமான 42, சாமிக கருணாரத்ன 4/120
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 146/6 (40) – தினித் திமோத்ய 51, அக்ஷு பெர்னாண்டோ 3/82
முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்
- ராகம கிரிக்கெட் கழகம் – 12.4
- தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 3.37
புள்ளிகள் அட்டவணை