பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்ட அணிகளுக்கான போட்டிகளில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழக அணிகள் இலகு வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டன. இன்று முடிவடைந்த மற்றைய இரண்டு போட்டிகளும் சமநிலையில் நிறைவடைந்தன.
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்
இவ்விரு அணிகளுக்குமிடையிலான போட்டி நேற்று முன்தினம்(2) கட்டுநாயக்கவில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி, துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அணித்தலைவர் மஹேல உடவத்த 69 ஓட்டங்கள் குவித்தார். எனினும் ஏனைய வீரர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பேதும் கிடைக்காததால், அவ்வணி 235 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் திறமையை வெளிக்காட்டிய அலங்கார அசங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய பதுரெலிய விளையாட்டுக் கழகத்தை, மலிந்த புஷ்பகுமார (6/41) மற்றும் மதுக லியனபதிரனகே (4/28) தமது சிறப்பான பந்துவீச்சினால் துவம்சம் செய்ய, அவ்வணி 113 ஓட்டங்களுக்கே சுருண்டது
முதல் இன்னிங்சில் 122 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட சிலாபம் மேரியன்ஸ் அணி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மஹேல உடவத்த 73 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், விதுர அதிகாரி மற்றும் ருக்ஷான் ஷெஹான் முறையே 45 மற்றும் 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இரண்டாவது இன்னிங்சிலும் பந்துவீச்சில் அசத்திய அலங்கார அசங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்கு 385 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இம்முறையும் அபாரமாக பந்துவீசிய மலிந்த புஷ்பகுமார (4/47) மற்றும் மதுக லியனபதிரனகே (6/36) தமக்கிடையே அனைத்து விக்கெட்டுகளையும் பகிர்ந்து கொள்ள, பதுரெலிய அணி 93 ஓட்டங்களுக்கே சுருண்டது. அவ்வணி சார்பில் பிரமுத் ஹெட்டிவத்த அதிகபட்சமாக 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
மலிந்த புஷ்பகுமார மற்றும் மதுக லியனபதிரனகே, இப்போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகள் வீதம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 235 (79.3) – மஹேல உடவத்த 69, அலங்கார அசங்க 5/102, நுவன் கருணாரத்ன 3/35
பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 113 (44) – ஷெஹான் பெர்னாண்டோ 25, மலிந்த புஷ்பகுமார 6/41, மதுக லியனபதிரனகே 4/28
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 262/7 (59.2) – மஹேல உடவத்த 73, விதுர அதிகாரி 45, ருக்ஷான் ஷெஹான் 41, அலங்கார அசங்க 4/104
பதுரெலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 93 (25.1) – பிரமுத் ஹெட்டிவத்த 30, மதுக லியனபதிரனகே 6/36, மலிந்த புஷ்பகுமார 4/47
முடிவு: சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 291 ஓட்டங்களினால் வெற்றி.
போட்டியில் அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்
- சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 16.485
- பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 2.73
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்தது. அவ்வணியின் சிறப்பான பந்து வீச்சினை எதிர்கொள்ள இயலாத கொழும்பு கிரிக்கெட் கழகம் ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வனிது ஹசரங்க (52) மற்றும் சச்சித் பதிரன (59) ஆகியோர் அரைச்சதம் கடந்தனர். பந்து வீச்சில் அசத்திய கசுன் ராஜித 59 ஓட்டங்களை வழங்கி 6 விக்கெட்டுகளை பதம்பார்க்க, கொழும்பு கிரிக்கெட் கழகம் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
எதிரணிக்கு சளைக்காத கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி செரசன்ஸ் அணியை 173 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர். துடுப்பாட்டத்தில் தனித்து போராடிய இரோஷ் சமரசூரிய 69 ஓட்டங்கள் குவித்தார். பந்துவீச்சில் லஹிரு கமகே மற்றும் லக்ஷான் சந்தகன் 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
22 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட கொழும்பு கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்தது. சிறப்பாக பந்துவீசிய சதுர ரந்துனு 5 விக்கெட்டுகளை பதம்பார்க்க, கொழும்பு கிரிக்கெட் கழக அணியினர் 208 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர். மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த வனிது ஹசரங்க 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இதன்படி, செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு 231 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இம்முறையும் பந்துவீச்சில் அசத்திய கொழும்பு கிரிக்கெட் கழக வீரர்கள், தமது அணிக்கு இலகு வெற்றியை பெற்றுத் தந்தனர்.
லக்ஷான் சந்தகன் மற்றும் அஷான் பிரியன்ஜன் 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த, செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் செரசன்ஸ் அணியின் ஹஷான் குரே அதிகபட்சமாக 31 ஓட்டங்களைக் குவித்தார்.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 195 (52.2) – சச்சித் பதிரன 59, வனிது ஹசரங்க 52, கசுன் ராஜித 6/59
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 173 (52) – இரோஷ் சமரசூரிய 69, லஹிரு கமகே 3/38, லக்ஷான் சந்தகன் 3/38
கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 208 (46.3) – வனிது ஹசரங்க 64, சதுர ரந்துனு 5/66
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 121 (37.2) – ஹஷான் குரே 31, லக்ஷான் சந்தகன் 3/28, அஷான் பிரியன்ஜன் 3/22
முடிவு: கொழும்பு கிரிக்கெட் கழகம் 109 ஓட்டங்களினால் வெற்றி.
