கழகங்களுக்கிடையிலான முதல்தர சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் 8 சுற்றிற்கான நான்கு போட்டிகள் இன்று ஆரம்பமானதுடன், தட்டு (Plate) பிரிவிற்கான இறுதி வார போட்டிகளும் இன்று ஆரம்பமாயின.
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் (சூப்பர் 8)
புள்ளி அட்டவணையில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ள இவ்விரண்டு அணிகள் மோதிக்கொண்ட இப்போட்டி சர்ரே விலேஜ் மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. தொடக்க வீரர் மதுக லியனபதிரனகே 40 ஓட்டங்கள் குவித்து சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்த போதிலும் பந்துவீச்சில் அசத்திய லஹிரு கமகே 4 விக்கெட்டுகளை வீழ்த்த, சிலாபம் மேரியன்ஸ் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
எவ்வாறாயினும் சிறப்பாக செயற்பட்ட சிலாபம் மேரியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தமது அணிக்கு நம்பிக்கையளித்தனர். அரோஷ் ஜனோத மற்றும் மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றிருந்தது. அவ்வணி சார்பில் மாதவ வர்ணபுர ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்று களத்திலிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 213 (55) – மதுக லியனபதிரனகே 40, லஹிரு கமகே 4/65
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 122/5 (32) – மாதவ வர்ணபுர 46*, அரோஷ் ஜனோத 2/14, மலிந்த புஷ்பகுமார 2/29
SSC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம் (சூப்பர் 8)
இவ்விரண்டு அணிகள் மோதிக் கொண்ட போட்டி R. பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமானதுடன் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ராகம கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
தனித்து போராடிய அக்ஷு பெர்னாண்டோ 94 ஓட்டங்கள் குவித்த போதிலும் மற்றைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, ராகம அணி 220 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அபாரமாக பந்துவீசிய SSC அணியின் விமுக்தி பெரேரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய SSC அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 220 (68.3) – அக்ஷு பெர்னாண்டோ 94, லஹிரு மிலந்த 40, விமுக்தி பெரேரா 5/33, கசுன் மதுஷங்க 3/51
SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 54/2 (17)
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் NCC கழகம் (சூப்பர் 8)
P. சரவணமுத்து மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்றதுடன், போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது.
அசத்தலாக பந்துவீசி அவ்வணியை திணறடித்த NCC கழகத்தின் லசித் எம்புல்தெனிய 6 விக்கெட்டுகளை பதம்பார்க்க, கோல்ட்ஸ் அணி 192 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் பிரியமல் பெரேரா அதிகபட்சமாக 43 ஓட்டங்களை குவித்தார்.
பதிலுக்கு களமிறங்கிய NCC கழகம் இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. தொடக்க வீரர் ரமிந்து டி சில்வா அரைச்சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் தில்ருவன் பெரேரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 192 (54) – பிரியமல் பெரேரா 43, லசித் எம்புல்தெனிய 6/63
NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 130/4 (34) – ரமிந்து டி சில்வா 51, அஞ்சலோ பெரேரா 42*, தில்ருவன் பெரேரா 3/31
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம் (சூப்பர் 8)
இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான சூப்பர் 8 போட்டி SSC மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிரணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் 174 ஓட்டங்களுக்கே சுருண்டது. தனி ஒருவராக அணியை வழிநடத்திய சாமிக கருணாரத்ன 61 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இராணுவ அணி சார்பாக யசோத மெண்டிஸ் 4 விக்கெட்டுக்களையும், சீக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடுகளம் பிரவேசித்த இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் பொறுப்பான மற்றும் நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. அவ்வணியின் இரண்டு ஆரம்ப வீரர்களும் அரைச்சதம் கடக்க, இராணுவ அணி 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 157 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 174 (43) – சாமிக கருணாரத்ன 61, யசோத மெண்டிஸ் 4/55, சீக்குகே பிரசன்ன 3/46
NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 157/1 (45) – லியோ பிரான்சிஸ்கோ 63*, லக்ஷித மதுஷான் 53
BRC கழகம் எதிர் பதுரேலிய விளையாட்டுக் கழகம் (தட்டு பிரிவு)
தட்டு பிரிவிற்கான இப்போட்டி பனாகொட இராணுவ மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய BRC அணி ருமேஷ் புத்திகவின் சதம் மற்றும் ஹர்ஷ விதானவின் அரைச்சத்தின் உதவியுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 348 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதுரேலிய அணியின் துவிந்து திலகரத்ன மற்றும் திலேஷ் குணரத்ன தலா 3 விக்கெட்டுகள் வீதம் சாய்த்தனர்.
போட்டியின் சுருக்கம்
BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 348/8 (90) – ருமேஷ் புத்திக 133, ஹர்ஷ விதான 61, திலேஷ் குணரத்ன 3/71, துவிந்து திலகரத்ன 3/83
புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (தட்டு பிரிவு)
கோல்ட்ஸ் கழக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் செரசன்ஸ் அணியை எதிர்த்து புளூம்பீல்ட் அணி போட்டியிட்டது.
நாணய சுழற்சியில் வென்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. புளூம்பீல்ட் அணியின் வீரர்கள் சிறப்பான ஆரம்பங்களை பெற்றுக் கொண்ட போதிலும் அவ்வணியினால் சவாலான ஓட்ட இலக்கை பெற இயலவில்லை. சுராஜ் ரந்திவ் 5 விக்கெட்டுகளை பதம்பார்க்க, புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் யெரொன் டி அல்விஸ் அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செரசன்ஸ் அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்று முன்னிலையில் உள்ளது. மிலிந்த சிறிவர்தன மற்றும் அணித்தலைவர் ஹர்ஷ குரே முறையே 61 மற்றும் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.
போட்டியின் சுருக்கம்
புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 207 (56) – யெரொன் டி அல்விஸ் 35, சுராஜ் ரந்திவ் 5/65, கசுன் ராஜித 3/71
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 169/3 (34) – மிலிந்த சிறிவர்தன 61*, ஹர்ஷ குரே 47*, மலித் டி சில்வா 3/38
சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம் (தட்டு பிரிவு)
மற்றுமொரு தட்டு பிரிவிற்கான போட்டி BRC மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சோனகர் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
தனி ஒருவராக போராடிய பபசர வடுகே 83 ஓட்டங்களை குவித்த போதிலும் மற்றைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஓய்வறை திரும்ப, சோனகர் விளையாட்டுக் கழகம் 175 ஓட்டங்களுக்கு சுருண்டது. BRC அணியின் ரொஷான் ஜயதிஸ்ஸ 3 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொண்டார்.
தொடர்ந்து களமிறங்கிய காலி கிரிக்கெட் கழகம் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறைவு செய்து கொண்டது. அணித்தலைவர் தமித ஹுனுகும்புர அரைச்சதம் குவித்து ஆட்டமிழந்தார்.
போட்டியின் சுருக்கம்
சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 175 (68.2) – பபசர வடுகே 83, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/40
காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 75/1 (19) – தமித ஹுனுகும்புர 50
நாளை போட்டிகளின் இரண்டாவது தினமாகும்.