இலங்கை பிரீமியர் லீக் சம்பியனாக சிலாபம் மேரியன்ஸ்

221

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரில் நடப்பு சம்பியன் SSC அணியை 264 ஓட்டங்களால் வீழ்த்தி சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றது.

தொடரை தீர்மானிக்கும் கடைசி சுப்பர் 8 போட்டியாக SSC மற்றும் சிலாபம் மேரியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று (18) கொழும்பு CCC மைதானத்தில் நிறைவடைந்தது.

இதில் 540 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நான்காவது மற்றும் கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த SSC அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டை காத்துக் கொண்டு விளையாடத் தடுமாறினர். குறிப்பாக இலங்கை டெஸ்ட் அணி வீரர் திமுத் கருணாரத்ன 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு சாமர கபுகெதர மற்றும் மிலிந்த சிறிவர்தன போன்ற இலங்கை தேசிய அணிக்காக விளையாடிய அனுபவ வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் வெளியேறினர்.

மத்திய வரிசையில் வந்த ஷம்மு அஷான் 83 ஓட்டங்களை பெற்றபோதும் அது SSC அணியின் தோல்வியை தவிர்க்க போதுமாக இருக்கவில்லை.

குறிப்பாக சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக சகல துறையிலும் திறமையை வெளிக்காட்டி வரும் ஷெஹான் ஜயசூரிய 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். அவர் இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சுகளிலும் மொத்தம் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு துடுப்பாட்டத்தில் இரண்டு இன்னிங்சுகளிலும் முறையே 146 மற்றும் 88 ஓட்டங்களை பெற்று தேசிய அணி தேர்வாளர்களை தனது பக்கம் பார்க்க வைத்துள்ளார்.

கடைசி வார பிரீமியர் லீக் போட்டிகளில் துறைமுக அதிகாரசபை, NCC வெற்றி

அதேபோன்று அணித்தலைவர் மலிந்த புஷ்பகுமார மற்றும் புலின தரங்க தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கடந்த வியாழக்கிழமை (15) ஆரம்பமான தீர்க்கமான இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சிலாபம் மேரியன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 372 ஓட்டங்களை பெற்றதோடு சச்சித்ர சேனநாயக்க தலைமையிலான SSC அணி தனது முதல் இன்னிங்சில் 232 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் அணி 399 ஓட்டங்களை பெற்றது.

கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமான பிரீமியர் லீக் A நிலை தொடரில் சிலாபம் மேரியன்ஸ் அணி இலங்கை முதல்தர கிரிக்கெட்டில் மிக வலுவான ஓர் அணியாக தனது திறமையை வெளிக்காட்டியது. ஆரம்ப சுற்று போட்டிகளில் அந்த அணி 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்றதோடு சுப்பர் 8 சுற்றில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டியது.

அதேபோன்று இம்முறை பிரீமியர் லீக் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதல் இரு இடங்களிலும் சிலாபம் மேரியன்ஸ் வீரர்களான சச்சித்ர சேரசிங்க (901) மற்றும் ஓஷத பெர்னாண்டோ (817) ஆகியோர் காணப்படுகின்றனர். மறுபுறம் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக சிலாபம் மேரியன்ஸ் அணித்தலைவர் மலிந்த புஷ்பகுமார உள்ளார். அவர் இந்த தொடரில் 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 372 (103.5) – ஷெஹான் ஜயசூரிய 146, அஷேன் சில்வா 105, சச்சித்ர சேரசிங்க 30, ரசித் உபமால் 24, ருக்ஷான் ஷெஹான் 20*, அக்தாப் காதர் 4/79, சச்சித்ர சேனநாயக்க 4/103

SSC (முதல் இன்னிங்ஸ்) – 232 (66.2) – ஷம்மு அஷான் 72, சாமர கபுகெதர 63, கவிந்து குலசேகர 47, ஷெஹான் ஜயசூரிய 4/48, திக்ஷில டி சில்வா 3/27, மலிந்த புஷ்பகுமார 2/80

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 399 (105.3) – ஷெஹான் ஜயசூரிய 88, ருக்ஷான் ஷெஹான் 78, ரசித் உபமால் 88*, சச்சித்ர சேரசிங்க 37, ஓஷத பெர்னாண்டோ 31, தக்ஷில டி சில்வா 31, சச்சித்ர சேனநாயக்க 4/134, ஆகாஷ் சேனாரத்ன 4/72

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 275 (72.2) – சம்மு அஷான் 83, சரித் அசலங்க 45, சச்சித்ர சேனநாயக்க 45, ஷெஹான் ஜயசூரிய 4/65, புலின தரங்க 3/11, மலிந்த புஷ்பகுமார 3/112  

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 264 ஓட்டங்களால் வெற்றி