இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக்கின் இந்த பருவகாலத் தொடரில் ‘A’ மட்ட அணிகளுக்கான நான்கு போட்டிகள் இன்று ஆரம்பமாகின.
SSC எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தமிழ் யூனியன் அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது. அபாரமான ஆரம்பத்தினை பெற்றுக் கொண்ட SSC அணி சார்பில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன (149) மற்றும் தனுஷ்க குணதிலக (117) சதங்கள் விளாசினர். இவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டிற்காக 201 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இறுதி ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தமையினால், இன்றைய ஆட்ட நேர முடிவின்போது SSC அணி 5 விக்கெட்டுகளை இழந்து 375 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
SSC: 375/5 (90) – திமுத் கருணாரத்ன 149, தனுஷ்க குணதிலக 117, சரித் அசலங்க 31*, தசுன் ஷானக 27*
இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் BRC
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற BRC அணி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதன்படி களமிறங்கிய இராணுவ அணி சார்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசேல குணரத்ன ஆட்டமிழக்காது 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லக்ஷித மதுஷான் 67 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சில் BRC அணியின் விகும் சஞ்சய 4 விக்கெட்டுகளையும், தினுக ஹெட்டியாரச்சி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். அதன்படி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது, இராணுவ விளையாட்டுக்கு கழகம் 8 விக்கெட்களை இழந்து 304 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
இராணுவ விளையாட்டுக் கழகம் – 304/8 (92) – அசேல குணரத்ன 146, லக்ஷித மதுஷான் 67, விகும் சஞ்சய 4/67, தினுக ஹெட்டியாரச்சி 3/92
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்
இப்போட்டியிலும் நாணய சுழற்சியில் வென்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகமும் களத்தடுப்பினையே தெரிவு செய்தது. அவ்வணியின் சிறப்பான பந்து வீச்சினை எதிர்கொள்ள இயலாத கொழும்பு கிரிக்கெட் கழகம் ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வனிது ஹசரங்க (52) மற்றும் சச்சித் பதிரன (59) ஆகியோர் அரைச்சதம் கடந்தனர். பந்து வீச்சில் அசத்திய கசுன் ராஜித 59 ஓட்டங்களை வழங்கி 6 விக்கெட்டுகளை பதம்பார்க்க, கொழும்பு கிரிக்கெட் கழகம் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து ஆடுகளம் பிரவேசித்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம், இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இரோஷ் சமரசூரிய ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களை பெற்று களத்திலிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் : 195 (52.2) – சச்சித் பதிரன 59, வனிது ஹசரங்க 52, கசுன் ராஜித 6/59
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 101/3 (27) – இரோஷ் சமரசூரிய 48*
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அணித்தலைவர் மஹேல உடவத்த 69 ஓட்டங்கள் குவித்தார். எனினும் ஏனைய வீரர்கள் அதிகம் பிரகாசிக்கத் தவறினர். எனவே, அவ்வணி தமது இன்னிங்ஸ் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பந்து வீச்சில் திறமையை வெளிக்காட்டிய அலங்கார அசங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து களமிறங்கிய பதுரெலிய விளையாட்டுக் கழகம் இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 1 விக்கெட் இழப்பிற்கு 16 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 235 (79.3) – மஹேல உடவத்த 69, அலங்கார அசங்க 5/102, நுவன் கருணாரத்ன 3/35
பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 16 /1 (7)
இன்று இடம்பெற்ற அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடர்ந்து இடம்பெறும்.