கழகங்களுக்கிடையிலான முதற்தர சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டத்திற்கான ஐந்து போட்டிகள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றன.
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்
நேற்றைய தினம் முதலில் துடுப்பெடுத்தாடிய சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 291 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், பதிலுக்கு புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டங்களை பெற்றிருந்தது.
எனினும் இன்றைய தினம் அசத்தலாக பந்துவீசிய மலிந்த புஷ்பகுமார அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த, புளூம்பீல்ட் அணி 136 ஓட்டங்களுக்கு சுருண்டது. மலிந்த புஷ்பகுமார 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அத்துடன் சச்சித்ர சேரசிங்க 3 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார். துடுப்பாட்டத்தில் அதீஷ நாணயக்கார அதிகபட்சமாக 32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
155 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் அணி, ஷெஹான் ஜயசூரியவின் அபார இரட்டை சதத்தின் உதவியுடன் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து துரிதகதியில் 379 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஷெஹான் ஜயசூரிய 194 பந்துகளில் 26 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது 218 ஓட்டங்களை விளாசினார். மேலும் அணித்தலைவர் மஹேல உடவத்த 63 ஓட்டங்களையும் சச்சித்ர சேரசிங்க 55 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தனர்.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 291 (60.5) – அரோஷ் ஜனோத 80, ஷெஹான் ஜயசூரிய 49, மஹேல உடவத்த 38, லஹிரு பெர்னாண்டோ 6/93, வினோத் பெரேரா 2/30, மலித் டி சில்வா 2/48
புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 136 (53.2) – அதீஷ நாணயக்கார 32, லஹிரு ஜயகொடி 21, மலிந்த புஷ்பகுமார 5/78, சச்சித்ர சேரசிங்க 3/29
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 379/3 (67) – ஷெஹான் ஜயசூரிய 218*, மஹேல உடவத்த 63, சச்சித்ர சேரசிங்க 55, ஷஷ்ரிக்க புஸ்ஸேகொல்ல 2/110
SSC கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்
காலி கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்ட 128 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் முகமாக துடுப்பெடுத்தாடிய SSC கழகம், நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 121 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முதல் நாளை போன்றே தனது சிறப்பான துடுப்பாட்டத்தை தொடர்ந்த மினோத் பானுக 21 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 148 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மேலும் இளம் வீரர் சரித் அசலங்க 76 ஓட்டங்களையும் தசுன் ஷானக 50 ஓட்டங்களையும் குவிக்க, SSC அணி 92.5 ஓவர்களில் 379 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. காலி கிரிக்கெட் கழகம் சார்பாக பந்துவீச்சில் ருவன் ஹேரத் மற்றும் ரொஷான் ஜயதிஸ்ஸ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
251 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த காலி கிரிக்கெட் கழகம் இம்முறை சற்று முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மின்ஹாஜ் ஜலீல் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களை குவிக்க, அவ்வணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 128 (59.1) – டில்ஹான் குரே 50, தரிந்து ரத்நாயக்க 4/25, சச்சித்ர சேனநாயக்க 2/30, விமுக்தி பெரேரா 2/35
SSC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 379 (92.5) – மினோத் பானுக 148, சரித் அசலங்க 76, தசுன் ஷானக 50, ருவன் ஹேரத் 3/44, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/93
காலி கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 131/2 (25) – மின்ஹாஜ் ஜலீல் 79*
கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம்
நேற்றைய தினம் கொழும்பு கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் BRC கழகம் விக்கெட் இழப்பேதுமின்றி 56 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இன்றைய தினம் தமது முதலாவது இன்னிங்சுக்காக தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய BRC அணி, திலகரத்ன சம்பத்தின் சதம் (123) மற்றும் லசித் லக்ஷான் (61), ஹர்ஷ விதான (51) ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 407 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் அனைத்து மேல்வரிசை வீரர்களும் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் ஷாலுக சில்வா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 326 (72.1) – டில்ஷான் முனவீர 191, தினுக ஹெட்டியாரச்சி 6/137, அண்டி சொலமன்ஸ் 3/70
BRC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 407/7 (104) – திலகரத்ன சம்பத் 123, லசித் லக்ஷான் 61, ஹர்ஷ விதான 51, லிசுல லக்ஷான் 45, ரமேஷ் புத்திக 44, ஷாலுக சில்வா 3/86
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம்
முதலில் துடுப்பெடுத்தாடிய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 358 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதோடு முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இன்றைய தினம் தமது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய இராணுவ விளையாட்டுக் கழகம் சார்பாக தொடக்க வீரர் லக்ஷித மதுஷான் சிறப்பான துடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவர் ஆட்டமிழக்காது 142 ஓட்டங்கள் பெற்றுக் கொள்ள, இராணுவ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 285 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
அத்துடன் டில்ஷான் டி சொய்சா 69 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சுராஜ் ரந்திவ் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
போட்டியின் சுருக்கம்
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 358 (87.2) – மிலிந்த சிறிவர்தன 121, உமேஷ் கருணாரத்ன 49, ஹர்ஷ குரே 43, விராஜ் புஷ்பகுமார 3/72, துஷான் விமுக்தி 3/118
இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 285/5 (90) – லக்ஷித மதுஷான் 142*, டில்ஷான் டி சொய்சா 69, சுராஜ் ரந்திவ் 3/56
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்
8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 301 ஓட்டங்களுடன் முதல் தினத்தை நிறைவு செய்து கொண்ட கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 366 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
சதீர சமரவிக்ரம (96) மற்றும் அகில தனஞ்சய (92) சதங்களை தவறவிட்டனர். அத்துடன் கீழ்வரிசை வீரர் பிரபாத் ஜயசூரிய சிறப்பாக துடுப்பெடுத்தாடி 79 ஓட்டங்களை குவித்தார். அகில தனஞ்சய மற்றும் பிரபாத் ஜயசூரிய 9 ஆவது விக்கெட்டிற்காக 157 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பந்துவீசில் பிரகாசித்த அமில அபொன்சோ 85 ஓட்டங்களை வழங்கி 7 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொண்டார்.
இதனை தொடர்ந்து ஆடுகளம் பிரவேசித்த ராகம கிரிக்கெட் கழகம் இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்றிருந்தது. அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்த உதார ஜயசுந்தர ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்றிருந்தார். அணித்தலைவர் லஹிரு திரிமான 70 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
போட்டியின் சுருக்கம்
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 366 (113.4) – சதீர சமரவிக்ரம 96, அகில தனஞ்சய 92, பிரபாத் ஜயசூரிய 79, விஷாத் ரந்திக 53, அமில அபொன்சோ 7/85
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 217/3 (64) – உதார ஜயசுந்தர 101*, லஹிரு திரிமான 70, நிசல தாரக 2/38
நாளை போட்டிகளின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.