இலங்கையின் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரில் B பிரிவுக்கான சில போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 134 ஓட்டங்களால் பின்னிலையுற்றுள்ள களுத்துறை நகர கழகம் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. எனினும் ஏனைய போட்டிகள் அனைத்தும் சமநிலையில் முடிவறக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன.
லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்
இப்போட்டியில் முதலின்னிங்சுக்காக களமிறங்கிய லங்கன் கிரிக்கெட் கழகம், மதுரங்க சொய்சாவின் இரட்டை சதத்துடன் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 446 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இரண்டாவது நாளாக இன்று களமிறங்கிய அவ்வணி ஆட்டத்தை இடைநிறுத்தி களுத்துறை நகர கழக அணியை துடுப்பாடுமாறு பணித்தது.
இதன்படி, தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய களுத்துறை நகர கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82.3 ஓவர்களில் 289 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தறிந்து சிறிவர்தன 52 ஓட்டங்களையும் யோஹான் டி சில்வா 68 ஓட்டங்களையும் கூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டனர்.
பின்னர் 157 ஓட்டங்களால் பின்னிலையுற்ற அவ்வணியை மீண்டும் துடுப்பாடுமாறு பணித்தது லங்கன் கிரிக்கெட் கழகம். மீண்டும் இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய களுத்துறை நகர கழகம் முதலிரண்டு விக்கெட்டுக்களை சொற்ப ஓட்டங்களுக்கு இழந்தது. அதன் பின்னர் களமிறங்கிய ரித்திஷ் உபமல் மற்றும் நிபுன கமகே ஆகியோர் இன்றைய நாள் ஆட்டம் நிறைவடையும்பொழுது ஆட்டமிழக்காமல் முறையே 11, 3 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
சிறப்பாக பந்து வீசிய நவீன் கவிக்கர 76 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். சரித் பெர்னாண்டோ மற்றும் ரஜீவ வீரசிங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
எட்டு விக்கெட்டுக்கள் எஞ்சிய நிலையில் இன்னும் 134 ஓட்டங்களால் பின்னிலையில் உள்ள களுத்துறை நகர கழகம் போட்டியை சமநிலை செய்வதற்கு நாளைய தினம் கூடிய ஓட்டங்களை பெற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது.
போட்டியின் சுருக்கம்
லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 446/9 (91) – மதுரங்க சொய்சா 203, லால் குமர 107, அனீக் ஹசன் 56, யொஹான் டி சில்வா 137/5, மங்கல குமார 120/3
களுத்துறை நகர கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 289 (82.3) – யொஹான் டி சில்வா 68, தரிந்து சிறிவர்தன 52, நவீன் கவிக்கர 4/76,சரித் பெர்னாண்டோ 21/2, ரஜீவ வீரசிங்க 98/2
களுத்துறை நகர கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 23/2 (7) – ரித்திஷ் உபமல் 11*,புன கமகே 3*,பெபியன் பெர்னாண்டோ 1௦/1, ரஜீவ வீரசிங்க 6/1
இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம்
85 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் இரண்டாவது நாளுக்காக இன்று களமிறங்கிய குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 3௦7 ஓட்டங்களை பெற்று 1௦7 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
அவ்வணி சார்பாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹஷான் பிரபாத் 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அச்சிற எறங்க மற்றும் லக்க்ஷன் பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அதனை, தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் 23.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 68 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது. சிறப்பாக பந்து வீசிய அனுராத ராஜபக்ஷ 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுக்கள் எஞ்சிய நிலையில் மேலும் 39 ஓட்டங்களால் பின்னிலை வகிக்கிறது.
போட்டியின் சுருக்கம்
விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 200 (61.5) – புத்திக்க சந்தருவன் 70, லஹிரு லக்மால் 44, திலின ஹேரத் 66/7
குருநாகல இளையோர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 307 (91.4) – ஹசான் பிரபாத் 81*, தர்ஷன மகாவத்த 44, அச்சிற எறங்க 3/48, லக்க்ஷன் பெர்னாண்டோ 59/3
விமானப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 68/3 (23.4) – சகான் ஜெயவர்தன 29, அனுராதா ராஜபக்ஷ 7/2
இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் களுத்துறை பௌதிக கலாசார கழகம்
இப்போட்டியில் 258 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸ் இலக்காகக் கொண்டு களமிறங்கிய களுத்துறை பௌதிக கலாசார கழகம் முதல் நாள் ஆட்ட நேர நிறைவின்போது 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களால் பின்னிலையுற்று காணப்பட்டது. இன்றைய நாள் தொடர்ந்து களமிறங்கிய அவ்வணி 75.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக ரசிக்க பெர்னாண்டோ மற்றும் கிரிஷான் திணிந்து முறையே 44, 40 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தனர். சிறப்பாக பந்து வீசிய டிலன்க ஆவர்த் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் சார்பாக 52 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதனை தொடர்ந்து இரண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது மூன்று விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்களை பெற்றிருந்தது. முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ரமேஷ் செல்வராஜ் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது இரண்டாம் இன்னிங்சுக்காக 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
அந்த வகையில் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 146 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 258 (66) – சமீர சந்தமால் 79, அஷான் ரணசிங்க 37, புத்திக்க ஹசரங்க 33, குசல் எதுசுரிய 33, ரமேஷ் செல்வராஜ் 4/58
களுத்துறை பௌதிக கலாசார கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 224 (75.5) – ரசிக்க பெர்னாண்டோ 44, கிருஷ்ணன் திணிது 40, டிலன்க ஆவர்த் 4/52, டினுஷ்க மிலன் 3/52
இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 112/3 (33) – புத்திக்க ஹசரங்க 55 *, குசல் எதுசுரிய 39 *, ரமேஷ் செல்வராஜ் 32/2
பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்
நேற்று தமது முதல் இன்னிங்சுக்காகக் களமிறங்கிய இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் நேற்றைய நாள் ஆட்ட நிறைவின் போது 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.
இன்று அவ்வணி மேலும் 287 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பெற வேண்டிய நிலையில் களமிறங்கி, 69.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 21௦ ஓட்டங்களை மாத்திரமே பெற்று 96 ஓட்டங்களால் பின்னிலையுற்றது.
பாணதுறை விளையாட்டுக் கழகம் சார்பாக சிறந்த பந்து வீச்சினை வெளிப்படுத்திய கயான் சிரிசோம 95 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பாணதுறை விளையாட்டுக் கழகம் இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 23 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சுக்காக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த சமிக்கற எதிரிசிங்க இரண்டாம் இன்னிங்சுக்காக முதல் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தியமை குறிப்பிடதக்கது.
எனவே, 7 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் 159 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ள பாணதுறை அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. நாளை போட்டியின் இறுதி நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
பாணதுறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 306 (83) – ஹசந்த பெர்னாண்டோ 84, சஞ்சய சத்துரங்க 51, நிசல் ரந்திக 44, சமிக்கற எதிரிசிங்க 101/5
இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) : 210 (69.1) – இஷான் ரங்கன 75, சமிக்கற எதிரிசிங்க 40, கயான் சிரிசோம 7/95 லசித் பெர்னாண்டோ 19/2
பாணதுறை விளையாட்டுக் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) : 63/3 (23) – நிசல் ரந்திக்க 27, சமிக்கற எதிரிசிங்க 3௦/3