இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெற்றன.

இன்று ஆரம்பித்த ‘A’ மட்ட அணிகளுக்கான போட்டியொன்றில் காலி கிரிக்கெட் கழகமும் நடப்பு சம்பியன் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகமும் மோதிக் கொண்டதுடன், நேற்று ஆரம்பமான ‘B’ மட்டத்திற்கான போட்டியொன்றில் பாணதுறை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து களுத்துறை நகர கழகம் போட்டியிட்டது.

காலி கிரிக்கெட் கழகம்  எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற காலி கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய டில்ஹான் குரே ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களையும் ஷாலிக கருணாநாயக்க 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, காலி கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. தமிழ் யூனியன் அணி சார்பில் ஜீவன் மெண்டிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் – 247/4 (83) – டில்ஹான் குரே 81*, ஷாலிக கருணாநாயக்க 45, ஜீவன் மெண்டிஸ் 2/56


பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

நேற்றைய தினம் பாணதுறையில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாணதுறை விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் மூவர் அரைச்சதம் கடக்க, பாணதுறை விளையாட்டுக் கழகம் 353 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் களுத்துறை அணியின் மங்கள குமார 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த களுத்துறை நகர கழகம், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் கயான் சிரிசோமவின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 166 ஓட்டங்களுக்கே சுருண்டது. அற்புதமாக பந்து வீசிய கயான் 53 ஓட்டங்களை வழங்கி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

களுத்துறை அணி சார்பில் மங்கள குமார மற்றும் ரிஷித் உபமல் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொண்டனர். இதன்படி 187 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய களுத்துறை நகர கழகம் இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இம்முறையும் சிறப்பாக பந்து வீசிய கயான் சிரிசோம 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், களுத்துறை அணி சார்பில் தரிந்து சிறிவர்தன ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களுடன் களத்திலுள்ளார்.

நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 353 (80) – சாமர சில்வா 58, சரித புத்திக 55*, சஞ்சய சதுரங்க 50, மொஹமட் ஷில்மி 43, மங்கள குமார 4/100

களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 166 (61.1) – மங்கள குமார 41, ரிஷித் உபமல் 41, கயான் சிரிசோம 7/53

களுத்துறை நகர கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 112/3 (41) – தரிந்து சிறிவர்தன 51*, கயான் சிரிசோம 3/34