போட்டியில் அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்
- கொழும்பு கிரிக்கெட் கழகம் – 16.015
- செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 3.47
SSC எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்
பிரபல அணிகளான SSC மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான போட்டி P. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தமிழ் யூனியன் அணி முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்தது. 2ஆவது விக்கெட்டிற்காக 201 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்ட அணித்தலைவர் திமுத் கருணாரத்ன (149) மற்றும் தனுஷ்க குணதிலக (117) சதங்கள் விளாசினர்.
அவர்கள் தவிர, சரித் அசலங்க மற்றும் தசுன் ஷானக அரைச்சதங்கள் கடந்ததுடன், கீழ்வரிசை வீரர் ஜெப்ரி வெண்டர்சே ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இதன்படி, SSC அணியானது 503 என்ற பாரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக் கொண்டது.
அடுத்து களமிறங்கிய தமிழ் யூனியன் அணியின் துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கித்ருவன் விதானகே 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 125 ஓட்டங்கள் குவித்தார்.
அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய தினுக் விக்ரமநாயக 86 ஓட்டங்களையும் தரங்க பரணவிதான 66 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 460 ஓட்டங்களைக் குவித்தது. பந்துவீச்சில் SSC அணியின் ஜெப்ரி வெண்டர்சே 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
சொற்ப ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய SSC அணி, ஆட்டம் நிறுத்தப்படும் போது 1 விக்கெட் இழப்பிற்கு 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
போட்டியின் சுருக்கம்
SSC (முதல் இன்னிங்ஸ்) – 503 (127.4) – திமுத் கருணாரத்ன 149, தனுஷ்க குணதிலக 117, சரித் அசலங்க 57, தசுன் ஷானக 51, ஜெப்ரி வெண்டர்சே 48*
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 460 (121.5) – கித்ருவன் விதானகே 125, தினுக் விக்ரமநாயக 86, தரங்க பரணவிதான 66, ஜெப்ரி வெண்டர்சே 5/110
SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 51/1 (13.4)
முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
போட்டியில் அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்
- SSC – 11.255
- தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 3.1
இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் BRC
பனாகொட இராணுவ மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற BRC அணி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
அதன்படி களமிறங்கிய இராணுவ அணி 316 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பிரகாசித்த இலங்கை அணி வீரர் அசேல குணரத்ன 158 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இவரைத் தவிர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லக்ஷித மதுஷான் 67 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அசத்திய விகும் சஞ்சய 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய BRC அணி, தமது முதல் இன்னிங்சில் 219 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அணித்தலைவர் ருமேஷ் புத்திக 92 ஓட்டங்களையும் லிசுர லக்ஷான் 60 ஓட்டங்களையும் குவித்தனர். பந்துவீச்சில் விராஜ் புஷ்பகுமார 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
97 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த இராணுவ அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசேல குணரத்ன 69 ஓட்டங்களையும், கீழ்வரிசை வீரர் சஞ்சிக ரித்ம 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் தினுக ஹெட்டியாரச்சி 63 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி BRC அணிக்கு 300 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் போட்டி நிறைவடையும் போது, அவ்வணி 36 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களையே பெற்றிருந்தது. இம்முறையும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ருமேஷ் புத்திக மற்றும் லிசுர லக்ஷான் 40 ஓட்டங்களை கடந்தனர். அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
போட்டியின் சுருக்கம்
இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 316 (98.1) – அசேல குணரத்ன 158, லக்ஷித மதுஷான் 67, விகும் சஞ்சய 6/73, தினுக ஹெட்டியாரச்சி 3/98
BRC (முதல் இன்னிங்ஸ்) – 219 (67.4) – ருமேஷ் புத்திக 92, லிசுர லக்ஷான் 60, விராஜ் புஷ்பகுமார 4/57
இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 202/9 (64.2) – அசேல குணரத்ன 69, சஞ்சிக ரித்ம 56, தினுக ஹெட்டியாரச்சி 4/63
BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 192/6 (36) – ருமேஷ் புத்திக 44, லிசுர லக்ஷான் 41
முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
போட்டியில் அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்
- இராணுவ விளையாட்டுக் கழகம் – 12.19
- BRC – 3.955
NCC எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்
நேற்றைய தினம் விக்கெட் இழப்பேதுமின்றி 9 ஓட்டங்களைp பெற்றிருந்த புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 435 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் இன்று களமிறங்கியது.
எனினும் சிறப்பாக பந்துவீசிய NCC அணியின் பந்துவீச்சாளர்கள், புளூம்பீல்ட் அணியை 200 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர். தனியொருவராக போராடிய ஆலோக அமரசிறி 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது 87 ஓட்டங்களைக் குவித்தார்.
அதன்படி 243 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட NCC அணி, எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. இம்முறை சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம், இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 1 விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
லஹிரு ஜயகொடி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களைப் பெற்று களத்திலுள்ளதுடன், புளூம்பீல்ட் அணியானது NCC அணியை விட 149 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
NCC (முதல் இன்னிங்ஸ்) – 443/9 (84) – நிரோஷன் திக்வெல்ல 188, பர்வீஸ் மஹ்ரூப் 67, சந்துன் வீரக்கொடி 64, உபுல் தரங்க 61, மலித் டி சில்வா 5/83
புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 200 (64.4) – ஆலோக அமரசிறி 87*, தரிந்து கௌஷால் 3/73
புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 94/1 (27) – லஹிரு ஜயகொடி 56*