இலங்கை கிரிக்கெட் சபை நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், நடைபெற இருக்கும் 2016/17 பருவகாலத்திற்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்படும் போட்டி அமைப்பு முறைகளை வெளியிட்டது.
நேற்றைய அறிவிப்பின் பிரகாரம் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள பிரீமியர் லீக் சுற்றுத்தொடரில் 24 கழக அணிகள், 2 நிரல்களாகப் பிரிப்பட்டு போட்டிகள் இடம்பெறும்.
இதில் A நிரலில் 14 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு 3 நாட்களுக்கு போட்டிகள் இடம்பெறும். குழு மட்டப் போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட 8 அணிகள் ‘சுபர் 8′ சுற்றுக்குத் தெரிவாகும். சுபர் 8 சுற்றுக்கு தெரிவு செய்யப்படாத 6 அணிகளும் ‘பிளேட்‘ கிண்ணத்திற்காக 3 நாள் போட்டித்தொடரில் விளையாடும். பிளேட் கிண்ண சுற்றில் இறுதி இடத்தை பிடிக்கும் அணி B நிரலுக்கு தள்ளப்படும்.
சென்ற வருடம் நடைபெற்ற SLC பிரீமியர் லீக் சுற்றுத்தொடரினை தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் கைப்பற்றியது. துறைமுக அதிகாரசபை கழகம் சென்ற வருடம் B நிரலுக்கு தள்ளப்பட்டதோடு ‘SLC இமெர்ஜிங்‘ சுற்றுத்தொடரை வெற்றி கொண்ட பர்கர் ரிக்ரியேஷன் கழகம் A நிரலுக்கு முன்னேறியது.
சென்ற வருடம் இமெர்ஜிங் சுற்றுத்தொடர் என்ற பெயரில் நடாத்தப்பட்ட போட்டித்தொடர் இம்முறை பிரீமியர் லீக் சுற்றுத்தொடரின் B நிரலாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 10 அணிகள் 3 நாட்கள் இடம்பெறும் போட்டிகளில் விளையாடி, அதில் வெற்றி பெறும் அணி A நிரலுக்கு முன்னேறும்.
இம்முறை முதல் தர அந்தஸ்தினைப் பெற்ற 24 அணிகளும் 20 வீரர்கள் கொண்ட குழாமை வைத்திருக்கலாம். சென்ற வருடம் 14 அணிகள் மட்டுமே முதல் தர அந்தஸ்தை பெற்றிருந்தமை நினைவு கூறத்தக்கது.
ப்ரீமியர் லீக் கிண்ணத் தொடர் முடிவடைந்த பின்னர், முறையே SLC ஒருநாள் மற்றும் இருபது ஓவர்கள் கொண்ட சுற்றுத்தொடர்கள் ஆரம்பமாகும். இந்த தொடர்களில் 24 முதல்தர அணிகள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகளில் விளையாடும். இக்குழுக்களில் முதலிரு இடங்களையும் பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு தெரிவாகும். அந்த தொடரில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெறும்.
A நிரலில் உள்வாங்கப்படும் கழகங்கள்
தமிழ் யூனியன் கழகம், SSC, கோல்ட்ஸ் கழகம், NCC, மூர்ஸ் விளையாட்டுக் கழகம், ராகம கிரிக்கெட் கழகம், ராணுவப்படை விளையாட்டுக் கழகம், CCC, பதுரெலிய கழகம், காலி கிரிக்கெட் கழகம், ப்ளூம் பீல்ட் கழகம், சிலாபம் மரியன்ஸ் கிரிக்கெட் கழகம், சரசென்ஸ் கிரிக்கெட் கழகம், BRC.
B நிரலில் உள்வாங்கப்படும் கழகங்கள்
இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம், லங்கன்ஸ் கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம், பொலிஸ் விளையாட்டுக் கழகம், விமானப்படை விளையாட்டுக் கழகம், களுத்தறை நகர கிரிக்கெட் கழகம், களுத்தறை பொதுசன கிரிக்கெட் கழகம், நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம், குருநாகலை இளைஞர் கிரிக்கெட் கழகம்.
கழக போட்டித்தொடர்கள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் 2016/17 SLC மாகாணங்களுக்கிடையிலான சுற்றுத் தொடர் ஆரம்பமாகும். 4 அணிகள் பங்கு பெறும் இத்தொடரில் 4 நாள் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் இருபது ஓவர் போட்டித் தொடர்கள் நடைபெறும்.
- மேல் மாகாணம் (கொழும்பு) – சொந்த மைதானம் – R.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம்.
- தென் மாகாணம் (காலி) – சொந்த மைதானம் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம்.
- மத்திய மாகாணம் (கண்டி) –சொந்த மைதானம் – பல்லேகெல்ல சர்வதேச கிரிக்கெட் மைதானம்.
- வட மத்திய மாகாணம் (தம்புள்ளை) – சொந்த மைதானம் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம்.